“என்னை ஒரு கூண்டில் அடைத்து விட வேண்டாம்”: நடிகர் விதார்த் வேண்டுகோள்

“எல்லா வகையான படங்களிலும் நடிக்க எனக்கு விருப்பம் இருக்கிறது. என்னை ஒரு கூண்டில் அடைத்து விட வேண்டாம்” என்று நடிகர் விதார்த் கேட்டுக்கொண்டுள்ளார்..

பைக்கை கதையின் மையமாக வைத்து உருவாகியிருக்கும் வித்தியாசமான படம் ‘வண்டி’. ரூபி ஃபிலிம்ஸ் ஹஷீர் தயாரிப்பில் விதார்த், சாந்தினி நடித்திருக்கிறார்கள். சூரஜ் எஸ் குரூப் இசையமைத்திருக்கும் இந்த படத்தை ரஜீஷ் பாலா இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இசையை வெளியிட்டு வாழ்த்தி பேசினார்.

v8

“தமிழ்நாடு எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் கலாச்சாரமும் ரொம்பப் பிடிக்கும். அதை ஒட்டி ஒரு படம் பண்ணனும், ரொம்ப யதார்த்தமாக, ரியலாக எடுக்கணும்னு ஆசைப்பட்டோம். இந்த ‘வண்டி’ படத்தில் நிறைய இடங்களில் பல கேமராக்கள் வைத்து, மறைத்து வைத்தெல்லாம் எடுத்திருக்கிறோம். இந்த வகையில் தமிழில் இது முதல் படமாக இருக்கும் என்று நினைக்கிறேன், தொடர்ந்து நிறைய தமிழ் படங்கள் தயாரிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்றார் தயாரிப்பாளர் ஹஷீர்.

“விதார்த் நடிச்சா அது நல்ல படமா தான் இருக்கும். தமிழ்நாட்டில் சமீபத்தில் 150 திரையரங்குகள் புதிதாக வந்திருக்கின்றன. சினிமா உலகம் நன்றாகத் தான் இருக்கிறது. நல்ல படங்கள் எடுத்தால் கண்டிப்பா ஓடும், இந்த படமும் அதில் ஒன்றாக இருக்கும்” என்றார் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன்.

“இந்த படம் ஒரு ஹைப்பர் லிங் கதையமைப்பைக் கொண்ட படம். இதில் 3 பயணங்கள் உள்ளன, அதில் நானும் ஒரு கதையில் நடித்திருக்கிறேன். இயக்குனர் படத்தை எடுக்கும்போது நிறைய விஷயங்களில் ஏன் என்ற கேள்வி எழுந்தது. அதை கடைசியாக பார்க்கும்போது தான் இயக்குனர் மனதில் என்ன நினைத்தார் என்பது புரிந்தது” என்றார் நடிகர் விஜித்.

“வண்டி’ ஒரு சிறப்பான ஸ்கிரிப்ட். விதார்த் ஒரு நல்ல யதார்த்தமான நடிகர். மல்டி கேமரா செட்டப்பில் படத்தை எடுத்திருக்கிறார்கள், இது கொஞ்சம் புதுவிதமான அனுபவமாக இருக்கும். செலவைப் பற்றி கவலைப்படாமல் நிறைய செலவு செய்திருக்கிறார் தயாரிப்பாளர். கேரளா பூர்வீகம் என்றாலும் தமிழில் படம் எடுக்க ஒரு பெரிய குழுவே வந்திருக்கிறது. அவர்களை நாம் ஆதரிக்க வேண்டும்” என்றார் நடிகர் அருள்தாஸ்.

“சோலோ’ படத்தில் ‘சீதா கல்யாணம்’ பாடல் இசையமைத்திருந்தேன். அந்த பாடலுக்கு மிகப் பெரிய வரவேற்பை தமிழ் ரசிகர்கள் கொடுத்தார்கள். நானும் சென்னையில் வளர்ந்தவன் தான். ஜி.வி.பிரகாஷ் சார் இசை எனக்கு மிகவும் பிடிக்கும். தொடர்ந்து தமிழ் படங்களுக்கு இசையமைக்க விரும்புகிறேன்” என்றார் இசையமைப்பாளர் சூரஜ் எஸ் குரூப்.

“வந்தாரை வாழ வைக்கும் குணம் எங்கள் தமிழர்களின் பண்பாடு. கேரளாவில் இருந்து வந்திருக்கும் உங்களையும் கொண்டாடுவோம். இயக்குனர் என்ன சொல்ல நினைத்தாரோ அதை சிறப்பாக சொல்லியிருக்கிறார். எஸ் ஃபோகஸ் சரவணன் ஒரு படத்தை ரிலீஸ் செய்கிறார் என்றால் அது மிகச் சிறப்பான படமாக தான் இருக்கும்” என்றார் இயக்குனர் ஷண்முகம் முத்துசாமி.

“ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன் நடிப்பில் ‘குப்பத்து ராஜா’ படத்தை தயாரித்து வருகிறேன். இங்கு வந்த விருந்தினர்கள் எல்லோரும் எனக்கு மிகுந்த ஊக்கம் அளித்தவர்கள். தேனப்பன் இந்த படம் இந்த அளவுக்கு வந்ததற்கு ஒரு முக்கிய காரணம். விதார்த் எளிமையானவர், மிகவும் உண்மையாக பழகக் கூடியவர். சின்ன படங்களுக்கு திரையரங்குகள் அவ்வளவாக கிடைப்பதில்லை. இந்த ‘வண்டி’ படத்துக்கு எல்லோரும் உதவ வேண்டும்” என்றார் எஸ் ஃபோகஸ் சரவணன்.

“புது இயக்குனருக்கு தயாரிப்பாளர் கிடைப்பது ரொம்ப கஷ்டம். அப்படி கிடைத்த பின்னரும், இந்த படம் தயாரிப்பில் நிறைய பிரச்சினைகளை சந்தித்தது. ஒரு நல்ல தயாரிப்பாளர் இருந்தால் தான் நல்ல படம் வரும், அப்படி ஹஷீர் எனக்கு ஒரு நல்ல தயாரிப்பாளராக அமைந்தார். விதார்த் கேமராவுக்கு முன்னால் தான் நடிப்பார், மற்றபடி மிகவும் நல்ல மனிதர். இந்த படம் 70 நாட்கள் படப்பிடிப்பில் இருந்தது, 55 நாட்கள் இரவு பகலாக படப்பிடிப்பு நடந்தது. மொத்த குழுவின் கடின உழைப்பினால் தான் இது சாத்தியமானது” என்றார் இயக்குனர் ரஜீஷ் பாலா.

“பைக்கை வைத்து நீண்ட நாளைக்கு பிறகு ஒரு படம். தொடர்ந்து போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். இதில் இயக்குனர் என்னுடைய தோற்றம் தனித்துவமாக இருக்க நிறைய மெனக்கெட்டிருக்கிறார். இதுவரை நடித்ததிலேயே சிறப்பான போலீஸ் கதாபாத்திரம் இதுவாக தான் இருக்கும்” என்றார் நடிகர் ஜான் விஜய்.

“விதார்த் ஒரு நல்ல நடிகர் என்று எல்லோரும் சொல்கிறார்கள், ஆனால் அதையெல்லாம் தாண்டி அவர் ஒரு போராளி. நீண்ட காலமாகவே போராடி வருகிறார். ‘பொல்லாதவன்’ படத்துக்கு பிறகு பைக்கை வைத்து ஒரு படம், வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.

“பத்திரிக்கையாளர்கள் பாராட்டில் இன்று ‘மேற்கு தொடர்ச்சி மலை’ 3-வது வாரமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி, லெனின் பாரதி அளவுக்கு எனக்கும் மகிழ்ச்சி. ‘வீரம்’ படத்தின்போது எனக்கு இந்த ‘வண்டி’ கதையை சொல்ல வந்தார்கள். ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் 4 கேமரா வைத்தெல்லாம் படத்தை எடுத்தார்கள். இயக்குனர் ரொம்பவே கஷ்டப்படுத்தினார். எங்கள் எல்லோருக்கும் அவரை பார்த்தாலே பயம். ‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா உடன் நடிக்கும்போது இயக்குனர் ராதாமோகன் என் நடிப்பை பாராட்டி தள்ளினார். அதற்கு காரணம் இந்த படத்தில் நான் எடுத்த பயிற்சி தான். இந்த படத்தில் ஒரு ஃபிரேம் மாறினாலும் படம் புரியாது. அப்படிப்பட்ட ஒரு ஹைப்பர்லிங் படம். தயாரிப்பில் இருக்கும்போது சில பிரச்சினைகள் நடந்தது, அப்போது தேனப்பன் சாரிடம் சென்றேன். அவர் தான் இதை சுமூகமாக முடித்து வைத்தார். ‘குப்பத்து ராஜா’ என்ற ஒரு படத்தை எடுத்துக் கொண்டிருக்கும்போது சரவணன் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முன் வந்தது பெரிய விஷயம். அது தான் படத்தின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை. இந்த படத்துக்கு சூரஜ் ஒரு பாட்டு போட்டுக் கொடுத்தார். இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் பாடலாக அது அமைந்திருக்கும். ஆனால் அது படத்தில் இல்லை, அந்த பாடலில் நான் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அடுத்து ஒரு கேங்க்ஸ்டர் படம் நடிச்சிருக்கேன். எல்லா வகையான படங்களிலும் நடிக்க எனக்கு விருப்பம் இருக்கிறது. என்னை ஒரு கூண்டில் அடைத்து விட வேண்டாம்” என்றார் நடிகர் விதார்த்.

இந்த விழாவில் நிர்வாக தயாரிப்பாளர் கர்ணா ராஜா, ஸ்டண்ட் சிறுத்தை கணேஷ், பாடலாசிரியர் சங்கீத், நடன இயக்குனர் ஜாய் மதி, நாயகி சின்னு குருவில்லா, எடிட்டர் ரிஷால் ஜெய்னி, கலை இயக்குனர் மோகன மகேந்திரன், நடிகர்கள் ஸ்ரீராம் கார்த்திக், கிஷோர், ரவி, இயக்குனர்கள் ராகேஷ், சினிஷ், எடிட்டர் சிவா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

 

Read previous post:
0a1e
தொட்ரா – விமர்சனம்

உடுமலைப்பேட்டையில் சங்கரும், அவரது காதல் மனைவி கவுசல்யாவும் பட்டப்பகலில் நடுரோட்டில் கூலிப்படையினரால் வெட்டி சாய்க்கப்பட்ட சிசிடிவி காட்சி உங்களுக்கு நினைவிருக்கும். அந்த உண்மைக் காட்சியை அதே கோணத்தில்

Close