தீவிர அரசியலில் குதிக்க தயாராகிறார் உதயநிதி ஸ்டாலின்!

திமுக உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் அரசியல் களத்தில் இறங்கியுள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 18ஆம் தேதி சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் வலுக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து திமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று (புதன்கிழமை) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

சென்னை ஆதம்பாக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் மகனும், தயாரிப்பாளர் – நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அவர் மேடையில் அமர வைக்கப்பட்டு, முன்னிலைப்படுத்தப்பட்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

கெளரவ் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். இறுதிகட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று மட்டும் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

முதல் வரிசையில் எம்.எல்.ஏ.க்கள் மா.சுப்பிரமணியம், சந்திரசேகர் ஆகியோருடன் உதயநிதி அமர்ந்திருந்தார். இதனால் தீவிர அரசியலில் குதிக்க அவர் தயாராகி வருவதாக தெரிகிறது.

“எனக்கு அரசியல் ஆசை கிடையாது. திமுகவில் பல ஆண்டுகளாக கட்சிப் பணியாற்றியவர்கள் பலரும் இருக்கிறார்கள். எப்போதுமே அரசியலில் எனக்கு ஆர்வம் இல்லை” என்று முன்பு பேட்டி ஒன்றில் உதயநிதி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.