ரைட்டர் – விமர்சனம்

நடிப்பு: சமுத்திரக்கனி, இனியா, ஹரிகிருஷ்ணன், கவின் ஜெ.பாபு, சுப்பிரமணிய சிவா, கவிதா பாரதி மற்றும் பலர்

இயக்கம்: ஃப்ராங்ளின் ஜேக்கப்

தயாரிப்பு: பா.இரஞ்சித்

’போலீஸ் ஸ்டோரி’ ஜானர் எனப்படும் ‘காவலர் கதை’ ரகத்தில் இரண்டு வகைகள் உண்டு. காவல்துறை அதிகாரியை சூப்பர் ஹீரோ அளவுக்கு சாகச நாயகனாகக் காட்டும் கதை ஒரு வகை. இன்னொன்று வகை, அதிகார துஷ்பிரயோகம் செய்து எளிய மக்களை வதைக்கும் கொடூரமான காவல்துறை அதிகாரி பற்றிய கதை. இந்த ‘ரைட்டர்’ படம் இரண்டாவது வகையைச் சேர்ந்தது. என்றாலும் பொத்தம் பொதுவாக எல்லா காவல்துறையினரும் கெட்டவர்கள், மோசமானவர்கள், அதிகாரத்துக்காக எதையும் செய்வார்கள் என்ற பிம்பத்தைக் கட்டமைக்காமல், அத்துறையிலும் நல்லவர்கள், தன் உயிரைக்கூட பொருட்படுத்தாமல் உதவுபவர்கள் இருக்கிறார்கள் என்ற உண்மையையும் சேர்த்துச் சொல்லும் படம்.

 கதை என்னவென்றால், திருவெறும்பூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் அந்தஸ்தில் ரைட்டர் பணியில் இருக்கிறார் தங்கராஜ் (சமுத்திரக்கனி). குற்றச்சாட்டின் பேரில் அல்லது சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்படுகிறவர்களை அடித்து வதைக்காத மனிதாபிமானி அவர். மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு வேலை செய்யும் அவரின் ஒரே கனவு காவலர்களுக்காக ஒரு யூனியன் (சங்கம்) அமைப்பது. அதற்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார். அதனால் உயர்அதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகி, சென்னைக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்யப்படுகிறார்.

சென்னையில் அவருக்கு ரைட்டர் வேலை கொடுக்காமல், காவல்துறை உயர்அதிகாரியின் (கவின் ஜெ.பாபு) உத்தரவின் பேரில் சட்டத்துக்குப் புறம்பாக ஒரு லாட்ஜில் ரகசியமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி பி.எச்.டி மாணவன் தேவகுமாரனை (ஹரிகிருஷ்ணன்) காவல் காக்கும் வேலை கொடுக்கிறார்கள். அப்போது தங்கராஜ் தற்செயலாகக் கொடுக்கும் திட்டத்தால், தேவகுமாரன் பொய் வழக்கில் கைது செய்யப்படுகிறார். குற்ற உணர்ச்சியில் தவிக்கும் தங்கராஜ், தேவகுமாரனை பொய் வழக்கில் இருந்து மீட்கப் போராடுகிறார். இதில் தங்கராஜ் வெற்றி பெற்றாரா, இல்லையா? காவலர்களுக்கு சங்கம் அமைக்கும் அவரது கனவு நனவானதா, இல்லையா? என்பது மீதிக்கதை.

தங்கராஜ் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளார். கதாபாத்திரத்துக்குத் தேவையான கச்சிதமான நடிப்பில் கவர்கிறார். முக பாவனைகள் அனைத்திலும் நடிப்பின் அத்தனை உணர்வுகளையும் பக்குவமாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஹரிகிருஷ்ணனின் கதறலை அவ்வளவு சீக்கிரமாய் கடந்துவிடமுடியாது. அப்பாவி இளைஞனுக்கே உரிய அத்தனை அறிகுறிகளையும் நடிப்பில் காட்டி பரிதாபப்பட வைக்கிறார். விடுதலையாகிவிடமாட்டாரா என்று ஏங்க வைக்கும் அளவுக்கு கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.

துணை கமிஷனராக (டி.சி.) வரும் கவின் ஜெ.பாபு எரிச்சல்மிக்க எதிர்மறை தன்மைக்குரிய பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார்.

0a1b

இனியாவின் கதாபாத்திரம் மிக முக்கியமானது. கதையின் கனத்துக்காக அவர் குதிரையேற்றப் பயிற்சி பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. உயர்அதிகாரியின் ஜீப்பை மறித்து பின்னிரு கால்களில் நிற்கும் குதிரையின் மேல் அவர் அமர்ந்து கம்பீரம் காட்டுவது அட்டகாசம்.

‘மேற்குத்தொடர்ச்சி மலை’ ஆண்டனி படத்தின் ஓட்டத்தில் போகிற போக்கில் காமெடி சிக்ஸர்களை அடித்து தூள் கிளப்புகிறார். போலீஸை நக்கலடிப்பதும், எகத்தாளமாகப் பேசுவதும், கொஞ்சமும் பயப்படாமல் கெத்து காட்டுவதும் சிரிப்புக்கு உத்தரவாதம்.

ஹரிகிருஷ்ணனின் அண்ணனாக வரும் சுப்பிரமணிய சிவா உணர்வுபூர்வமான நடிப்பில் மிளிர்கிறார். கவிதா பாரதி காவல்துறை அதிகாரிக்கே உரிய கம்பீரத்தையும், அதேசமயம் பம்மும் விதத்தையும் அழகாக நகல் எடுத்திருக்கிறார். அவரின் உடல் மொழி அட்டகாசம்.

ஜி.எம்.சுந்தர், மகேஸ்வரி, லிஸி ஆண்டனி, ‘வத்திக்குச்சி’ திலீபன், போஸ் வெங்கட், முத்துராமன் உள்ளிட்டோர் நடிப்பில் குறை வைக்கவில்லை.

காவல்துறையினரை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கும் அறிமுக இயக்குனர் பிராங்களின் ஜேக்கப், காவல்துறையில் இருக்கும் அரசியல், பணிச்சுமை, சாதிபேதம் என அனைத்தையும் அழுத்தமாக சொல்லியிருக்கிறார். நடிப்புக் கலைஞர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். அதிகாரத்தில் இல்லாதவர்கள் அனைவரும் அடியாட்கள் என்ற வசனம் தியேட்டரில் கைத்தட்டல் வாங்குகிறது. பிராங்களினின் நேர்த்தியான திரைக்கதைக்கு பெரிய பாராட்டுகள்.

கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். கதையோடு பயணம் செய்து நம்மையும் கதைக்குள் இழுத்துச் சென்றிருக்கிறார். பிரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம்.

‘ரைட்டர்’ – இதுவரை தமிழ்ச்சினிமா பார்க்காத மிக முக்கியமானவன்.