வீரன் – விமர்சனம்

நடிப்பு: ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஆதிரா ராஜ், வினய் ராய், முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி மற்றும் பலர்

இயக்கம்: ஏ.ஆர்.கே.சரவண்

ஒளிப்பதிவு: தீபக் டி.மேனன்

படத்தொகுப்பு: பிரசன்னா ஜி.கே

இசை: ஹிப்ஹாப் தமிழா

தயாரிப்பு: சத்யஜோதி பிலிம்ஸ்

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா (டிஒன்)

உலக அளவில் ‘ஸ்பைடர்மேன்’ போன்ற சூப்பர் ஹீரோக்களின் படங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அத்தகைய உலக சூப்பர் ஹீரோக்களை ‘இறக்குமதி’ செய்யாமல், தமிழ் கிராமத்து மண்வாசனையுடன் கூடிய ஒரு சூப்பர் ஹீரோவை, நம்பும் விதத்தில் நம் கண்முன் நிறுத்துகிறது இந்த ‘வீரன்’ திரைப்படம்.

2007ஆம் ஆண்டு. கொங்கு மண்டலத்தில் உள்ள வீரனூர் கிராமத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் குமரன் (ஹிப்ஹாப் தமிழா ஆதி) மின்னல் தாக்கி சுயநினைவை இழக்கிறார். மேல் சிகிச்சைக்காக அவரை அவரது அக்கா சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு குமரனின் உடல்நிலை குணமடைகிறது. அதோடு, அவர் விரும்பும்போது அவரது உடலில் மின்சக்தி உருவாகி விரல் வ்ழியே வெளிப்படும் அதிசயத்தை கண்டறிகிறார். அந்த மின்சக்தியை வைத்து மற்றவர்களின் மூளையை ஒரு நிமிடம் தன்னால் கட்டுப்படுத்த முடியும் என்பதையும் அவர் அறிந்து கொள்கிறார். எனினும், இ ந்த அபூர்வ சக்தி தனக்கு இருப்பதை பிறரிடம் கூறாமல் ரகசியமாக வைத்துக்கொள்கிறார்.

பதினான்கு ஆண்டுகள் உருண்டோடிய பின் 2021ஆம் ஆண்டு. வளர்ந்து வாலிபனாக இருக்கும் குமரன் தனது வீரனூர் கிராமத்துக்கு ஆபத்து ஏற்படுவது போல் கனவு காண்கிறார். உடனடியாக சிங்கப்பூரில் இருந்து வீரனூர் வருகிறார். அங்கு தனியார் நிறுவனம் ஒன்று மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ‘லேசர் மின் தடம்’ அமைத்து வருவதும், அதற்குத் தடையாக இருக்கும் காவல் தெய்வமான வீரனின் கோயிலை இடிக்க இருப்பதும் தெரியவருகிறது.

வீரன் என்ற காவல் தெய்வமாக – சூப்பர் ஹீரோவாக – குமரன் மாறுவேடம் பூண்டு, தனக்கிருக்கும் அபூர்வ மின்சக்தியைக் கொண்டு சதியை முறியடித்து, வீரனின் கோயிலையும், ஊர்மக்களையும் எப்படி காப்பாற்றினார் என்பது ‘வீரன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

0a1b

கதையின் நாயகன் குமரனாகவும், அவ்வப்போது சூப்பர் ஹீரோ வீரனாகவும் வரும் ஹிப்ஹாப் தமிழா ஆதி, கூடுமான வரை லாஜிக் மீறாமலும், பார்வையாளர்கள் நம்பும் விதமாகவும் தனது கதாபாத்திரத்தை சிரத்தையுடன் கையாண்டிருக்கிறார். படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு அவர் மீது சலிப்போ, வெறுப்போ வராமல், ஒருவகை பிரியம் வருவது அவரது நல்ல நடிப்புக்கு எடுத்துக்காட்டு.

நாயகியாக வரும் அறிமுக நடிகை ஆதிரா ராஜுக்கு குடும்ப்ப் பாங்கான முகம். அவர் கதாநாயகியாக அல்லாமல் ஒரு கதாபாத்திரமாகவே படம் நெடுகிலும் வலம் வருகிறார்.

நாயகியை பெண் பார்க்க வந்து நகைச்சுவையை சிதறவிடும் நடுத்தர வயது முருகானந்தம், நாயகனுக்கு கடைசிவரை தோள் கொடுக்கும் நண்பன் சக்கரையாக வரும் யூடியூபர் சசி, பார்வைக் குறைபாட்டுடன் வந்து திருப்பங்களை உருவாக்கும்  ஜான்சன், அவரது தோட்டத்தின் குதிரை, பணத்துக்காக அலையும் தேநீர்கடை காளி வெங்கட் – முனீஸ்காந்த் கூட்டணி, கெட்ட விஞ்ஞானியாக வரும் வினய் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்கள் அனைவரும் தத்தமது கதாபாத்திரத்தை கச்சிதமாகச் செய்து சுவாரஸ்யம் ஏற்படுத்தியுள்ளார்கள்.

‘மரகத நாணயம்’ என்ற சிறந்த ஹாரர் த்ரில்லரை கொடுத்த இயக்குனர் ஏ.ஆர்.கே. சரவண், இ ந்த பட்த்தை நகைச்சுவையும் ஆக்சனும் கலந்து போரடிக்காமல் நகர்த்திச் சென்றிருக்கிறார். பாராட்டுகள். சிறு தெய்வ வழிபாட்டின் பண்பாட்டு மரபை எடுத்துக் கூறி, ஊருக்காக வாழ்ந்தவர்கள் தெய்வமாக உறைவதும், அவர்கள் செய்த தியாகமும் உருவாக்கிச் சென்ற நம்பிக்கையும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தொடர்கின்றன என்பதை ‘கற்பனை’ வீரனின் பிளாஷ்பேக் வழியாக இயக்குனர் சித்தரித்தது சுவாரஸ்யம்.

தீபக் டி.மேனனின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக காட்டியிருப்பதோடு, சூப்பர் ஹீரோ வீரன் வரும் காட்சிகளை இயல்பாகவும், நம்பகத்தன்மையோடும் படமாக்கியிக்கிறது.

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

‘வீரன்’ – குழந்தைகளுடன் குடும்பமாகச் சென்று கண்டு களிக்கலாம்!