கொலை – விமர்சனம்

நடிப்பு: விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி செளத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, ஜான் விஜய், அர்ஜுன் சிதம்பரம், சித்தார்த்த ஷங்கர் மற்றும் பலர்

இயக்கம்: பாலாஜி குமார்

ஒளிப்பதிவு: சிவகுமார் விஜயன்

படத்தொகுப்பு: செல்வா ஆர்.கே.

இசை: கிரிஷ் கோபாலகிருஷ்ணன்

தயாரிப்பு: இன்பினிட்டி ஃபிலிம் வெஞ்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ்

தமிழக வெளியீடு: சக்தி ஃபிலிம் ஃபேக்டரி

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா (டிஒன்)

‘Closed Buzzle’ எனப்படும் ‘மூடுண்ட புதிர்’ எனும் evergreen ரகத்தைச் சேர்ந்த ‘சஸ்பென்ஸ் க்ரைம் திரில்லர்’ ஜானர் திரைப்படமாக உருவாகி வெளிவந்திருக்கிறது ‘கொலை’ திரைப்படம்.

படத்தின் தலைப்பு சுட்டிக்காட்டுவதைப் போல, இக்கதையின் மைய க்ரைம் – கொலை.

1923ஆம் ஆண்டு அமெரிக்காவில் டாட் கிங் என்ற நடிகை மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இக்கொலையைச் செய்த குற்றவாளி யார்? எதற்காக கொலை நடந்தது? என்பன போன்ற கேள்விகளுக்கு இன்று வரை விடை கிடைக்கவில்லை. இந்த உண்மைச் சம்பவத்தின் இன்ஸ்பிரேஷனில், நிறைய கற்பனைகளைக் கலந்து, ‘கொலை’ திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பாலாஜி குமார். இவர் ஏற்கெனவே ‘விடியும் முன்’ திரைப்படத்தை இயக்கி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றவர்.

’கொலை’ படத்தின் கதை என்னவென்றால், மும்பையில் நடைபெற்ற அகில இந்திய பாட்டுப் போட்டியில் பங்கேற்று முதல் பரிசை தட்டிச்சென்றவர் லைலா (மீனாட்சி சௌத்ரி). சிறந்த பாடகியாக இருப்பதோடு, வாய்ப்பு தேடி வந்ததால், மாடலிங் நடிகையாகவும் திகழ்பவர். இவர் சென்னையில், அடுக்குமாடி குடியிருப்பில், உட்பக்கம் தாழிடப்பட்ட தனது ஃபிளாட்டில், கழுத்து நெரிக்கப்பட்டு, மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு, சடலமாக சோபாவில் கிடக்கிறார். இந்த சடலம் தன் கதையை தானே விவரிப்பதாக – புதுமையான பாணியில் – படம் தொடங்குகிறது.

லைலா கொலை வழக்கை விசாரிக்க, புதிதாக பணியில் சேர்ந்திருக்கும் சந்தியா மோகன்ராஜ் (ரித்திகா சிங்) என்ற இளம் போலீஸ் அதிகாரி நியமிக்கப்படுகிறார். இவ்வழக்கின் மர்ம முடிச்சை எளிதில் அவிழ்க்க முடியாது என்ற நிலையில், சந்தியா கொலையாளியைப் பிடிக்க தனது வழிகாட்டியும், 200க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளைத் திறம்பட விசாரித்த அனுபவம் கொண்ட முன்னாள் புலனாய்வு அதிகாரியுமான வினாயக்கின் (விஜய் ஆண்டனி) உதவியை நாடுகிறார். தனது மகள் விபத்தில் சிக்கி மரணப்படுக்கையில் கிடப்பதால் மனம் நொறுங்கி காவல்துறை பணியிலிருந்து விலகியிருக்கும் வினாயக், மிகுந்த தயக்கத்துக்குப் பின் தனது மாணவியான சந்தியாவோடு சேர்ந்து லைலா கொலை வழக்கை விசாரிக்க முன் வருகிறார்.

வினாயக் – சந்தியா கூட்டணி முதலில் லைலா வீட்டு பணிப்பெண், குடியிருப்பின் காவலாளிகள் ஆகியோரை விசாரித்து தகவல் சேகரிக்கிறார்கள். அடுத்து லைலாவின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட அவரது காதலர் சதீஷ் (சித்தார்த்த ஷங்கர்),  போலி மேனேஜர் பப்லு (கிஷோர் குமார்), மாடலிங் ஏஜெண்ட் ஆதித்யா சர்மா (முரளி சர்மா), புகைப்பட கலைஞர் அர்ஜுன் (அர்ஜுன் சிதம்பரம்) உள்ளிட்ட சில ஆண்களை சந்தேக வளையத்துக்குள் கொண்டு வந்து, கூர்மையான கேள்விகளுடன் விசாரணை நடத்துகிறார்கள். இந்த விசாரணையினூடே, அவர்கள் நம்மை லைலாவின் புதிரான வாழ்க்கைக்குள்ளும், கொலையாளியின் பழுதுபட்ட மூளைக்குள்ளும் அழைத்துச் செல்கிறார்கள்.

இறுதியில், கொலையாளி யார்? கொலைக்குக் காரணம் என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத – திடுக்கிடச் செய்யும் –  பதில்களைத் தருகிறது ‘கொலை’ படத்தின் மீதிக்கதை.

0a1c

சால்ட் பெப்பர் தலைமுடியுடன், நடுத்தர வயது முன்னாள் புலனாய்வு அதிகாரி வினாயக் கதாபாத்திரத்தில் வருகிறார் விஜய் ஆண்டனி. 200க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளை திறம்பட விசாரித்த அனுபவம் மிக்க அதிகாரி எனும் கதாபாத்திரத்தை கண்முன் நிறுத்த ஆர்ப்பாட்டம் இல்லாத உடல்மொழி, நிதானமான நடை, மென்மையான வசன உச்சரிப்பு ஆகியவற்றை கையாண்டு, யதார்த்தமாக நடித்து, பாராட்டு பெறுகிறார். துப்புத் துலங்க மேற்கொள்ளும் முயற்சிகளிலும், மகளின் நிலை கண்டு வேதனைப்படும் காட்சிகளிலும் தானொரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

இளம் போலீஸ் அதிகாரி சந்தியா மோகன்ராஜ் கதாபாத்திரத்தில் வருகிறார் ரித்திகா சிங். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்ற அக்கறையுடன், கருமமே கண்ணாக செயல்படும் போலீஸ் அதிகாரியாக பொருத்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

பாடகி மற்றும் மாடலிங் நடிகை லைலா கதாபாத்திரத்தில் வருகிறார் மீனாட்சி சௌத்ரி. அழகில் நம்மை ஈர்க்கிறார். என்றாலும், கொலை செய்யப்படும் கதாபாத்திரம் என்பதால் நமது அனுதாபத்தை அள்ளுகிறார்.

லைலாவின் காதலர் சதீஷ் கதாபாத்திரத்தில் முதலில் சாதாரணமாக வரும் சித்தார்த்த ஷங்கர், பின்னால் மிரட்டலாக நடித்து தன் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

முரளி சர்மா, ராதிகா சரத்குமார், அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்கள் தத்தமது கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை குறைவின்றி கொடுத்திருக்கிறார்கள்.

இயக்குனர் பாலாஜி குமார் திரைக்கதை அமைப்பதிலும், இயக்குவதிலும் தானொரு தனித்துவமான இயக்குனர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். படம் தொடங்கியவுடன், ‘செட் அப்’ என்ற பெயரில் நீட்டி முழக்காமல், எடுத்த எடுப்பிலேயே அவர் கதைக்குள் செல்வது அருமை. விறுவிறுப்பு குறையாமல், அதே நேரத்தில் சஸ்பென்ஸை கடைசி வரை கட்டிக் காத்து கதை சொல்லியிருக்கும் நேர்த்தி பிரமாதம். மேலும், கற்பனைகளை ஹாலிவுட் தரத்துக்கு இணையாக அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார். உதாரணமாக, மலை உச்சியில் தொங்கும் மகளின் கையை வினாயக் பிடித்திருக்கும் ஷாட் அப்படியே மாறி, மலை உச்சியில் தொங்கும் வினாயக்கின் கையை மகள் பிடித்திருப்பதாக காட்டியிருப்பது நினைத்துப் பார்க்கவே முடியாத கற்பனை வளம். இதுபோல் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள  ஏராளமான ஷாட்டுகளை வியந்து கூற முடியும். திரை மொழியை, திரைப்பட தொழில் நுட்பத்தைக் கையாளுவதில் தானொரு நிபுணர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கும் இயக்குனர் பாலாஜி குமாருக்கு பாராட்டுகள்.

சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு, செல்வா ஆர்.கே.வின் படத்தொகுப்பு, கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசை படத்திற்கு மிகப் பெரிய பலம். குறிப்பாக ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ ரீ மிக்ஸ் பாடல் சூப்பர். படம் முடிந்த பிறகும் அப்பாடல் நம் காதுகளில் ரீங்காரமிடுவது கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் மேஜிக்!

‘கொலை’ – கொலையாளி யார் என்பதை தெரிந்துகொள்ள பரபரப்பாக ஒருமுறையும், படத்தின் அழகியலை, மேக்கிங்கை ரசிக்க நிதானமாக இன்னொரு முறையும் என ஒவ்வொருவரும் கட்டாயம் இருமுறை கண்டு களிக்கத் தக்க படம்!

 

Read previous post:
0a1e
“எனக்கு விஜய் சேதுபதி சாருடன் சேர்ந்து நடிக்க ஆசை உண்டு”: ‘மாவீரன்’ நன்றி தெரிவிக்கும் விழாவில் சிவகார்த்திகேயன்!

'சாந்தி டாக்கீஸ்' அருண் விஸ்வா தயாரிப்பில், மடோனா அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘மாவீரன்’ திரைப்படம் ஜூலை 14-ம் தேதி வெளியானது.

Close