நான் நடித்திருக்க வேண்டிய படம் ‘எமன்’!” – விஜய் சேதுபதி

வர்த்தக உலகில் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்து இருக்கும் விஜய் ஆண்டனியின் அடுத்த திரைப்படம் ‘எமன்’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று சென்னை ‘சத்யம்’ திரையரங்கில் விமர்சையாக நடைபெற்றது.

இந்த விழாவில், விஜய் சேதுபதி, எஸ்.ஏ.சந்திரசேகர், ‘கோபுரம் பிலிம்ஸ்’ அன்புச்செழியன், ‘ஸ்டுடியோ கிரீன்’ ஞானவேல் ராஜா, ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ்’ மதன், ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா, ‘ஐங்கரன்’ கருணாஸ், காட்ராகட பிரசாத், ‘கே.ஆர். பிலிம்ஸ்’ சரவணன், தயாரிப்பாளர் நந்தகோபால், இயக்குநர் கிருத்திகா உதயநிதி, இயக்குநர் சசி, இயக்குநர் அறிவழகன், இயக்குநர் என்.ஆனந்த் (இந்தியா – பாகிஸ்தான்), இயக்குநர் மகிழ்திருமேனி, இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, தனஞ்ஜேயன் கோவிந்த், இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம், நடிகர் கலையரசன், நடிகை ரூபா மஞ்சரி மற்றும் ‘எமன்’ படத்தின் படக்குழுவினராகிய தயாரிப்பாளர் ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ ராஜு மகாலிங்கம், விஜய் ஆண்டனி, மியா ஜார்ஜ், இயக்குநர் ஜீவா ஷங்கர், நடிகர் தியாகராஜன், படத்தொகுப்பாளர் வீர செந்தில்ராஜ், ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்பராயன், நடன இயக்குநர் ஷெரிப், பாடலாசிரியர் முத்தமிழன், நடிகர் சார்லி மற்றும் நடிகர் சுவாமிநாதன் (லொள்ளு சபா) மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

எஸ்.ஏ.சந்திரசேகர், ‘கோபுரம் பிலிம்ஸ்’ அன்புச்செழியன் ஆகியோர் ‘எமன்’ படத்தின் இசை குறுந்தட்டை வெளியிட, விஜய் சேதுபதி பெற்றுக்கொண்டார்.

விழாவில் விஜய் சேதுபதி பேசுகையில், “நான் நடித்திருக்க வேண்டிய படம் ‘எமன்’. இப்படத்தின் கதையை இயக்குனர் ஜீவா சங்கர் முதலில் என்னிடம் தான் சொன்னார். அந்த நேரத்தில் என் கைவசம் பல படங்கள் இருந்ததால் ‘எமன்’ படத்தில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

தற்போது, விஜய் ஆண்டனி அந்த கதையில் நடித்திருக்கிறார். அந்த கதைக்கு கனகச்சிதமாக பொருந்தி இருப்பது விஜய் ஆண்டனி தான் என்பதை நினைக்கும்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது.

தொடர்ந்து வித்தியாசமான கதைகளையே தேர்வு  செய்யும் விஜய் ஆண்டனி இப்போதும் ஒரு சிறப்பான கதையையே தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். இந்த கதையை தேர்ந்தெடுத்த அவரது  தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன்.

முதல்முறையாக இந்த படத்தில் விஜய் ஆண்டனி நடனம் ஆடி இருக்கிறார். அதை பார்ப்பதற்காக நான் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறேன்” என்றார்.

“எமன்’ படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்த தியாகராஜன் சார் அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயமாக எங்களின் ‘எமன்’ திரைப்படம் ஒவ்வொரு ரசிகரின் எதிர்பார்ப்பையும் முழுவதுமாக பூர்த்தி செய்யும்” என்றார் விஜய் ஆண்டனி.

“அற்புதமான காட்சிகளும், நெஞ்சை வருடிச் செல்லும் இசையும், ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கியம். அந்த வகையில், ஒரு தயாரிப்பாளராக எனக்கு கதாநாயகனே இசையமைப்பாளராகவும், இயக்குனரே ஒளிப்பதிவாளராகவும் கிடைத்திருப்பதை எண்ணி மகிழ்ச்சி கொள்கிறேன். ‘எமன்’ படத்தின் கதை முற்றிலும் விஜய் ஆண்டனிக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது என்று நான் உறுதியாகவே சொல்லுவேன். அவரோடு எங்களின் ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் கைகோர்த்து இருப்பது பெருமையாக இருக்கிறது” என்றார் ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ ராஜு மகாலிங்கம்.