விமர்சனம்: கலகலப்பு 2 – கொஞ்சம் சிரிப்பு; நிறைய கடுப்பு!

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தபோது நிகழ்ந்த ஓர் உண்மைச் சம்பவத்தை நினைவூட்டும் ஒரு காட்சியுடன் இப்படம் துவங்குகிறது. அதாவது, முன்னாள் அமைச்சர் மதுசூதன்ராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்து கொண்டிருக்கிறது. அப்போது முன்னாள் அமைச்சரின் சொத்து விவரங்கள் அடங்கிய லேப்டாப் அதிகாரிகளின் கைகளில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக அதை ஒருவர் தூக்கிக்கொண்டு ஓடிவந்து வீட்டுக்கு வெளியே வீசுகிறார். முன்னாள் அமைச்சரின் ஆடிட்டரான முனிஸ்காந்த் அந்த லேப்டாப்பை எடுத்துக்கொண்டு காசிக்குப்போய் உட்கார்ந்துகொண்டு, முன்னாள் அமைச்சரிடம் ரூ.5கோடி பணம் கேட்டு பிளாக்மெயில் செய்கிறார். இப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக முன்னாள் அமைச்சர் தனக்கு விசுவாசமான போலீஸ் அதிகாரி ராதாரவியை காசிக்கு அனுப்புகிறார்.

பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் குடும்பத்தின் பிரச்சனைகளை சமாளிக்காமல், பொறுப்பில்லாமல் வீட்டைவிட்டு வெளியேறி, ஒரு சாமியாரின் உதவியாளராகத் திரியும் தன் அப்பா மீது கோபம் கொண்டு, அவரை கொலை செய்ய முயற்சி செய்கிறார் ஜெய். அப்போது தனது பூர்விக சொத்து காசியில் இருப்பதாக அப்பா சொல்ல, அந்த பூர்விக சொத்தை கண்டுபிடித்து மீட்டு விற்று, தனது குடும்ப கஷ்டங்களை போக்கிக்கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் ஜெய் காசிக்கு கிளம்பிப் போகிறார்.

காசியில் பிரமாண்டமான, ஆனால் அடிப்படை வசதிகள் கூட இல்லாத, சுற்றுலா பயணிகள் அண்டாத ஒரு பழைய மேன்ஷனை லீசுக்கு எடுத்து நடத்தி வருகிறார் ஜீவா. அந்த மேன்ஷன் தான் தனது பூர்விக சொத்து என்று தெரியாமல், அதில் போய் தங்குகிறார் ஜெய். அந்த மேன்ஷனின் இன்னொரு பகுதியில் பரதநாட்டியம் கற்றுக்கொடுக்கும் பெண் தாசில்தாரான நிக்கி கல்ராணியை கண்டதும் காதல் கொள்கிறார் ஜெய்.

மேன்ஷனை நடத்தும் ஜீவாவின் தங்கைக்கும், திருமணம் செய்யாமல் சாமியாராகி, தனது ‘குண்டலி’யை அடிவயிற்றுக்குக் கீழிருந்து மேலே நெற்றிக்கு ஏற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் சதீஷூக்கும் நிச்சயதார்த்தம் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சதீஷின் தங்கை கேத்ரீன் தெரசாவின் கவர்ச்சியான அழகில் மயங்கும் ஜீவா, அவர் மீது காதல் பித்து கொள்கிறார்.

ஜீவா நடத்தும் மேன்ஷன் தான் தனது பூர்விக சொத்து என்பதை ஜெய் எப்படி கண்டுபிடிக்கிறார்? ஜெய்யிடம் மேன்ஷனை ஜீவா ஒப்படைத்தாரா, அல்லது மோதினாரா? முன்னாள் அமைச்சரின் லேப்டாப்பை போலீஸ் அதிகாரி ராதாரவி மீட்டாரா? ஜீவா, ஜெய் நீங்கலாக மூன்றாவது ஹீரோவான சிவாவுக்கு இந்த படத்தில் என்ன வேலை? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை அளிக்கிறது மீதிக்கதை.

படம் பார்ப்பவர்களை எப்படியாவது சிரிக்க வைக்க வேண்டும் என்ற லட்சியம் ஒன்றையே தனது திரையுலக கொள்கையாக கொண்டிருக்கும் இயக்குனர் சுந்தர்.சி, வழக்கம் போல இந்தப் படத்திலும் லாஜிக் எனும் கத்திரிக்காய், நம்பகத்தன்மை எனும் புடலங்காய் என எந்த வெங்காயம் பற்றியும் கவலைப்படாமல், தன் இஷ்டத்துக்கு கதை விட்டுக்கொண்டே போயிருக்கிறார். மேலும், “குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்” என்று பறை சாட்டிவிட்டு, குடும்பத்தினர் முகம் சுழிக்கக்கூடிய ஆபாச காமெடி காட்சிகளை வழக்கம் போல் அள்ளி இறைத்திருக்கிறார். இவரது ஆபாச காமெடிப் பசிக்கு, சதீஷ், யோகிபாபு, சிங்கமுத்து, ரோபோ சங்கர், விடிவி.கணேஷ் போன்ற காமெடி நடிகர்கள் மட்டும் அல்ல, ஜீவா, ஜெய், சிவா ஆகிய நாயகர்களும், நிக்கி கல்ராணி, கேத்ரீன் தெரசா ஆகிய நாயகிகளும் கூட இரையாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தான் சோகம். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித்தொடர்பாளரான குஷ்பு தான், ஆபாசக் காமெடி நிறைந்த இந்த படத்தின் தயாரிப்பாளர் என்பது இன்னும் பெரிய சோகம். ‘கிளைமாக்ஸ் சிரிப்பு ஃபைட்’ என்ற பெயரில் ஜவ்வாய் இழு இழுவென அரை மணி நேரத்துக்கும் மேலாக நடக்கிறதே ஒரு ஃபைட்… சகிக்க முடியலடா சாமி! மாத்தி யோசிங்க சுந்தர்.சி. இல்லையெனில், கட்டாய ஓய்வு தான் உங்களுக்கு பரிசாக அளிக்கப்படும்!

யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவில் நரேந்திர மோடியின் காவிகள் நிறைந்த காசியும், பாடல் காட்சிகளும் அழகாக இருக்கின்றன. ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு துரோகம் இழைத்த ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசை படத்துக்குப் பலம் சேர்க்கிறது. படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த் கொஞ்சம் தூங்காமல் எடிட்டிங் பணி செய்திருந்தால், கிளைமாக்ஸ் ஃபைட் போன்ற தண்டனைகளில் இருந்து பார்வையாளர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம்.

‘கலகலப்பு 2’ – கொஞ்சம் சிரிப்பு; நிறைய கடுப்பு!