விமர்சனம்: ‘சொல்லிவிடவா’ – என்னத்த சொல்ல…!

‘டைட்டானிக்’ போல, ‘சேது’ போல, திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாயகி வேறொருவர் மீது காதல் கொள்ளும் கதை. அதை ‘நாட்டுப்பற்று’, ‘கார்கில் போர்’ என்றெல்லாம் ஜல்லியடித்து, அர்ஜூன்தனமாக ‘சொல்லிவிடவா’ என்ற பெயரில் திரைப்படமாகக் கொடுத்திருக்கிறார்கள்.

தாத்தா கே.விஸ்வநாத்துடன் வாழ்ந்து வரும் நாயகி ஐஸ்வர்யா அர்ஜூனுக்கும், அவரது பாதுகாவலராக இருக்கும் சுஹாசினியின் மகனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. மறுபுறம், வெவ்வேறு தொலைக்காட்சி சேனல்களில் செய்தியாளர்களாக இருக்கும் ஐஸ்வர்யா அர்ஜூனுக்கும், நாயகன் சந்தன்குமாருக்கும் இடையே அடிக்கடி மோதல் நடக்கிறது.

இந்நிலையில், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ‘கார்கில் போர்’ வெடிக்க, போர் செய்திகள் சேகரிப்பதற்காக ஐஸ்வர்யா அர்ஜூனும், சந்தன்குமாரும் போர்முனைக்கு அனுப்பப்படுகிறார்கள்.  அப்படி போன யுத்தகளத்தில் இருவருக்குள்ளும் காதல் துளிர்க்கிறது. ஆனால், ஐஸ்வர்யா அர்ஜூன் ஏற்கெனவே சுஹாசினியின் மகனுக்கு நிச்சயிக்கப்பட்டு விட்டதால், நாயகனும் நாயகியும் காதலை வெளியே சொல்ல இயலாமல் தவியாய் தவிக்கிறார்கள்.

யாரை கரம் பிடித்தார் ஐஸ்வர்யா அர்ஜூன் – நாயகன் சந்தன்குமாரையா? அல்லது சுஹாசினியின் மகனையா? என்ற கேள்விக்கு விடை சொல்லுகிறது மீதிக்கதை.

நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா அர்ஜூன், ‘பட்டத்து யானை’ என்ற படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார். அந்த படம் தோல்வி அடைந்தது. எனவே, மகளை முன்னுக்கு கொண்டு வருவதற்காக, அவரது திறமைகளை வெளிக்காட்டுவதற்காக அர்ஜூனே கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி, இப்படத்தை தயாரித்திருக்கிறார். முதல் படத்தைக் காட்டிலும் இந்த படத்தில் ஐஸ்வர்யா அர்ஜூனின் நடிப்பில் கொஞ்சம் முன்னேற்றம் தெரிகிறது. எனினும், இன்னும் முன்னேறிச் செல்ல வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது.

அறிமுக நாயகனாக வரும் சந்தன்குமார், ஒரு ஹீரோவுக்கு உரிய தோற்றத்துடன் வாட்டசாட்டமாக இருக்கிறார். ஆனால், நடிப்பிலும், சண்டை போடும் பாணியிலும் அர்ஜூனை அப்படியே காப்பி அடித்திருக்கிறார். இமிட்டேட் செய்வதை விட்டுவிட்டு, தனக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டால், அடுத்தடுத்த படங்கள் அவரை தேடி வரும்.

யோகி பாபு, சதீஷ், நான் கடவுள் ராஜேந்திரன் போன்ற காமெடி நடிகர்கள் இருந்தும் சிரிக்கத் தூண்டும் காமெடிக் காட்சிகள் குறைவாகவே இருக்கின்றன. சுஹாசினி, கே.விஸ்வநாத், பிரகாஷ்ராஜ் போன்றோர் அனுபவம் வாய்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

மகளுக்காக காதல் கதையை தேர்ந்தெடுத்ததற்காக இயக்குனர் அர்ஜூனை பாராட்டலாம். அதேவேளை, அவர் தனது ட்ரேட் மார்க்கான ‘நாட்டுப்பற்று’ விவகாரத்தை கதைக்குள் நுழைத்திருக்கக் கூடாது. ‘கார்கில் போர்’ என்றாலே எங்களுக்கு நினைவுக்கு வருவது இந்திய ராணுவ வீரர்களின் சாகசம் அல்ல; அப்போதைய வாஜ்பாய் அரசின் கையாலாகாத்தனம் மற்றும் முறைகேடுகள் தான். பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டது கூட தெரியாமல் தூங்குமூஞ்சியாக இருந்தது, ஆடு மேய்க்கும் ஒரு சிறுவன் சொல்லித்தான் அது இந்திய அரசுக்கே தெரிய வந்தது, போரில் உயிர் நீத்த இந்திய வீரர்களுக்காக வாங்கப்பட்ட சவப்பெட்டிகளில் ஊழல், லைன் ஆஃப் கண்ட்ரோலை தாண்டப்போவதாக உதார் விட்டுக்கொண்டிருந்தபோது விரைந்துவந்த அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டன், “மூடிக்கிட்டு போய் வேற வேலையை பாருங்க” என்று சொன்னவுடன், மூடிக்கொண்டு போய் வேறு வேலை பார்த்தது… இவை இன்னும் நமது நினைவுகளில் பசுமையாக இருப்பதால், கார்கில் போர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் மனம் ஒன்றவில்லை.

மார்க்கெட் இல்லாத நாயகன் – நாயகியை வைத்து இரண்டரை மணி நேரம் கதை சொல்வதெல்லாம் டூமச்! படத்தொகுப்பாளர் அரைமணி நேர படத்தை வெட்டி எறிந்திருந்தால் பார்வையாளர்களின் பொறுமைக்கு பங்கம் வந்திருக்காது.

‘சொல்லிவிடவா’ – என்னத்த சொல்ல…!