மாநில கல்வி நிர்வாகம் அரசை சார்ந்ததா? ஒரு நீதிபதியின் விருப்பம் சார்ந்ததா?

“வந்தே மாதரம்’ பாடல் எந்த மொழி?” என்ற வழக்கில், அது எந்த மொழி என்று சொல்வதோடு நீதிமன்றத்தின் வரம்பெல்லை முடிந்து விடுகிறது!

அந்த வழக்கில் மனுதாரரோ, வழக்கறிஞரோ, தமிழக மக்கள் யாருமோ கேட்காத நிலையில், “இனி ‘ வந்தே மாதரம்’ பாடலை தமிழக கல்வி நிலையங்களில் பாட வேண்டும் என ஒரு நீதிபதி உத்தரவிடுவது என்ன நீதி? என்ன நியாயம்?

தனது விருப்பத்தை ஒரு வழக்கின் வாயிலாக, வழக்கின்  மூல தன்மைக்கு வெளியே சென்று தமிழக அரசின் மீதும் மாணவர்கள் மீதும் சுமத்துவது என்ன நியாயம்? எந்த சட்ட உரிமையின் அடிப்படையில் இப்படி ஒரு உத்தரவை (!?)  அந்த நீதிபதி வழங்கினார்?..என்பது ஒரு வழக்கறிஞனாக எனக்கு அறவே புரியவில்லை!

ஒரு மாநில கல்வி நிர்வாகம் என்பது அரசை சார்ந்ததா? அல்லது ஒரு நீதிபதியின் விருப்பம் சார்ந்ததா? அப்படியானால் அரசமைப்பு சட்டத்தில் ‘அரசு’, ‘நீதி’, ‘நிர்வாகம்’ என்று தனித் தனியாக அதிகாரங்களை பிரித்து வழங்கியிருப்பது எதற்காக? அதற்கு என்ன மதிப்பு?

ஏற்கனவே “சரஸ்வதி வந்தனம் பாடவேண்டும்; கிருஷ்ணரை போல்(!?) வாழ வேண்டும்” என்றெல்லாம் நீதிபதிகள் உத்தரவிடும் நிலையில், இப்போது புதிதாய் ’வந்தே மாதரம்’ பாட வேண்டும் என்பது சரியல்ல; முறையல்ல.

நாளைக்கே ஒருவர் தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கைகளை கல்வி நிலையங்களில் மாணவர்கள் தினமும் கூட்டாக படிக்க வேண்டும் என்று வழக்குப் போட்டால், அப்போது இப்போது காரிய மவுனமாக அமைதியாக இருக்கக்கூடிய ஊடகங்களும், மதவாத சக்திகளும் என்ன கூச்சலை எழுப்பும்?

இந்நிலையில், இந்த ‘வந்தே மாதரம்’ உத்தரவு மக்கள் விருப்பத்திற்கு எதிரானது. அரசியல் அமைப்பு சட்டத்திற்கு ..எதிரானது. எனவே தமிழக அரசு உடனடியாக மேல் முறையீடு செய்ய வேண்டும். உரிமைகளை நிலை நாட்ட வேண்டும்.

செய்வீர்களா…? நீங்கள் செய்வீர்களா…?

ALAGARASAN VB