‘பாகுபலி’, ‘கபாலி’க்கு அடுத்த இடத்தை பிடித்த ‘விஜய் 60’

விஜய் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. தலைப்பு வைக்காமலேயே உருவாகி வரும் இப்படத்தை படக்குழுவினர் ‘விஜய் 60’ என்று குறிப்பிட்டு வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், செப்டம்பரில் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என தெரிகிறது.

இதனால் பொங்கல் தினத்தில் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் வியாபாரமும் இப்போதே களைகட்ட தொடங்கிவிட்டது. முதற்கட்டமாக இப்படத்தின் கேரளா வெளியீட்டு உரிமையை IFAR என்ற நிறுவனம் ரூ.6.25 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் படங்களிலேயே கேரளா உரிமை இவ்வளவு தொகைக்கு விற்பனையானது இந்த படத்துக்குத்தான். அது மட்டுமில்லாமல், பிரமாண்டமாய் வெளிவந்த ‘பாகுபலி’, ‘கபாலி’ ஆகிய படங்களை அடுத்து கேரளாவில் அதிக விலைக்கு ‘விஜய் 60’ விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது. ‘பாகுபலி’ படம் ரூ.10.5 கோடிக்கும், ‘கபாலி’ படம் ரூ.7.5 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.