பிரபல பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்

பிரபல பின்னணிப்பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று (26-12-2021) காலமானார். அவருக்கு வயது 73.

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்த மாணிக்க விநாயகம், பிரபலமான கலை குடும்பத்தை சேர்ந்தவர். இவர் பிரபல பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி.ராமையா பிள்ளையின் இளைய மகன் ஆவார்.  தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

விக்ரம், தனுஷ், சூர்யா, விஜய், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியவர் மாணிக்க விநாயகம். கடைசியாக தனுஷ் நடித்த ’கர்ணன்’ படத்தில் மஞ்சநத்தி பாடலை பாடியிருக்கிறார்.

மாணிக்க விநாயகத்தின் ஹிட் பாடல்கள்:

கண்ணுக்குள்ள கெளுத்தி – தில்

ஏல இமயமலை – தவசி

விடை கொடு – கன்னத்தில் முத்தமிட்டால்

அர்ஜுனரு வில்லு – கில்லி

வண்டி வண்டி – ஜெயம்

அருவா மீசை – தூள்

சின்ன வீடா வரட்டுமா – ஒற்றன்

காதல் வந்தால் சொல்லி அனுப்பு – இயற்கை

புண்ணாக்குன்னு சொன்னா – அருள்

கொக்கு பற பற – சந்திரமுகி

கட்டு கட்டு கீர கட்டு – திருப்பாச்சி

அய்யய்யோ – பருத்தி வீரன்

நானே இந்திரன் – சிங்கம்

தேரடி வீதியில் – ரன்

மன்னார்குடி கலகலக்க – சிவப்பதிகாரம்

சுப்பம்மா சுப்பம்மா – ரோஜா கூட்டம்

இவர், பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். ’திருடா திருடி’ திரைப்படத்தில் நடிகர் தனுஷின் தந்தை கதாபாத்திரத்தில் இவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து ’தில்’, ’யுத்தம் செய்’, ’வேட்டைக்காரன்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களிலும் மாணிக்க விநாயகம் நடித்துள்ளார்.

இவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.