“மக்கள் விரோத” அரசும், “தேச விரோத” எதிர்ப்பும்!

தேசமென்றால் என்ன? அது எப்படி உருவாகிறது என்ற கேள்வி நமது பள்ளிக்கல்வியில் இடம் பெறுவதில்லை. ஆனால் உலகில் உள்ள தேசங்கள், அதன் கொடிகள், அவற்றின் நாணயங்கள், தலைநகரங்கள், தேசிய கீதம் பற்றிய தகவல்கள் அனைத்தையும் பொது அறிவு என்ற பெயரில் குழந்தைகளுக்கு போதிக்கிறோம். கடவுள் பக்தியைப் போல தேச பக்தியும் அவசியம் என்கிறோம். கடவுளை பார்க்காமலேயே நம்புவது போல, தேசத்தையும் நம்பச் சொல்கிறோம். தேசிய கீதம் பாடினால் எழுந்து நிற்கச் சொல்கிறோம். கொடி வணக்கம் செய்யச் சொல்கிறோம். இவ்வாறெல்லாம் செய்யும்போது தேசம் என்பது கேள்விக்கு அப்பாற்பட்ட இருப்பென்று போதிக்கிறோம். இது ஒருபுறம். அதைவிட நுட்பமாக இன்னொரு காரியத்தையும் செய்கிறோம். அது வரலாற்றுப் பாடம்.

வரலாற்று பாடத்தில் இந்திய வரலாறு என்று படிக்கிறோம். சோழ மன்னன், கலிங்க அரசனுடன் போரிட்டது இந்திய வரலாறு என்கிறோம். அப்படியென்றால் அது உள்நாட்டுப் போரா என்று குழந்தைகள் கேட்பதில்லை; ஆசிரியர்களும் கேட்பதில்லை. ஏனெனில் இந்திய தேசம் உருவானது 1947-இல்தான் என்பதையும், அதன் புவிப்பரப்பில் பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்தவற்றையே அதன் வரலாறாக படிக்கிறோம் என்பதையும் யூகித்துக்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட யூகத்தின் மூலம் இன்றைய இந்திய தேசத்தின் வேர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயே முளைவிடத் தொடங்கிவிட்டதாக நம்பிக்கை கொள்கிறார்கள். அதாவது தேசம் என்பது புதிதாக இருந்தாலும், அது எல்லா காலத்திலும் இருந்தது போலத்தான் என்கிறார்கள். நீங்கள் இன்று புதிதாக ஒரு கடவுளை உருவாக்கினால் அந்த கடவுள்தான் பிரபஞ்சங்கள் அனைத்தையும் படைத்தார் என்று நீங்கள் கூறலாம். அந்த கடவுளை நம்ப முன்வருபவர்கள் அதனை ஏற்பார்கள். அதுபோல இந்தியா என்று ஒரு தேசத்திற்கு பெயரிட்டு ஒரு புவிப்பரப்பை கோடுபோட்டு காண்பித்த பிறகு, அதில் மூவாயிரம் ஆண்டுக்கு முன் ஒரு சம்பவம் நிகழ்ந்திருந்தாலும் அது இந்திய வரலாறுதான்.

இப்படியாக ஒரு தேசம் உருவகிக்கப்பட்டு உருவாக்கப்பட்டு நம்பப்படுவது ஒரு மானுடவியல் செயல்பாடு. மனிதர்கள் இதை செய்கிறார்கள். வெகுகாலமாக மனிதர்கள் சிறு, சிறு குழுக்களாக இயங்கினார்கள். இனக்குழுக்களில் தலைவர்கள், பூசாரிகள் இருந்தார்கள். இந்த குழுக்களெல்லாம் சேர்ந்து ஒரு பொது தலைவனை அரசனாக்கும் பழக்கம் வந்த்து. அதில் என்ன இலாபம் என்றால், பொது தலைவன் உருவாகும்போது குழுக்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகளை சண்டை போடாமல் அவனுடைய பஞ்சாயத்தின் மூலம் தீர்த்துக்கொள்ளலாம். எல்லோரும் சேர்ந்து பொது தலைவனின் கீழ் அணி திரண்டு பிற சிறு குழுக்களை வெல்லலாம். அவர்களையும் பொதுக் கட்டுப்பாட்டில் கொண்டுவரலாம். உற்பத்தி உபரிகளை தனித்தனியாக செலவிடாமல் பொதுவில் குவித்து செலவிடும்போது சில முக்கிய வசதிகளை ஏற்படுத்தலாம் (அசோகர் சாலைகள் அமைத்தார்; குளங்களை வெட்டினார் என்று இன்னபிற காரியங்களை மனப்பாடம் செய்ய குழந்தைகளை பயிற்றுவிக்கிறோம்).

இப்படியாக சிறு குழுக்களைவிட சிறிய அரசுகளும், சிறிய அரசுகளைவிட பெரிய அரசுகளும் மனிதர்களின் ஆற்றல்களை ஒருமிக்க செய்வதால் அரசுருவாக்கமே வரலாற்றுரீதியான வளர்ச்சி என்று பதினெட்டாம் நூற்றாண்டு மானுடவாதமும், வரலாற்று வாதமும் வரையறுத்தது. ஆனால் அதைவிட சிறப்பான வளர்ச்சி என்பது பேரரசுகள் தேசங்களாக மாறுவதுதான் என்றும் ஒரு புரிதல் ஏற்பட்டது. அப்படியென்றால் என்ன?

அரசு என்பது வெறும் நிர்வாக இயந்திரம். வரி வசூலிக்கும், சட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்தும், ஒருவரது சொத்துகளை பாதுகாக்கும் இயந்திரம். அதன் அதிகாரம் பிறரால் கட்டுப்படுத்தப்படாமல் பிறரை கட்டுப்படுத்துவதாக இருப்பதன் பெயர் இறையாண்மை. வெகுகாலமாக இந்த இறையாண்மையை மன்னன் என்ற தனிநபரிடம் கொடுத்துவிட்டு, அமைச்சர்கள், மதகுருக்கள், பிரபுக்கள், படைத்தலைவர்கள் என்று பலரும் அந்த அதிகாரத்தில் பங்குபெற முட்டி மோதிக்கொண்டிருப்பது பழக்கம். அரண்மனைகளெல்லாம் நிரந்தரமாக சதிகளால் நிரம்பியிருக்கும்.

இவ்வாறு அதிகாரம் குவிக்கப்படுவது மனிதர்களின் கூட்டியக்கத்தின் ஆற்றலை அதிகப்படுத்தாமல் எதேச்சதிகாரத்தின் காரணமாக குறைப்பதாக இருந்தது. தனி நபர்களான மன்னர்களின் பலவீனங்கள் கூட்டியக்கத்தின் ஆற்றலை சிதறச் செய்தன. இதனை எப்படி சமாளிப்பது என்பதை புதிதாக உருவாகத் தொடங்கிய முதலாளி வர்க்கம் ஆராய்ந்தபோது மன்னனின் அதிகாரத்தை மக்கள் அனைவரின் ஒப்புதல் அடிப்படையிலான அதிகாரம் என்று வரையறை செய்யலாம் என்ற எண்ணம் வந்தது. இது வரலாற்றுவாத, மானுடவாத இணைப்பின் முழுமை. இது முழு வடிவம் பெற இருநூற்றுச் சொச்சம் வருடங்கள் ஆகியது எனலாம். அமெரிக்க சுதந்திரமும், ஃபிரெஞ்சு புரட்சியும் இதற்கு முக்கிய உந்துதல்களாக அமைந்தன. ஏற்கனவே இருந்த பிரிட்டிஷ் நாடளுமன்ற முறையும் விரிவாக்கம் கொண்டதன் மூலம் பங்களித்தது.

சுருக்கமாகச் சொன்னால், ஆஃப் பாயிலில் மஞ்சள் கரு நடுவில் புடைத்திருப்பதுபோல இறையாண்மை தேங்கியிராமல் ஆம்லெட்டில் எங்கும் பரவியிருப்பது போல பரவியிருந்தால் கூட்டியக்கத்தின் ஆற்றல் பன்மடங்கு அதிகரிக்கும் என்பது வரலாற்றுவாத நம்பிக்கை. அதன் அடிப்படையில் மக்களாட்சி என்ற கருத்து வலுப்பெற, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்கள் பிரதிநிதிகள் சட்டத்தின் துணையுடன் ஆட்சி செய்யும் தேசிய இறையாண்மை உருவாக, அரசு தேசமாக மாறியது. அரச விசுவாசம் என்ற கடமை இப்போது தேசப்பற்றாக மாறியது.

இந்த வடிவத்தில் இறையாண்மை இயங்கவேண்டுமென்றால் தேசத்திற்கு திட்டவட்டமான எல்லையும், அந்த எல்லைக்குள் வசிப்பவர்கள் அதன் இறையாண்மை ஊடுறுவப்பட்ட குடிமக்கள் என்ற நிலையும் அவசியம். உதாரணமாக பாண்டிய நாட்டு விவசாயி சோழ நாட்டு கிராமம் ஒன்றிற்கு இடம்பெயர்ந்து வாழ்வதற்கு அந்த சோழ நாட்டு கிராம மக்களின் அனுமதி மட்டுமே வேண்டும். பாண்டிய நாட்டு பாஸ்போர்ட்டு, சோழ நாட்டு விசா எல்லாம் தேவை கிடையாது. அந்த கிராமம் சோழ நாட்டில் இருக்கிறதா, பாண்டிய நாட்டில் இருக்கிறதா என்பதே அவ்வப்போது மாற்றத்திற்கு உள்ளாகவும் செய்யலாம். பண்டைய அரசுக்கு புவியியல் மையம் உண்டே தவிர திட்டவட்டமான எல்லைகள் கிடையாது. இன்றைய தேசத்திற்கு திட்டவட்டமான புவியியல் எல்லைகள் உண்டே தவிர மையம் கிடையாது.

பஞ்சம் பிழைக்கவென்று பல நாடுகளை கடந்து பயணம் செய்து நீர்நிலைகளுக்கு அருகில் நிலம் இருந்தால் குடியேறிக்கொள்ளும் மக்கள் தொகுதிகள் வரலாறு நெடுகிலும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் விளைவிப்பதில் ஒரு பகுதியை வரியாக செலுத்துவதைத் தவிர அரசிற்கும் மக்களிற்கும் தொடர்பு எதுவும் பெரிதாகக் கிடையாது. ஆனால் இன்றைக்கு நீங்கள் கருப்பூரிலிருந்து திருச்சிக்கு வந்து பன்னிரெண்டு மணிக்கு தெப்பக்குளம் பக்கம் நடந்தால் சந்தேக கேஸ் என்று போலீஸ் பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள். ஆதார் அட்டை, வோட்டர் அடையாள அட்டை எல்லாம் காண்பித்தால் ஓரமாக உட்காரச்சொல்லி காலையில் விடுவார்கள். ஒவ்வொரு மனுஷியும் இன்று அரசி மட்டுமல்ல, அரசால் தனிப்பட்ட முறையில் அடையாளப்படுத்தப்பட்டவள், உருவக நிலையில் அவளும் ஆள்பவள். நடைமுறையில் ஆளப்படுபவள். அவள் பெயரால் அவளுக்குத் தெரியாமலேயே அவளுடைய பிரதிநிதிகளால் சட்டங்கள் இயற்றப்பட்டு, அவற்றால் கட்டுப்படுத்தப்படுபவள்.

பண்டைய கிரேக்க நகரங்களில் பிரதானிகள் அனைவரும், அதாவது சொத்துரிமை பெற்ற அனைவரும், அடிமைகள் நீங்கலாக, ஒன்றாகக் கூடி விவாதித்து முடிவுகள் எடுப்பதாக கூறப்படுவது உண்டு. மக்கள் தொகை அடர்த்தியான தேசத்தில் கிராம பஞ்சாயத்துகூட அப்படி செயல்பட முடியாது. ஒரு வீதிக்கு ஒரு பிரதிநிதி என்று தேர்ந்தெடுத்து அந்த பிரதிநிதிகள் மட்டுமே கூடி முடிவுகளை எடுக்க முடியும். மற்ற மக்களின் வேலை பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதுடன் முடிந்துவிடும்.

மக்களாட்சியின் மையத்தில் இந்த பிரதிநிதித்துவம் என்ற மாயம் இருக்கிறது. என்னுடைய பிரதிநிதி ஒரு சட்டத்தினை எதிர்த்து ஓட்டுப் போட்டாலும்கூட, பெருவாரியான மக்கள் பிரதிநிதிகள் ஆதரித்து ஓட்டளித்தால் சட்டம் நடைமுறைக்கு வந்துவிடும். எனக்கு தெரிகிறதோ இல்லையோ, நான் அந்த சட்டத்திற்கு கட்டுப்பட்டவன். மக்களாட்சி என்பது சட்டத்தின் ஆட்சி; சட்டத்தை நடைமுறைப்படுத்துவோரின் ஆட்சி. ஆட்சியை ஒழுங்கமைக்கும் அரசு என்பது தேசத்தின் தூல வடிவம். அதுவே தேசமல்ல. எப்படி சிலை கடவுளாக முடியாதோ அதேபோல அரசும் தேசமாக முடியாது. சிலை உடைந்துவிட்டால், பங்கம் ஏற்பட்டால், கடவுளுக்கு ஒன்றுமாகிவிடாது. வேறு சிலை செய்துகொள்ளலாம். அதைப்போலத்தான் அரசிற்கு என்ன ஆனாலும், தேசம் என்பது பல வடிவங்களில் தொடரவே செய்யும். தேசம் அருவமானது என்பதால் அது பல வடிவங்களை எடுக்கலாம்; பெரிய அடையாளமாகலாம்; அல்லது சிறிய அடையாளமாகலாம். கிழக்கு பாகிஸ்தான் பங்களா தேஷ்-ஆக மாறினாலும், பாகிஸ்தான் தொடரத்தான் செய்கிறது.

தேசமும், அரசும் ஒன்றுதானா?

தேசம் என்பது அனைத்து மக்களையும் உள்ளடக்கிய ஒரு தொகுப்பு என்று பார்த்தோம். ஆனால் அரசு என்பது மக்கள் பிரதிநிதிகள், அவர்கள் இயற்றும் சட்டங்கள், அதிகாரிகள், ஆயுதமேந்திய காவலர்கள், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் ஆகியற்றின் தொகுப்பு. அதாவது தேசம் என்ற பெரிய வட்டத்தின் உள்ளே ஒரு சிறிய வட்டம்தான் அரசு. ஒரு தேசத்தின் குடிமகனாக ஒருவரது உரிமைகள் வேறு. சட்டத்தின் முன்னால் உள்ள கடமைகள் வேறு.

தேசத்தின் குடிமகனான எனக்கு ஒரு சட்டத்தில் ஒப்புதல் இல்லை; நான் என்ன செய்ய முடியும்? அந்த சட்டம் தவறு என்று பிரசாரம் செய்யலாம். ஆனால் சட்டம் நடைமுறையில் இருக்கும்போது பின்பற்றத்தான் வேண்டும்; இல்லாவிட்டால் குற்றவாளியாகிவிடுவேன். “Argue as much as you want but obey” என்றார் இம்மானுவேல் கான்ட். இங்கே சட்டத்தை எதிர்த்துப் பேசக்கூடிய எனது உரிமையில்தான் தேசம் என்ற கருத்தாக்கம் உயிர்பெறுகிறது. சட்டத்திற்கு உட்பட்டு நடக்காவிட்டால் தண்டிப்பது மட்டுமே அரசின் வேலை. ஆனால் எல்லோரும் சட்டத்திற்கு பணிந்துபோவதை மட்டுமே செய்யவேண்டும்; அதை தவிர எதிர்த்துப் பேசக்கூடாது என்றால் அங்கே தேசம் என்ற கருத்தாக்கம் இறந்துவிடும்.

இன்னமும் சுருக்கமாகச் சொன்னால், தேசம் வேறு, அரசு வேறு என்று புரிந்துகொள்வதில்தான் மக்களாட்சி தத்துவத்தின் உயிர்மூச்சே இருக்கிறது. அரசின் செயல்பாடுகளையும், அரசாங்கங்களின் செயல்பாடுகளையும் எதிர்த்து போராடவும், விமர்சிக்கவும், பிரசாரம் செய்யவும் மக்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு. அவை இருக்கும்வரைதான் தேசம், தேசமாக இருக்கும்.

ஆனால் தேசமும் அரசும் ஒன்றென சொல்பவர்கள் பாசிஸ்டுகள். சமீபத்தில் தனக்கு அரசு கொடுத்த விருதை தேசமே கொடுத்த விருது என்று ஜெயமோகன் சொன்னாரல்லவா? அந்த மயக்கத்திலிருந்துதான் பாசிசம் பிறக்கிறது. அரசோ, ஒரு தலைவனோ தாங்களே தேசம் என்று நினைத்துக்கொள்வதே பாசிசம். அர்னாப் கோஸ்வாமி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒவ்வொரு முறையும் தான் கேட்கும் கேள்வி தேசத்தின் கேள்வி என்று சொல்லும்போது பாசிச மனோபாவத்தையே விதைக்கிறார். தேசம் என்பது மனிதர்களின் தொகுப்பு மட்டுமல்ல; முரண்களின் தொகுப்பு. எந்த ஒரு குரலையும் தேசத்தின் குரல் என்று கொள்வது ஆபத்து. தேசம் என்பது பல குரல் கலவை; பேரரவம்.

மக்கள் விரோத அரசு எப்படி உருவாகிறது?

மக்களாட்சியில் எல்லா தனிநபர்களுக்கும் அடிப்படை உரிமைகள் இருக்கின்றன. அந்த உரிமைகள் அவர்களை சமமானவர்களாக நிறுவுகின்றன. யாரும் யாருக்கும் அடிமையில்லை. ஆனால் பாருங்கள். உரிமைகளில் சொத்துரிமை என்பதும் உண்டு. ஒரு மனிதன் தன் திறமைக்கு சாத்தியமான அளவில் தாவர ஜங்கம சொத்துக்களை சேகரிக்க உரிமையுள்ளவன். அதை அவன் ஆண்டு, அனுபவித்தபின் அவன் பிள்ளைகள் மற்றும் யாருக்கும் கொடுக்க உரிமையுள்ளவன். சொத்து தானாகவே வம்சாவழியாக வரும். அதாவது ஒருவன் யாருக்கு சொத்து என்று சொல்லாமல் செத்துவிட்டால் அவன் பிள்ளைக்கு வந்துவிடும். தாத்தாவின் சொத்தில் பேரப்பிள்ளைகளுக்கு உரிமை உண்டு. இப்படியிப்படி. இதனால் என்ன ஆகலாம்? சொத்து ஒரு சில குடும்பங்களில் குவியலாம். அனைத்து உரிமைகளும் அனைவருக்கும் சமம் என்றாலும், பணம் காசு விஷயத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கிறது. இதன் காரணமாக பணம் உள்ளவர்கள் அரசு அதிகாரத்தை தங்கள் வசப்படுத்துவது சுலபமாக நடந்துவிடும். அப்போது அரசு மக்கள் தொகுதியில் சிலருக்கு ஆதரவாகவும், பலருக்கு எதிராகவும் இயங்கும் வாய்ப்பு உருவாகிவிடுகிறது. விஜய் மல்லையா கோடிக்கணக்கில் கடனை திருப்பித் தரவில்லை என்றால் ஒன்றும் நடக்காது. ஆனால் சிறு விவசாயி கடனை திருப்பித் தரவில்லையென்றால் நிலம் பறிபோகும் நிலை வரும். தூக்கில்தான் தொங்கவேண்டும்.

சரி, பொதுவுடமை சமூகத்தில் தனிநபரின் சொத்துரிமை மட்டுப்படுத்தப்பட்டு எல்லோருக்கும் சற்றேறக்குறைய ஒரேயளவுதான் சொத்துக்கள் உள்ளன என்று செய்துவிடுகிறோம் என வைத்துக்கொள்வோம். மற்றபடி எல்லா சொத்துக்களும் அரசிடம் குவிந்துவிடும். அப்போது என்ன பிரச்சினை? என்னவென்றால் அரசில் பங்கு வகிப்போர் ஏராளமான அதிகாரங்களை பெற்றவர்களாகவும். பிறர் அந்த அளவு அதிகாரம் இல்லாமலும் இருப்பர். அப்போதும் அதிகாரமற்றவர்களுக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம் நடக்கும். ரஷ்யாவில் செர்னன்கோ என்ற ஒரு வயதான மனிதர் நாட்டின் அதிபரானார். அவர் அடிப்படையில் எளிய விவசாயி. அவருடைய அம்மா, வயதான மூதாட்டி அவரை பார்க்க வந்தார்களாம். கிரெம்ளின் மாளிகைக்கு கூட்டிப்போயிருக்கிறார்கள். அவர் மிகுந்த வியப்படைந்து “மகனே, நீ இந்த மாளிகையிலா தங்கியிருக்கிறாய்” என்று கேட்டுள்ளார். மகன் பெருமையாக “ஆமாம், அம்மா” என்றாராம். மூதாட்டி சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு அவரிடம் ரகசியமாக “இந்த கம்யூனிஸ்டுகளிடம் ஜாக்கிரதையாக இரு; அவர்கள் வந்தால் எல்லாவற்றையும் பிடுங்கிக்கொள்வார்கள்” என்றாராம். ஆள்வோருக்கும், ஆளப்படுவோருக்கும் இடையிலான கடுமையான ஏற்றத்தாழ்வு பொதுவுடமை சமூகத்திலும் தவிர்க்க முடியாததாகவே உள்ளது.

தேர்தல் சார் மக்களாட்சியில் இன்னொரு பிரச்சினை, பெரும்பான்மையாக உள்ள ஒரு சமூக அடையாளம் எளிதாக அரசினை ஆட்டிப்படைக்க வல்லதாக மாறுவதுதான். சிறிய எண்ணிக்கையிலுள்ள மக்கள் குழுக்கள் மெல்ல, மெல்ல தங்களை, ஆற்றலை இழந்து ஒடுங்குகின்றன. இந்த நிலையில் சிறுபான்மையினர் நலனை காப்பது அவசியமாகிறது.

சுருக்கமாகச் சொன்னால் மக்களாட்சியில் அதிகாரத்தை அனைவருக்கும் பகிர்வதாகச் சொன்னாலும், அது ஆங்காங்கே குவிக்கப்பட்டு பிற மக்களுக்கு விரோதமாக செயல்படும் சாத்தியத்துடனேயே விளங்குகிறது. இதனால் அரசு என்பது சில மக்கள் தொகுதிகளுக்கு விரோதமாக இயங்குவது இயல்பாகிறது. அதாவது தங்களுக்கு சரியான நீதி கிடைக்காத்தாக உணரும் மக்கள் பகுதிகள் அரசினை தங்களுக்கு விரோதமானதாக பார்க்க தொடங்குவது தவிர்க்க இயலாதது..

அரசு எதிர்ப்பாளர்களா, தேசத் துரோகிகளா?

அரசு ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகுதிக்கு நியாயமாக நடந்துகொள்ளவில்லை என்றால், அந்த மக்கள் தொகுதி அரசை எதிர்த்து போராடத் தொடங்குகிறது. உடனே அவர்களுக்கு எதிரானவர்கள் அரசை தேசத்திற்கு சமன்படுத்தி அரச எதிர்ப்பாளர்களை தேசத் துரோகிகள் என்று வர்ணிக்கிறார்கள். பொதுவாக சுரண்டப்படும் தொழிலாளர் வர்க்கத்திற்காகவோ, விவசாயிகளுக்காகவோ போராடும் கம்யூனிஸ்டுகளுக்கு உடனடியாக இந்த தேசத்துரோகி பட்டம் கிடைத்துவிடும். எந்த ஒரு பாதிக்கப்பட்ட பிரிவின் சார்பாகவும் அரசினை குறை சொல்லி போராடுபவர்கள் தேசத்திற்கு எதிரானவர்கள் என்று வர்ணிக்கப்படுவது சாத்தியமாகும். பெரிதும் மையப்படுத்தப்பட்ட அரசமைப்பும், எண்ணிக்கையடிப்படையில் பெரும்பான்மையால் உருவாகும் அரசாங்கமும் விளிம்புகளில் தொடர்ந்து அதிருப்தியினை உருவாக்கியபடியேதான் இருக்கும். விளிம்பு நிலை போராளிகள் தேச விரோதிகள் ஆகிவிடுவார்கள். ஆயுதம் ஏந்தாமல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கும் இரோம் ஷர்மிளாவும் தேசவிரோதிதான்.

பல்வேறு மொழிபேசும், அடர்த்தியான பிரதேச கலாசார அடையாளங்களும், நீண்டகால வரலாற்று பின்னணிகளும் உள்ள இந்தியா போன்ற தேசத்தை உருவாக்கும்போது மொழிகள், பிரதேசங்கள், வரலாறுகள் குறித்த நுண் உணர்வும். மிகவும் பண்பட்ட நிலையிலான பரஸ்பர மரியாதையும் தேவை. மிகவும் கடினமான இந்தப் பணியினை தேசத்தின் மிகச்சிறந்த தலைவர்களில் ஒருவரான நேரு போன்றவர்கள்கூட சரிவர மேற்கொள்ள இயலவில்லை. மிக வலுவான மைய அரசை கட்டமைப்பது அவசியம் என்ற எண்ணம் உருவாவதை தவிர்க்க முடியவில்லை. பாகிஸ்தானும், சீனமும் இராணுவமயமாதலுக்கு காரணமாக மாறுவதையும் தவிர்க்க முடியவில்லை. சர்வதேச முதலீட்டியம் தேசம் என்ற கம்பெனியை உருவாக்க தந்த வரைபடங்களுக்கு மாற்றாக வித்தியாசமான அரசியல் இலட்சியம் எதையும் உருவாக்க முடியவில்லை. இது காந்தீயத்தின் முழு தோல்வி.

ஒட்டுமொத்த கூட்டியக்கத்தின் ஆற்றலால் அனைவருக்கும் நல்வாழ்வு என்ற கற்பிதம்; மூலதன உருவாக்கமாக மூதலீட்டிய குவிப்பினை மையப்படுத்தியே செயல்பட வேண்டிய கட்டாயத்தால் மிகப்பரவலான அதிகார சமச்சீரின்மையையும், சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தீவிரமடைவதையும் தவிர்க்கமுடியாமல், பொய்த்துப்போவதே தேசீயத்தின் சோகக்கதை. சுருக்கமாகச் சொன்னால் மானுட வரலாற்றின் வளர்ச்சி என்பது, முதலீட்டியத்தின் வளர்ச்சியாக குறுகிப்போவது. இது தொடர்ந்து வெறுமைகளையும். நிராசைகளையும், கோபங்களையும் தூண்டுகிறது. தங்கள் அதிருப்தியின் காரணமாகவும். கலாசார தனித்துவங்கள் காரணமாகவும் பிரதேச மக்கள் திரள்கள் மீண்டும் தங்களுக்கான தேசீயத்தை கனவு காண முன்வருகின்றன. மானுடக்கனவுகளிலேயே இந்த இறையாண்மைக் கனவுக்கு மிகப்பெரிய கவர்ச்சி இருப்பதால் மிகச்சுலபமாக இளைஞர்கள் தேச விடுதலைக்காக தற்கொலைப் படையாக மாறவும் துணிகிறார்கள்.

பாசிஸ்டுகளுக்கு வேலை சுலபமாகிறது. எல்லா அதிருப்திகளையும் அவர்கள் பெரும்பான்மை அரசுமையவாத தேசப்பற்றால் முறியடிக்க விரும்புகிறார்கள். இந்தியாவில் சிறுபான்மை மத அடையாளங்களுக்கு எதிராக பெரும்பான்மை இந்து அடையாளத்தை கட்டமைப்பதன் மூலம் இந்த பாசிச உருவாக்கத்தை செயல்படுத்தும் விழைவே தற்கால அரசியலின் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. வரலாற்றுரீதியான இந்து மத அடையாளவாதத்தால் மிகவும் பாதிக்க்பட்ட தலித் மக்களும், சிறுபான்மையினரும் இந்து அடையாளவாதத்தின் பொது எதிரிகளாக மாறுவது தவிர்க்க முடியாததாகிறது.

இந்து மதத்தின் நிறுவன சனாதன மூலக்கூறுகள் சாதீய ஏற்றத்தாழ்வை சாராம்சமாக கொண்டுள்ளதால், நவீன இந்து அரசியல் அடையாளம் எவ்வளவு முயன்றாலும் தலித் மக்களை தங்கள் பாசிச அணிதிரட்டலுக்குள் கொண்டுவர முடிவதில்லை. வரலாறு நெடுகிலும் உழைப்புச் சுரண்டலுக்கு உட்பட்டு அதன் மேற்கட்டுமானமாகவே தீண்டாமை போன்ற கலாசார கட்டுமானங்களுக்கும் ஆட்பட்ட தலித் மக்கள், தாங்களாக அணிதிரள்வதை தவிர, பொருளாதார ஏற்றத்தாழ்வை மையப்படுத்தும் இடதுசாரி அரசியலால் ஈர்க்கப்படுமளவும், அல்லது பார்ப்பனீய எதிர்ப்பு பகுஜன் அரசியலால் ஈர்க்கப்படுமளவும் ஒருநாளும் இந்து அடையாள அரசியலால் ஈர்க்கப்படப் போவதில்லை. சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லீம்கள் அவர்களது கலாசார அடையாள வேறுபாட்டின் விளைவாக பெருமளவு பொருளாதார வளர்ச்சியிலிருந்து விலக்கப்பட்டதால் இன்று நலிவுற்ற சமூகத்தினராக மாறியுள்ளது அவர்களை சுலபத்தில் அதிருப்தியாளர்களாக மாற்றுகிறது. இவர்களின் கூட்டுத்தொகை கிட்டத்தட்ட முப்பது சதவீதமாக இருப்பது பாசிசத்தின் வளர்ச்சியை தடை செய்வதாக இருக்கிறது. அதற்கு மேல் பார்ப்பனீய இந்து அடையாளத்துடன் இணக்கம் கொள்ளாத இடைநிலை நிலவுடமை சாதிகளின் பெரும்பான்மையும் பாசிச உருவாக்கம் முழுமையடைவதை இந்தியாவின் பல பகுதிகளில் தடைசெய்பவையாக இருக்கின்றன. ஆனாலும் தேர்தல் அரசியலில், மக்களின் அதிருப்தியை பயன்படுத்தி, பிற கட்சிகளின் ஊழல் போக்கினை முன்நிறுத்தி, எப்படியாவது பாசிச அரசியலை முன்னெடுக்க பாரதீய ஜனதா கட்சி முயல்கிறது. அதற்கு காஷ்மீர் பிரச்சினை முக்கியமான எரிபொருள்.

காஷ்மீர் பிரச்சனையானது ஏன்?

இந்தியா முழுவதும் பிரிட்டிஷ்காரர்களுடன் சமரசம் செய்துகொண்டு அவர்களுக்கு வரி செலுத்திக்கொண்டிருந்த குட்டி சமஸ்தான அரசர்கள் ஐநூற்று சொச்சம் இருந்தார்கள். இவர்கள் அதிகாரம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. மிகவும் சிக்கலான ஒரு அரசியல் ஏற்பாட்டில் அவர்களிடம் ஒரு உள்ளீடற்ற கிரீடம் (மானுடவியலாளர் நிக் டர்க்ஸின் புதுக்கோட்டை சம்ஸ்தானம் பற்றிய நூலின் பெயர் ”The Hollow Crown”), போலி இறையாண்மை இருந்தது. பிரிட்டிஷ் அரசரின் நேரடி ஆட்சியிலிருந்த பகுதிகள் இந்தியா, பாகிஸ்தான் என்ற இரண்டு பிரதேசங்களாக (dominion) பிரிக்கப்பட்ட பின், இந்த சமஸ்தான்ங்கள் இரண்டு டொமினியன்களில் எதனுடனும் இணையலாம் என்று கூறப்பட்டது. இந்திய நிலப்பகுதியில் இருந்த பல சமஸ்தானங்கள் இந்தியாவில் இணைந்தன. இதற்காக இந்திய அரசு அரச குடும்பத்தினருக்கு மன்னர் மான்யம் தருவதாக ஒப்புக்கொண்டது. எழுபதுகளின் முற்பகுதியில் இந்திரா காந்தி இந்த மன்னர் மான்யத்தை ஒழித்தார்.

காஷ்மீர் உள்ளதிலேயே பெரிய சமஸ்தானம். இந்தியா பாகிஸ்தான் இரண்டிற்கும் இடையிலுள்ள நிலை. மக்கள் முஸ்லீம்கள். ஹரி சிங் என்ற இந்து அரசர். மகாராஜா ரஞ்சித் சிங் காலத்திலிருந்தே காஷ்மீர் விவசாயிகளுக்கும், அரசிற்கும் கடும் முரண்பாடு வரி வசூல் நிர்பந்தங்களை முன்னிட்டு இருந்து வந்தது. 1947-இல் பிரிட்டிஷ் அரசு விலகியதும், அதனால் ஊக்கமடைந்த வடமேற்கு பகுதி விவசாயிகள் காஷ்மீர் தலைநகர் சிரீநகரை நோக்கி திரண்டு வந்தார்கள். இவர்களுடன் பாகிஸ்தானுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த இனக்குழுக்களும் இருந்ததாக கூறப்படுகிறது. ஏன் பாகிஸ்தான் இராணுவத்தினரே இருந்தார்கள் என்றும் ஒரு வதந்தி உண்டு. மகாராஜா தனக்கு ஆபத்து என்று தலைநகரிலிருந்து அக்டோபர் 26, 1947-இல் கிளம்பி ஜம்முவிற்கு வந்துவிட்டார். இந்திய அரசிடம் படைகளை அனுப்பி தனக்கு உதவுமாறு கேட்டார், அவர் இந்திய டொமினியனில் சேர்வதாக கையெழுத்துப்போட்டால் படை அனுப்புவதாக கவர்னர் ஜெனரல் மெளண்ட்பேட்டன் சொன்னார். இந்திய அரசின் செயலர் கே.பி.மேனன் என்பவர் கையெழுத்து வாங்க ஜம்மு சென்றார். மகாராஜா 26 மாலையிலும், மேனன் 27 காலையிலும் ஜம்மு சேர்ந்தனர். 27 காலை இந்தியப் படைகள் விமானங்களில் சென்று காஷ்மீரில் இறங்கியது. இதில் இரண்டு பிரச்சினைகள்.

1) மகாராஜா எந்த நிர்பந்தமும் இல்லாமல் கையெழுத்துப் போட்டாரா? எங்கே எப்போது போட்டார்? இதைப்பற்றி கூறப்பட்ட தகவல்களில் ஏன் முரண்பாடுகள் நிலவுகின்றன?

2) இந்த டொமினியனில் சேர வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டுமா? மகாராஜா முடிவு செய்யவேண்டுமா? மகாராஜாவின் முடிவு தற்காலிகமானது; நிலமை கட்டுக்குள் வந்தவுடன் மக்களிடையே கருத்துக்கணிப்பு (plebiscite) நடத்தப்படுமென்று மெளண்ட்பேட்டனும், நேருவும் சொன்னது என்னவாயிற்று?

பாகிஸ்தான் இரண்டு கேள்விகளையும் ஓயாமல் வலியுறுத்தி வருகிறது. 1964 போரில் பாகிஸ்தான் காஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதியை ஆக்கிரமித்தது. அதன் பிறகு புதிய எல்லையை இந்தியாவும், பாகிஸ்தானும் தற்காலிகமாக ஒப்புக்கொண்டன. இந்தியா ஜம்மு, காஷ்மீரில் 1965-இல் தேர்தல் நடத்தி அதில் மக்கள் ஓட்டுப்போட்டதால் அவர்கள் மறைமுகமாக இந்தியாவுடன் இணைந்ததை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்று கூறியது. ஆனால் மீண்டும் மக்கள் விடுதலை கோரிக்கை எழுப்பத் தொடங்கினார்கள். பாகிஸ்தான், இந்தியா இரண்டு நாடுகளிடமிருந்து விடுதலை பெற ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியை மக்பூல் பட் துவங்கினார். இந்திய அரசு மக்பூல் பட்-டை தூக்கிலிட்டதிலிருந்து தொடர்ந்து காஷ்மீர் மக்களின் விழைவை ஒடுக்க முயற்சித்தது. கடுமையான இராணுவ அடக்குமுறையும், அத்துமீறல்களும் மேலும் மேலும் மக்களை இந்தியாவிடமிருந்து அந்நியப்படுத்தியது. பாகிஸ்தான் இறக்குமதி ஜிஹாதிகளும் ஒருபுறம் தூண்டிவிட்டாலும், காஷ்மீர் மக்களை இந்திய அரசு அடக்கி ஒடுக்கி வழிக்கு கொண்டுவர முயற்சித்ததே, காஷ்மீரில் தீவிரவாதம் வளர காரணமாகியது.

அப்சல் குருவிற்கு பாரளுமன்றத்தை தாக்க முற்பட்டவர்களுடன் தொடர்பு இருந்திருக்கலாம். ஆனால் அவருக்கு அந்த தாக்குதலில் எந்த அளவிற்கு பங்கு இருந்தது என்பது கேள்விக்குரியது. இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரமே அதை ஏற்றுக்கொண்டுள்ளார். உச்ச நீதிமன்றமோ அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்கிவிட்டது. கருணை மனு என்று அழைக்கப்படும் குடியரசு தலைவர் மறுபரிசீலினையும் முடிந்து அவருக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. ஆனால் எப்போது தண்டனை நிறைவேற்றப்படும் என்று தெரியாத நிலையில் இந்திய அரசு திடீரென்று அவரை அவசரமாக, வழக்கமான நெறிமுறைகளைக் கூட பின்பற்றாமல், தூக்கிலிட்டது. இது பலருக்கும் தேசீயவாதத்தின் பழி வாங்கும் வெறியாக தோன்றியதில் வியப்பில்லை என்பதால் பல்வேறு அதிருப்தியடைந்த மக்கள் குழுவினர் அப்சல் குருவுடன் தங்களை இனம் கண்டனர்.

ரோஹித் வெமுலாவும், கன்ஹியா குமாரும்

ஐதராபாத் பல்கலைகழகத்தில் அப்சல் குரு நினைவாக கூட்டம் நிகழ்ந்த பின், அகில் பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவீபி) என்ற அமைப்பினர் கூட்டம் நிகழ்த்தியவர்களுடன் பிரச்சினை செய்ய கைகலப்பு நிகழ்ந்தது. அதில் ஏபிவிபி மாணவர்களை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு தலித் மாணவரான ரோஹித் வெமுலா உட்பட சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். ஆய்வு மாணவரான ரோஹித்தின் உதவிப்பணமும் நிறுத்தப்பட்டது. தண்டிக்கப்பட்ட அந்த மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்க தொடங்கினர். போராட்டம் வலுத்தது. அதன் நடுவே தனிப்பட்ட முறையில் தொடர்ந்து பிறப்பின் அடிப்படையில் தான் சந்தித்துவரும் பிரச்சினைகளினால் உருவான மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்ட ரோஹித் வெமுலா தன் எதிர்ப்பை தன்னுடைய மரணத்தின் மூலம் வெளிப்படுத்த முடிவு செய்து கவித்துவமான ஒரு மரண சாசனத்தை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அதே போன்ற அப்சல் குரு நினைவு கூட்டத்தில் கலந்துகொண்டு கோஷமிட்டார் என்று தேசதுரோக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் ஜே.என்.யூ பல்கலைகழகத்தின் கன்ஹியா குமார் என்ற மாணவர் தலைவர். இடது சாரி இயக்கம் சார்ந்த இந்த ஏழை குடும்பத்து மாணவர் முற்போக்கு முழுக்கங்கள் இட்டதை ஒளிக்காட்சியில் சிதைவாக்கம் செய்து இந்தியாவிற்கு எதிரான கோஷங்களாக மாற்றி தொலைக்காட்சிகளில் இடம் பெறச்செய்தனர் ஏபிவிபி சார்ந்தவர்கள். இன்று அந்த மோசடி அம்பலமாகிவிட்டது. ஆனாலும் அவரும் அந்த கூட்டத்தினை ஏற்பாடு செய்தவர்களும் பிரிட்டிஷ் காலனீய ஆட்சி கால தேசதுரோக (sedition) குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். கோர்ட்டிற்கு கொண்டு வரப்பட்ட மாணவர் தலைவரை பி.ஜே.பி கட்சி சார்பு வக்கீல்கள் பகிரங்க தாக்கியதுடன் அதைக்குறித்து பெருமையுடன் அறிக்கைகளும் வெளியிட்டுள்ளனர். சட்டத்தின் காவலர்களாக இருக்க வேண்டிய வக்கீல்களே குண்டர்கள் போல சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்பட்டு விட்டு அதை தேசபக்தி என்று கூறும் கொடூரம் கண்டு உலகம் அதிர்ச்சியடைந்தது.

இதைத்தொடர்ந்து நாடெங்கும், உலகெங்கும் பி.ஜே.பி ஆட்சிக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுக்கொண்டு வருகின்றன. உலகின் மிகச்சிறந்த அரசியல் தத்துவ அறிஞர்கள் அனைவரும் ஒருமனதாக எதிர்ப்புக்குரல்களை ஒடுக்கும் பி.ஜே.பி அரசின் போக்கை கண்டித்துள்ளனர். காஷ்மீர் பிரச்சினையிலும். அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட பிரச்சினையிலும் தங்கள் சிந்தனைகளை, அரசின் மீதான விமர்சன்ங்களை பேசுவதற்கு எல்லா மக்களுக்கும், மாணவர்களுக்கும் உரிமை உண்டு. அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பது தேச விரோதம் ஆகாது. மேலும் ஒரு குறிப்பிட்ட தேசம் என்பது எந்த மக்களையெல்லாம் உள்ளடக்கியது என்பதும் எல்லா காலத்திலும் பரிசீலனைக்கும், விவாதத்திற்கும் உரியதுதான். ஆயுதமேந்தி அரசு இயந்திரத்துடன் மோதுவதுதான் குற்றமே தவிர, கருத்து ரீதியாக அரசின் செயல்களை கண்டிப்பது குற்றமல்ல. இதற்கு மாறான “அரசே தேசம்; அதை விமர்சிப்பது தேசத்துரோகம்” என்ற பாசிசக் குரல் மிக ஆபத்தானது. அனைவரும் ஒன்றுதிரண்டு அத்தகைய மனப்பான்மையை முறியடிப்பது அவசியமானதும், அவசரமானதுமாகும்.

 ராஜன் குறை கிருஷ்ணன்

0c14