“எம்.ஜி.ஆர். என்னை கூப்பிட்டு பாராட்டினார்”: படவிழாவில் வால்டர் தேவாரம் பேச்சு!

தயாரிப்பாளர் ஸ்ருதி திலக் 11:11 Productions சார்பில் தயாரிக்க சிபிராஜ் நடிக்கும்  “வால்டர்” படத்தை புதுமுக இயக்குநர் U.அன்பு இயக்கியுள்ளார். சத்யராஜின்  திரைவாழ்வில் புகழ்மிக்க படம்  “வால்டர் வெற்றிவேல்”. தற்போது “வால்டர்”தலைப்பில் சிபிராஜ் காவல் அதிகாரியாக கலக்கியுள்ளார்.  திரில்லர் பாணியில் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற பிரபலங்கள் பேசிய பேச்சு விவரம்:

w8

ஓய்வுபெற்ற டிஜிபி வால்டர் தேவாரம்:-

எனக்கு சினிமா அவ்வளவாக தெரியாது. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் மூணாறு. அங்கிருந்தபோது சினிமா பற்றி எதுவும் தெரியாது. நான் சென்னை வந்த பிறகு எம் ஜி.ஆர் ஆட்சியில் அதிகாரியாக இருந்தேன். ஒரு பிரச்சனையின்போது இந்திரா காந்தி தமிழகம் வந்திருந்தார். எங்கும் அவரது கூட்டம் நடத்த முடியாதபோது என் தலைமையிலான பாதுகாப்பில் சென்னையில் கூட்டம் நடத்தப்பட்டது. எம்.ஜி.ஆர் என்னை கூப்பிட்டு பாராட்டினார். இது மாதிரி நிறைய சம்பவங்கள் இருக்கிறது. சிவாஜியை நேரில் பார்த்திருக்கிறேன். சத்யராஜை எனக்கு நெருக்கமாக தெரியும். சிபியை சின்ன வயதில் பார்த்துள்ளேன். இங்கு இயக்குநர் வாசு வந்திருக்கிறார். அவர் வால்டர் வெற்றிவேல் படம் எடுத்தபோது என்னை வந்து சந்தித்தார். இங்கு நான் வந்ததில் மகிழ்ச்சி. படத்தின் டிரெய்லர், பாடல்கள் நன்றாக இருந்தது. இப்படம் வெற்றி பெற எனது வாழ்த்துகள் நன்றி.

இயக்குநர் P. வாசு:-

ரஜினி க்ளாப் அடிக்க, பிரபு சார் கேமரா ஆன் பண்ண, விஜயகாந்த் இயக்க வால்டர் வெற்றிவேல் படம் ஆரம்பித்தது. நேற்று நடந்தது போல் இருக்கிறது. அப்போது சிபிராஜ் சிறுவனாக இருந்தார். இப்போது அவர் வால்டர் படத்தில் நடித்துள்ளார். சத்யராஜ் நாயகனாக நடிக்க நிறைய கஷ்டப்பட்டார். அது எனக்கு தெரியும். என்னைப் பொறுத்த வரை தமிழகத்து அமிதாப் சத்யராஜ் தான். சிபிராஜ் நடிக்க வருகிறார் என சொன்னபோது அவர் நிறைய கூச்ச சுபாவம் கொண்டவர் எப்படி நடிக்க போகிறார் என நினைத்தேன் ஆனால் தன்னை செதுக்கி கொண்டு இப்போது கலக்கி வருகிறார். இது போலீஸ் குடும்பம் எடுத்த படம் நன்றாகதான் இருக்கும். இது கண்டிப்பாக வெற்றி படமாகவே இருக்கும். எல்லோருக்கும் வாழ்த்துகள்.

நடிகர் பாவா செல்லத்துரை:-.

திலகவதி ஐ.பி.எஸ். மேடத்திற்கு நான் மூத்த மகன் போன்றவன். இப்படத்தில் நடிக்க கூப்பிட்டபோது சந்தோஷமாக வந்தேன். மிக நேர்த்தியாக அனைவரும் வேலை செய்தனர். ஒரே நேரத்தில் கச்சிதமாக வேலை பார்க்கும் இவர்களுடனும் கச்சிதம் என்றால் என்ன என கேட்கும் மிஷ்கின் படத்திலும் வேலை செய்தேன். இருவரும் தங்கள் பார்வையில் சினிமாவை வித்தியாசமாக அணுகினார்கள். அது சுவாரஸ்யமாக இருந்தது. இந்த கலைஞர்கள் கடுமையாக உழைத்துள்ளார்கள். இப்படம் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும். கலைக்கு வெற்றி வசூல் எல்லாம் முக்கியமில்லை. காலம் கடந்தும் எத்தனை பேர் மனதில் நிற்கிறது என்பது தான் முக்கியம். வால்டர் படம் அப்படிபட்டதாக இருக்கும். வாழ்த்துகள்.

நடிகை ரித்விகா:-

இந்த படத்தில் பங்கு கொண்டது மகிழ்ச்சி. இயக்குநர் இப்படத்திற்காக எனக்கு தான் முதலில் கதை சொன்னார். எனக்கு பிறகு தான் சிபிராஜ் வந்தார். இந்த படத்தில் என் கேரக்டர் நன்றாக வந்துள்ளது. படம் வெற்றியடைய வாழ்த்துகள்.

நடிகை ஷனம் ஷெட்டி:-

வால்டர் தேவாரம் சார் வந்தது மிகப்பெரிய ஆசிர்வாதம் போன்று இருந்தது. இயக்குநர் அன்பு எனக்கு ஒரு அற்புதமான கதாப்பாத்திரம் தந்துள்ளார். இதுவரை இவ்வளவு ஸ்டைலீஷாக செய்தது இல்லை. இப்படம் பணியாற்றியது குடும்ப நண்பர்களுடன் இருந்தது போன்றே இருந்தது. இப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெறும் நன்றி.

இயக்குநர்  அருண்குமார்:-

எல்லா ஹீரோக்களுக்கும் போலீஸ் கதை என்பது அவர்கள் வாழ்வில் முக்கியமானது. போலீஸ் கதையில் நடிக்க அனைத்து ஹீரோக்களும் ஆசைப்படுவார்கள். இந்தப் படம் சிபிராஜுக்கு வெற்றிப்படமாக அமையும். படத்தின் டிரெய்லர் நன்றாக இருக்கிறது. படமும் எல்லோருக்கும் பிடிக்கும்படி இருக்கும்  என்று நினைக்கிறேன். படம் வெற்றி பெற வாழ்த்துகள்

இயக்குநர் ஷாம் ஆண்டம்:-..

இயக்குநர் அன்பு ஹீரோயின்களுக்கு பிடித்த இயக்குநர். என்னிடம் ஏற்கனவே இந்தக்கதையை சொல்லியுள்ளார்.
சிபிராஜ் பள்ளியில் எனக்கு சீனியர். அப்போது குண்டாக இருப்பார்.இப்போது செம ஃபிட்டாக மாறி மாஸாக இருக்கிறார். வெற்றிக்காக அவர் எவ்வளவு பாடுபடுகிறார் என்பது தெரியும். “வால்டர் வெற்றிவேல்” எல்லோருக்கும் பிடித்த படம். “வால்டர்” படமும் கண்டிப்பாக ஜெயிக்கும். இயக்குநர் நன்றாக இயக்கியுள்ளார். எல்லோருக்கும் வாழ்த்துகள்.

இயக்குநர் அறிவழகன்:-

வால்டர் வெற்றிவேல் படம் வந்தபோது நான் ஸ்கூலில் படித்து கொண்டிருந்தேன். போலீஸ் படங்களுக்கு எல்லாம் இலக்கணம் போன்றது அந்தப்படம். “வால்டர்” எனும் தலைப்பே மிடுக்கானது. வால்டர் தேவாரம் அவர்கள் வந்து வாழ்த்தியது பெரும் பாக்கியம். சத்யராஜ் வந்திருந்தால் இந்த மேடை இன்னும் அழகாக இருந்திருக்கும். “வால்டர்” பட விஷுவல்கள் அட்டகாசமாக இருக்கிறது படம் வெற்றி பெற வாழ்த்துகள்.

நடிகர் நட்டி சுப்பிரமணியம்:-

சேவையா செய்ய வேண்டியது வியாபாரமா மாறினா என்ன ஆகும்னு சொல்ற படம் தான் வால்டர். 11.11 Productions படங்கள் தரமான படங்கள் செய்வார்கள் எனத் தெரியும். இந்த கதாப்பாத்திரம் கௌதம் மேனன் செய்ய வேண்டியது, அவர் விட்டு போனது,எனக்கு கிடைத்தது.  அதற்காக அவருக்கு நன்றி. என் ரோல் என்ன என்பதை, படம் வந்தவுடன் பார்த்து சொல்லுங்கள் எல்லோருக்கும் நன்றி.

நடிகர் சார்லி:-

சினிமாவில் அப்பா இருந்தால் மகன் வரும்போது அவருடன் ஒப்பீடு  வந்துகொண்டே இருக்கும். சிபிராஜ் அதிலிருந்து விலகி பெரும் கலைஞனாக வந்திருக்கிறார். இயக்குநர் அன்பு 100 படம் செய்த இயக்குநர் போல் இருந்தார். நன்றாக இயக்கியுள்ளார். ஒரு படத்தின் தயாரிப்பாளராக பிரபு திலக் நல்ல படம் செய்வேன் எனும் ஆற்றலை கண்டேன் அவருக்கு வாழ்த்துகள் படம் வெற்றி பெற வாழ்த்துகள் நன்றி.

இசையமைப்பாளர் தர்ம பிரகாஷ்:-

நான் நிறைய நன்றி சொல்ல வேண்டியது இருக்கிறது. இப்படி ஒரு தயாரிப்பாளர் கிடைத்தது எங்கள் அனைவருக்கும் பெரும் ஆசிர்வாதம். கேட்டது எல்லாமே கிடைக்கும். எனது படக்குழு நண்பர்கள் அனைவரும் பேருதவியாக இருந்தார்கள். படம் கண்டிப்பாக வெற்றி பெறும் நன்றி.

நாயகி ஷ்ரின் கான்ஞ்வாலா:-

இயக்குநர் அன்புவிற்கு நன்றி. அவர் தான் இந்தப்படத்தில் நடிக்க வைத்தார். இந்தப்படத்தில் பங்கு கொண்டது மிகப்பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் மிஷ்கின்:-

அன்பு எனும் பெயர் வைத்துள்ள இயக்குநருக்கு நன்றி. சமூகத்தின் லாஜிக் பிரச்சனைகளில் சிக்கியிருந்தேன். அன்பின் அழைப்பால் திலகவதி மேடம் அழைத்ததால் இங்கு வந்தேன். நான் உதவி இயக்குநராக இருந்த காலத்தில் நட்டி இந்தியாவின் மிக முக்கியமாக இருந்தவர். இன்று மிகச்சிறந்த நடிகராக மாறி நிற்கிறார் வாழ்த்துகள். சத்யராஜ் ஒரு மிகச்சிறந்த நடிகர் வெற்றி பெற்ற பின் சமூகத்திற்காக பேசுபவர். அவரது மகன் சிபிராஜ் தன்னை தானே வடிவமைத்து கொண்டிருக்கிறார். நான் விரைவில் அவருக்கு படம் செய்வேன். வால்டர் எனும் பெயரே பலம் வாய்ந்தது. நிறைய கதைகள் அந்தப் பெயர் பின்னால் இருக்கிறது. கண்டிப்பாக இந்தப்படம் ஜெயிக்கும் வாழ்த்துகள் அனைவருக்கும்.

நடிகர் சிபிராஜ்:

இன்று இந்த விழா நடப்பது பெருமையாக இருக்கிறது. அப்பாவின் வாழ்வில் மிகப்பெரிய வெற்றிபடம் வால்டர் வெற்றிவேல். அந்த பெயரை வைத்தால் நிறைய ஒப்பீடுகள் வரும் என தெரியும் ஆனால் அதை ஈடு கட்டும் கதை படத்தில் இருப்பதால் படத்திற்கு வைத்தோம். இன்று வால்டர் வெற்றிவேல் படத்தை இயக்கிய வாசு சாரும், வால்டர் தேவாரம் அவர்களும் வந்திருந்து வாழ்த்தியது மிகப்பெரும் ஆசிர்வாதம். இயக்குநர் 2015லேயே  இந்தகதையை என்னிடம் சொன்னார்.  காவல்துறை சம்பந்தமான குடும்பம் தயாரிப்பில் நடிப்பது பெருமை. நட்டி சாருக்கு மிகப்பெரும் விசிறி. சதுரங்க வேட்டை படத்தை அவர் போல் யாரும் செய்ய முடியாது. அவருடன் நடித்தது சந்தோஷம். இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

இயக்குநர் U.அன்பு:-

சிபிராஜிடம் இரண்டு கதை சொன்னேன். அவர் தான் இந்த போலீஸ் கதையை எடுக்கலாம் என்றார். எட்டு வருடம் ஆனது இந்தப்படம் ஆரம்பிக்க, இடையில் வேறொரு ஹீரோவுடன் இந்தப்படம் ஆரம்பித்தது ஆனால் அப்போதும் ஆதரவாக இருந்தார். இந்தப்படம் நான் தான் செய்வேன் என தோன்றுகிறது என்றார். இப்போது அவருடன் இந்தப்படம் வருவது மகிழ்ச்சி. தயாரிப்பாளர்  மிகப்பெரும் ஆதரவாக இருந்தார். எங்களுக்கு எல்லாவித்ததிலும் துணையாக இருந்தார். ஒரு மிகப்பெரும் பிரச்சனை ஏற்பட்ட சமயத்தில் நட்டி சார் வந்து நடித்து தந்தார். அவருக்கு மிகப்பெரும் நன்றி. இந்தப்படம் பெரும் கஷ்டபட்டு உருவாக்கியுள்ளோம். எல்லோருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் ஸ்ருதி திலக்:-

எனக்கு சினிமாவில் முதல் மேடை. புது மேடை. சினிமாவின் பின்னால்  பெரிய உழைப்பு இருக்கிறது. நல்ல படங்கள் ஜெயிக்க வேண்டும். நாங்கள் நல்ல சினிமா செய்துள்ளோம். இப்படத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும், இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் வாழ்த்துகள்.

தயாரிப்பாளர் பிரபு திலக்:-

25 ஆண்டுகால ஓட்டம் இது. சினிமா மிகப்பெரும் கலை அதை அனைவரும் நேசிக்க வேண்டும் என நினைக்கிறேன். இந்த மாதிரியான மாலைப்பொழுது நிகழ வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறேன் இன்று நிகழ்வது மிகப்பெரும் மகிழச்சி. இன்று இந்த மேடையில் இருப்பதற்கு சமுத்திரகனி ஒரு காரணம். இன்னும் பல நினைவுகள் பின்னால் இருக்கிறது.  ஒவ்வொரு சினிமாவும் காலத்தின் மிகப்பெரும் பதிவு. இந்தப்படம் மிகப்பெருமையுடன் செய்துள்ளோம் இங்கு வந்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றிகள்.