விஜயகாந்த்தின் குழறல் பேச்சை கிண்டல் செய்வது நாகரிகமா?

ஓர் அரசியல் தலைவரின் அல்லது ஒரு கட்சி சார்ந்த பிரமுகர்களின் செயற்பாடுகளை அந்த நோக்கில் விமர்சிப்பது என்பது வேறு; அவர்களின் அங்கஹீனங்களை, உடற்கோளாறுகளை, ஆரோக்கியப் பிரச்சினைகளை, வயதாவதால் ஏற்படும் உடல்சார்ந்த குறைகளைச் சுட்டி கிண்டலடிப்பது வேறு. பின்னது கீழ்த்தரமானது.

ஆனால் இந்த கீழ்த்தரமான செயற்பாடு உலகெங்கிலும் ஓர் மலிவான அரசியல் எதிர்வினையாக பாமரர்களால் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும், சற்று நாகரிகம் பயில்பவர்கள் கூட அசந்தர்ப்பமாக எதிர்கொள்ள எந்த ஆயுதமும் இல்லாத நிலையில் இந்த அநாகரிகத்தை பின்பற்றுவதையும் பார்க்கிறோம். இங்கு தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கு தொண்டையில் குண்டடி பட்ட நிலையில் அவர் குழறியபடி பேசிய சில வார்த்தைகள் எவ்வாறு மலினமாக திரிக்கப்பட்டு மக்களிடையே உலவி வருகிறது என்பதை நாம் அறிவோம்.

சமகாலத்தில் தமிழகத்தில் தற்போது விஜய்காந்த்திற்கு நிகழ்ந்துகொண்டிருப்பது அதுவே என தோன்றுகிறது.

அதற்குமுன் என்னளவில் விஜயகாந்த்தைப் பற்றி:

அரசியல் மதிப்பில் அவர் எவ்விதமாகவும் என்னை ஈர்க்கவில்லை. அவரை ஒரு முக்கியமான அரசியல் தலைவராக நான் கருதவில்லை. இரண்டு பெரிய கட்சிகளுக்கு மாற்றாக தன்னை முன்நிறுத்திக்கொண்டு தம்முடைய ரசிகர் மன்றத்தை தொண்டர் படையாக மடைமாற்றி அரசியலில் நுழைந்து அது சார்ந்த துவக்க நம்பிக்கையை மக்களிடத்தில் ஏற்படுத்தியவர், பின்பு சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடுவதின் மூலம் அந்த நம்பிக்கையை அவராகவே அழித்துக் கொண்டார். மட்டுமல்லாமல், பொதுவிடங்களில் ஒரு சாதாரண நபர் கடைப்பிடிக்க வேண்டிய நாகரிகத்தை, பொறுமையை, ஒரு கட்சியின் தலைவராக இருந்துகொண்டு கூட அவரால் அந்த சமநிலையைப் பேண முடியவில்லை என்பது ஒரு பெரிய சறுக்கல். அதனாலேயே அவர் குறித்தான பல நகைச்சுவைகள் உருவாகின்றன என்பதும் இயல்பே.

ஆனால் இப்போது பிரதானமாக அவர் உடல்மொழி குறித்து சுட்டிக் காட்டப்படும் குறைகளும் அது சார்ந்த கிண்டல்களும் முறையற்றவை என்பதை சுட்டிக்காட்ட முயல்வதே இப்பதிவின் நோக்கம். இதற்கு முன்பாக அவரை ஒரு குடிகாரராக சுட்டிக் காட்டிக்கொண்டேயிருந்து அந்த பிம்பத்தை தொடர்ந்து நிறுவிக் கொண்டேயிருந்த கிண்டல்களும் அநியாயமானவை.

‘அவரால நிக்கவே முடியல.. எப்படி ஆட்சி பண்ணுவாரு”

“அவர் பேசறதே புரியல”

“அந்தாளு எப்பவும் தண்ணிதான்”

விஜய்காந்த் குறித்து பொதுப்புத்தி சார்ந்து எழும் பல ஆபாசமான, அநாகரிகமான விமர்சனங்களைத் தவிர்த்து வடிகட்டி சுருக்கமாக தந்தவை இவை.

அதிகாரத்தில் வந்து அமரக்கூடிய எவரும் நல்லாட்சி தர வேண்டும் என்று உண்மையாகவே உறுதி பூண்டு விட்டால் இம்மாதிரியான உடற்குறைகளும்,தடுமாற்றங்களும் அவற்றிற்கு ஒரு தடையாகவே இருக்காது. இதற்கு பல முன்னுதாரணங்கள் உள்ளன.

தம்மை ஆளும் தலைவர் கவர்ச்சிகரமாக இருக்க வேண்டும், ஆற்றொழுக்காக மேடையில் முழங்க வேண்டும் என்பதெல்லாம் புறத்தோற்றக் கவர்ச்சியில் எழும் உளவியல் சார்ந்த எதிர்பார்ப்பு. ஓர் ஆளுமையின் புறத்தோற்றமும் முக்கியமானதுதான் என்றாலும் அதுவே அடிப்படையானது என எதிர்பார்ப்பது பாமரத்தனமானது. ஓா் ஆணழகன்தான் (அல்லது பெண்) சிறந்த தலைவராக இருக்க முடியும் என்று தீர்மானமாக நம்புவது அசட்டுத்தனமானது. இந்த கவர்ச்சி அரசியலின் மூலம்தான் நாம் பல முன்னுதாரண தவறுகளை செய்து கொண்டிருக்கிறோம் என்பதை சற்று நிதானமாக யோசித்தாலே தெரியும்.

இந்தியா மட்டுமல்ல எந்தவொரு மக்கள் அரசையும் ஆண்டு கொண்டிருப்பது அரசியல்வாதிகளோ, அதிபர்களோ அல்ல. Bureaucrats எனப்படும் அதிகார வர்க்கம். மிகப் பொிய அரசு இயந்திரத்தை நிர்வகித்துக் கொண்டிருப்பது அவர்களே. ஜனாதிபதி ஆட்சியின்போது அரசியல்வாதிகள் இல்லாவிட்டாலும் எப்படி அரசு இயந்திரம் நிற்காமல் இயங்குகிறது என்று கேட்டுக் கொண்டாலே போதும்.

ஆனால் அந்த இயந்திரத்தை கண்காணித்து கட்டுப்படுத்தி இயங்கச் செய்வதற்கு ஓர் தலைமை அமைப்பு தேவைப்படுகிறது. அந்த இடத்தை ஜனநாயக வழியாக இட்டு நிரப்புபவர்களே அரசியல்வாதிகள்.

இவர்கள் உலக அழகர்களாகவோ எவ்வித ஆரோக்கிய குறைபாடும் அற்ற கட்டுமஸ்தானவர்களாகவோ, உயர்கல்வி கற்றவர்களாகவோ இருக்க வேண்டிய அவசியமேயில்லை. மக்களுக்கு தேவையான விஷயங்கள் குறித்து நேர்மையுடன் சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்து அதை அதிகார வர்க்கத்தினருக்கு ஆணையாக பிறப்பித்து அது தொடர்ந்து நிறைவேற்றப்படுகிறதா என்பதைக் கவனிக்கிறவர்களாக இருந்தால் போதும். இந்த நிர்வாக மூளையும் மக்களின் துயர் மீது கருணையும் பரிவும் கொண்ட இருதயத்தைக் கொண்டிருந்தால் போதும்.

(என்னால் நன்றாக ஓட முடியும், அதனால் என்னை முதல்வராக தேர்ந்தெடுங்கள் என்று சமீபத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதும் அபத்தமானதே).

மேடையில் வீராவேசமாக முழங்கி விட்டு மறைவில் அதிகாரவர்க்கத்தினருடன் கூட்டுக் கொள்ளையில் ஈடுபடும் அரசியலே இங்கு அதிகம். ஆனால் லஞ்சத்தை, ஊழலை அனுமதிக்காமலும் அரசு இயந்திரத்தை இயங்க வைக்க முடியாது என்பதும் ஒரு முரண் நகை. ஆனால் நேர்மையான தலைமையால் இவற்றை நிச்சயம் கட்டுப்டுத்த முடியும்.

தமாகாவின் நிறுவனராக இருந்த மூப்பனார் பேசுவதே புரியாது. ஆனால் தேசிய அரசியலில் அவர் ஒரு முக்கியமான சக்தியாக இருந்தார். காமராஜிற்கு மக்களை ஈர்க்கும்படி கவர்ச்சியாக பேசத் தெரியாது. ஆனால் அடித்தட்டு மக்களின் மீதான பரிவோடு பல திட்டங்களை யோசித்தார்.

பிரபலங்களின் உடல் சார்ந்த குறைகளை மலினமாக கிண்டலடிப்பதும் அவர்களின் முக்கியமான அரசியல் செயற்பாடுகளுக்கு அது தடையாக இருக்கும் என்று பேசுவதும் நினைப்பதும் அறியாமை. விஜயகாந்த்திற்கு நிகழ்ந்து கொண்டிருப்பது இதுதான்.

கரகரப்பான குரலாக இருந்தாலும் மேடையில் முழங்கிய கருணாநிதியின் கம்பீரமான குரல் நலிந்து போனதை நேற்றைய தேர்தல் அறிக்கை அறிவிப்பில் கண்கூடாக பார்க்க முடிந்தது. கருணாநிதியின் உடற்குறைகளை சமயத்தில் கிண்டலடித்த ஜெயலலிதா, தற்போது அமர்ந்தபடிதான் பேச முடிகிறது. இவையெல்லாம் வரலாறு உணர்த்தும் பாடம். ஆகவே இம்மாதிரியான கிண்டல்கள் பூமராங் போல திருப்பி வந்தும் தாக்கக்கூடும் என்பதை இந்தக் கிண்டல்களை நிகழ்த்துபவர்கள் உணர வேண்டும். அது அநாகரிகமான அரசியலையே வளர்க்கும். அந்தப் போக்கு நல்லதல்ல.

விஜயகாந்த்தின் மீது நிகழ்த்தப்படும் மலினமான கிண்டல்களை ஓர் உதாரணமாக முன்னிட்டு இவற்றையெல்லாம் சொல்லத் தோன்றிற்று, அவ்வளவே.

சுரேஷ் கண்ணன்

விஜயகாந்த்தின் குழறல் பேச்சை நையாண்டி செய்வதற்காக செயற்கையாக உருவாக்கப்பட்ட வீடியோ:

 விஜயகாந்த் பேச்சை நக்கலாக மிமிகிரி செய்யும் அ.தி.மு.க. நடிகர் சிங்கமுத்து வீடியோ:

Read previous post:
0a1z
ஜித்தன் 2 – விமர்சனம்

‘ஜித்தன்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் மூத்த மகனும், நடிகர் ஜீவாவின் அண்ணனுமான ரமேஷ். அவர் தன் பெயருடன் ‘ஜித்தன்’ என்பதை இணைத்து,

Close