தொட்ரா – விமர்சனம்

உடுமலைப்பேட்டையில் சங்கரும், அவரது காதல் மனைவி கவுசல்யாவும் பட்டப்பகலில் நடுரோட்டில் கூலிப்படையினரால் வெட்டி சாய்க்கப்பட்ட சிசிடிவி காட்சி உங்களுக்கு நினைவிருக்கும். அந்த உண்மைக் காட்சியை அதே கோணத்தில் அப்படியே மறுபடைப்புச் செய்து, இப்படத்தின் நாயகன் பிருத்விராஜனையும், நாயகி வீணாவையும் ரவுடி கும்பல் வெட்டிச் சாய்ப்பதாக படத்தை ஆரம்பிக்கிறார்கள். பிருத்விராஜன் யார்? வீணா யார்? அவர்களை வெட்டிச் சாய்க்க ரவுடிகளை ஏவியது யார்? ஏன்? “தொட்ரா… தொட்ரா பாக்கலாம்” என்று யாருக்கு யார் சவால் விடுகிறார்கள்? என்ற கேள்விகளுக்கு விடை தேடி நகருகிறது திரைக்கதை.

பெரியார் சமத்துவபுரத்தில் வசிக்கும் ஏழை தலித் மாணவர் பிருத்விராஜன். அவர் படிக்கும் கல்லூரியில், ஆதிக்க நடுச்சாதியைச் சேர்ந்த பணக்காரப்பெண் வீணாவும் படிக்கிறார். சில பல சந்திப்புகள் மற்றும் துரத்தல்களுக்குப் பின் இருவரும் காதலர்கள் ஆகிறார்கள்.

வீணாவின் அப்பா கஜராஜ், அண்ணன் எம்.எஸ்.குமார், அண்ணி ‘மைனா’ சூசன் என குடும்பத்தின் மொத்தப் பெரியவர்களும் சாதிவெறி தலைக்கேறியவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு வீணா – பிருத்விராஜன் காதல் தெரியவர, அதை சீர்குலைக்க பிருத்விராஜனை அடித்து வெளுப்பது, அவரது வீட்டை, டூவீலரை கொளுத்துவது, வீணாவுக்கு வேறொருவருடன் அவசர அவசரமாக திருமண ஏற்பாடு செய்வது என சகல வழிகளிலும் முயலுகிறார்கள்.

இனியும் பொறுக்க முடியாது என்ற கட்டத்தில் காதல் ஜோடி வீட்டையும், ஊரையும் விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்கிறது. இதனால் ஏற்பட்ட அவமானம் மற்றும் மனவேதனை காரணமாக வீணாவின் அப்பா கஜராஜ் செத்துப்போகிறார்.

0a1f

தங்கை வீணா குடும்பம் நடத்திக்கொண்டிருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து அங்கு அடியாட்களுடன் வரும் அண்ணன் எம்.எஸ்.குமார், தங்கையை கணவர் பிருத்விராஜனிடமிருந்து பிரித்து, தன் வீட்டுக்கு அழைத்து வந்துவிடுகிறார்.

காதலர்களை சேர்த்து வைக்கவும், அவர்களை பாதுகாக்கவும் ‘காதலர் முன்னேற்ற கழகம்’ என்ற கட்சி நடத்துவதாகச் சொல்லித் திரியும் ஏ.வெங்கடேஷிடம், தன் காதல் மனைவி வீணாவை மீட்க உதவி கோரி தஞ்சம் அடைகிறார் பிருத்விராஜன்..

வெங்கடேஷ் பசுத்தோல் போர்த்திய புலியாக, கடைந்தெடுத்த அயோக்கியனாக இருக்கிறார். வேலைவெட்டி இல்லாத இளைஞர்களுக்கு பணம் கொடுத்து பணக்காரப் பெண்களை பொய்யாய் காதலிக்க வைத்து அவர்களை சேர்த்து வைப்பது, பின்னர் அப்பெண்களின் குடும்பத்தாரிடம் “உங்க பொண்ணு உங்களுக்கு திரும்ப வேணும்னா இத்தனை லட்சம் தர வேண்டும்” என பேரம் பேசி பணம் கறப்பது, பணம் கறக்க முடியவில்லை என்றால், அந்த பெண்களை தான் அனுபவித்துவிட்டு மும்பை விபசார விடுதிக்கு விற்றுவிடுவது – இவை தான் வெங்கடேஷ் செய்யும் “சமூக சேவை”கள்..

இந்த ‘நாடக காதல்’ புரோக்கருக்கும், ஆதிக்க நடுச்சாதி வெறியர்களுக்கும் இடையில் சிக்கிக்கொள்ளும் பிருத்விராஜன் – வீணா தம்பதியரின் வாழ்க்கை எப்படி சிதைந்து சின்னாபின்னமாகிறது என்பது மீதிக்கதை.

நாயகனாக வரும் பிருத்விராஜன் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை குறைவில்லாமல் செய்திருக்கிறார். நாயகியாக வரும் கேரள இறக்குமதி வீணா வெள்ளாவியில் வைத்து வெளுத்தது போல் முகத்திலடிக்கும் வெளுப்பாகவும், சற்று கூடுதலாகவே சதைப் பிடிப்பாகவும் இருக்கிறார். ‘ஏதோ நம்மால் முடிந்தது இவ்வளவு தான்’ என்பது போல் நடித்துவிட்டுப் போகிறார்.

நாயகியின் அண்ணனாக வரும் எம்.எஸ்.குமார் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். ‘நாடக காதல்’ புரோக்கராக வரும் ஏ.வெங்கடேஷின் கதாபாத்திரமும், நடிப்பும், ஆபாசமும் குமட்டலை ஏற்படுத்துகிறது. தீப்பெட்டி கணேசன், கூல் சுரேஷ், கஜராஜ் உள்ளிட்ட ஏனைய கதாபாத்திரங்களும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை.

செய்தித்தாள் படிக்கிற எல்லோருக்கும் ஏகப்பட்ட உண்மைக் கதைகள் தெரிந்திருக்கும். ஆனால் அவர்கள் எல்லோரும் திரைப்பட இயக்குனர்களாக ஆக முடியாததற்குக் காரணம், அந்த உண்மைக் கதைகளை சுவாரஸ்யமான திரைக்கதைகளாக மாற்றும் வித்தை அவர்களுக்குத் தெரியாதது தான். அப்படிப்பட்டவர்களில் ஒருவரான மதுராஜ் எப்படியோ இந்த படத்தின் மூலம் இயக்குனராகி விட்டார். நாயகன் – நாயகி காதல் தொடர்பான சம்பவங்கள் உள்ளத்தைத் தொடுவதாக இல்லை. சாதிவெறியர்கள் தரப்பு நியாயங்களைச் சொல்வதற்காகவும், அம்பேத்கரியர்களுக்கு எதிராக வன்னியர் சங்க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சொன்ன ‘நாடக காதல்’ எனும் பொய் குற்றச்சாட்டை “மெய்”ப்பிப்பதற்காகவும், கவுண்டர் சாதிவெறியனான யுவராஜை நினைவூட்டும் கதாபாத்திரம் திருந்தி தன் சாதிவெறியை கைவிடுவதாக காட்டுவதற்காகவும் மெனக்கெட்டிருக்கும் இந்த இயக்குனர், சமூகத்தை மாற்றி அமைப்பதற்காக சாதி மறுப்பு காதல் திருமணங்களை மெய்யாகவே ஆதரித்து களமாடும் போராளிகளை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. இத்தனை குளறுபடிகளுக்குப்பின் படம் முடிகிறபோது, “சாதி தான் சமூகம் என்றால், வீசும் காற்றில் விஷம் பரவட்டும்” என்ற அம்பேத்கரின் வாசகத்தை கார்டாக போடுவதாலேயே இவர் சாதி எதிர்ப்பு கருத்தியலாளராக அங்கீகரிக்கப்பட்டுவிட மாட்டார்.

‘தொட்ரா’ – போடா டேய்…!