வி 3 – விமர்சனம்

நடிப்பு: வரலட்சுமி சரத்குமார், பாவனா, எஸ்தர் அனில், ஆடுகளம் நரேன், சந்திரகுமார், பொன்முடி, ஜெய்குமார், ஷீபா மற்றும் பலர்

இயக்கம் – அமுதவாணன்

தயாரிப்பு: டீம் ஏ வென்ச்சர்ஸ்

ஒளிப்பதிவு: சிவா பிரபு

படத்தொகுப்பு: நாகூரான்

இசை: ஆலன் செபாஸ்டியன்

பத்திரிகை தொடர்பு: சதீஷ்குமார், சிவா (டீம் எய்ம்)

இந்தியாவில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க வேண்டும், 18 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கு பள்ளிகளில் பாலியல் கல்வி கற்பிக்க வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்துவதை முதன்மையான நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் ‘வி 3’. மேற்கண்ட கோரிக்கைகளை நேரடி திரைக்கதை மூலம் முன்வைக்காமல், இளம்பெண்ணை கும்பல் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்வது, உயிரோடு தீ வைத்து எரிப்பது, போலி என்கவுண்ட்டரில் இளைஞர்களை போலீசார் சுட்டுக்கொல்வது போன்ற மனம் பதைபதைக்கச் செய்யும் சமூகக் குற்றங்களைத் தோலுரித்துக் காட்டும் விறுவிறுப்பான திரைக்கதை ரூட்டில் பயணித்து அவற்றின் மூலம் முன்வைத்திருக்கிறார்கள்.

டூ வீலரில் போய் வீட்டுக்கு வீடு செய்தித்தாள் போடுகிற முகவராக தொழில் செய்பவர் வேலாயுதம் (ஆடுகளம் நரேன்). மனைவியை இழந்த அவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் விந்தியா (பாவனா), இளைய மகள் விஜி (எஸ்தர் அனில்).

இரவு டூ வீலரில் வீடு திரும்பும் மூத்த மகள் விந்தியாவை ஐந்து இளைஞர்கள் மடக்கி, வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். வீட்டுக்கு மகள் வந்து சேராததால் பதறும் வேலாயுதம், போலீஸ் உதவியை நாடுகிறார். அவரை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்துக்கு வருகிறது போலீஸ். அங்கே பெண் சடலம் எரிந்த நிலையில் கிடக்கிறது.

விசாரணை செய்யும் போலீஸ், ஐந்து இளைஞர்களைப் பிடித்துக் கொண்டுபோய் சம்பவ இடத்திலேயே வைத்து சுட்டுக் கொல்கிறது. அந்த இளைஞர்களின் பெற்றோர்களும், உற்றார்களும் “எங்கள் பிள்ளைகள் தீயவர்கள் இல்லை. அப்பாவிகள். அவர்களுக்கும் இந்த குற்ற செயல்களுக்கும்  எந்த தொடர்பும் இல்லை.  அவர்களை போலீஸ் போலி என்கவுண்ட்டரில் கொலை செய்திருக்கிறது. அவர்களுக்கு நியாயம் வேண்டும்” என்று தீவிரமாகப் போராடுகிறார்கள்.

இத்தொடர் சம்பவங்கள் குறித்து விசாரணை செய்து உண்மையைக் கண்டறியும் பொறுப்பு மனித உரிமைகள் ஆணையத் தலைவரான ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவகாமி (வரலட்சுமி சரத்குமார்) வசம் ஒப்படைக்கப்படுகிறது. உண்மையில் என்ன நடந்தது? அந்த உண்மையை வெளிக்கொண்டுவர சிவகாமி ஐ.ஏ.ஏஸ். என்ன செய்கிறார்? என்பது ‘வி 3’ படத்தின் மீதிக்கதை.

0a1c

சிவகாமி ஐ.ஏ.எஸ். என்ற கம்பீரமான கதாபாத்திரம் வரலட்சுமி சரத்குமாருக்கு. அக்கதாபாத்திரத்துக்கு ஏற்ப, நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும், சீரியஸ்ஸான முகமுமாக சிறப்பாக நடித்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.

காமுகர்களிடம் சிக்கிக்கொள்ளும் விந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாவனா, தன் அருமையான நடிப்பால் பார்வையாளர்களைப் பதைபதைக்கச் செய்வதோடு, நெகிழவும் வைத்திருக்கிறார்.

வீட்டுக்கு வந்துகொண்டிருப்பதாக செல்பேசியில் சொன்ன மகள், வீடு வந்து சேராவிட்டால் ஒரு தந்தைக்கு எவ்வளவு அச்சம், பதட்டம் ஏற்படும் என்பதை வேலாயுதம் என்ற கதாபாத்திரம் மூலம் உருக்கமாக, தத்ரூபமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார் ஆடுகளம் நரேன். அதுபோல், வீடு திரும்பாத அக்கா பயங்கர ஆபத்தில் சிக்கி இருக்கிறாள் என்பது தெரிந்து கதறும் விஜியாக வரும் எஸ்தர் அனில், தன் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.

படத்தில்அரசியல்வாதிகளாகவும், போலீசாராகவும் வருகிறவர்கள் கதை நகருவதற்கும், திருப்பங்களுக்கும் தேவையான இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

அனுதினமும் செய்தித்தாள்களில் வரும் உண்மைச் சம்பவங்களைத் தொகுத்து, திரைக்கதையாக்கி, விறுவிறுப்பான படமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் அமுதவாணன். காவல்துறையினருக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான நாசகாரத் தொடர்பை நச்சென படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர். காவல்துறை அதிகாரிகள் தங்கள் சுயநலன்களுக்காக நெறிமுறையற்ற வழிமுறைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் ஒரு சில தன்னல அரசியல்வாதிகளின் கைகளில் எவ்வாறு கைப்பாவையாக மாறுகிறார்கள் என்பதை சித்தரித்திருப்பது நெத்தியடி.

ஆனால், எரித்துக் கொல்லப்பட்ட பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனை கூட செய்யாமல், அவள் பாலியல் பலாத்காரம் தான் செய்யப்பட்டாள் என்ற முடிவுக்கு காவல்துறையும், முதலமைச்சரும் வருவது, திரைக்கதையில் மிகப் பெரிய ஓட்டை. அதுபோல், சில லாஜிக் மீறல்கள் இயக்குனரின் தடுமாற்றத்தைக் காட்டுகின்றன. மேலும், பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்கி விட்டால் பாலியல் பலாத்காரமே இருக்காது என இயக்குனர் முன்வைக்கும் தீர்வு அபத்தமானது. ஆதாரமற்றது. இயக்குனரின் அறியாமையைக் காட்டுகிறது. 1930களில் தேவதாசி முறையை ஒழிப்பதற்காக நடந்த விவாதத்தில், அப்போதைய காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி தேவதாசி முறைக்கு ஆதரவாக வாதாட, அவருக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கொடுத்த பிரபலமான பதிலடியை நாம் இயக்குனர் அமுதவாணனுக்கும் கொடுக்க விரும்புகிறோம்.

சிவா பிரபுவின் ஒளிப்பதிவும், ஆலன் செபாஸ்டினின் இசையும் படத்துக்கு பலம்.

‘வி 3’ – ரசிப்பதற்காகவும், விவாதிப்பதற்காகவும் படத்தை ஒருமுறை பார்க்கலாம்!