குடியரசு தலைவர் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் யஷ்வந்த் சின்ஹா

ஜூலை 18ஆம் தேதி நடைபெற இருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில், ஆளும் பாஜக கூட்டணி வேட்பாளரான திரவுபதி முர்முவை எதிர்த்து, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். நாடாளுமன்ற வளாகத்தில், தேர்தல் அதிகாரியும், மாநிலங்களவைச் செயலருமான பி.சி.மோடியிடம் அவர் வேட்புமனுவைச் சமர்ப்பித்தார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக எம்.பி. ஆ.ராசா, தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோர் உடனிருந்தனர்.

இவர்கள் தவிர, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் பானர்ஜி, சவுகதா ராய், திமுக எம்.பி. திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, ராஷ்ட்ரிய லோக் தளம் தலைவர் ஜெயந்த் சவுத்ரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தெலங்கானா ராஷ்டிர சமிதியின் கே.டி.ராமாராவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் மிசா பாரதி, புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் என்.கே.பிரேமச்சந்திரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முகமது பஷீர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிரபுல் படேல் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி, அம்பேத்கர் சிலைகளுக்கு யஷ்வந்த் சின்ஹா மரியாதை செலுத்தினார்.

இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, “குடியரசுத் தலைவர் தேர்தலில் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு அளிப்பதில், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளோம். நாங்கள் தனி நபரை ஆதரித்தாலும், உண்மையான மோதல் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையில்தான் நடக்கிறது. ஒன்று, கோபம் மற்றும் வெறுப்பைக் கொண்ட ஆர்எஸ்எஸ் சித்தாந்தம். மற்றொன்று அனைத்து எதிர்க்கட்சிகளின் கருணை” என்றார்.

யஷ்வந்த் சின்ஹா கூறும்போது, “இந்த குடியரசுத் தலைவர் தேர்தல் சர்வ அதிகாரம், சுதந்திரம் என்ற இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான போர் ஆகும்” என்றார்.

84 வயதாகும் யஷ்வந்த் சின்ஹா, பிஹாரைச் சேர்ந்தவர். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான இவர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் கேபினட் அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். கடந்த 2018-ல் பாஜகவை விட்டு விலகிய அவர், புதிய கட்சியைத் தொடங்கினார். பின்னர், 2021 மார்ச் மாதம் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸில் இணைந்து, அக்கட்சியின் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்தார். குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்படும் முன், அவர் திரிணமூல் கட்சியை விட்டு விலகினார்.

ஆம் ஆத்மி கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), உட்கட்சிப் பூசலில் சிக்கியுள்ள சிவசேனா ஆகிய முக்கிய எதிர்க்கட்சிகள் சின்ஹாவின் வேட்புமனு தாக்கலின்போது பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read previous post:
0a1b
மன்னிப்பு கேட்டார் நடிகர் மாதவன்!

இஸ்ரோவின் செவ்வாய் விண்கலத்தை பஞ்சாங்கத்தை பரிசீலித்துதான் வெற்றிகரமாக அனுப்பினார்கள் என்ற தன் கருத்துக்கு மாதவன் வருத்தம் தெரிவித்து இருக்கிறார். ஆங்கிலத்தில் Almanac என்ற சொல்லை பஞ்சாங்கம் என்று

Close