“கலைஞரிடம் இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது போர்க்குணம்!” – வைரமுத்து
தி.மு.க தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு வெற்றித்தமிழர் பேரவை சார்பில் அஞ்சலி செலுத்தும் வகையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமி அரங்கில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:-
சராசரி மனிதர்கள் மரணத்தில் மரிக்கிறார்கள். மாமனிதர்கள் மரணத்தில் பிறக்கிறார்கள். கலைஞர் இப்போது லட்சியமாய்ப் பிறந்திருக்கிறார். மூன்று தலைமுறைகள் கண்ட கலைஞரை மூன்றாம் தலைமுறை புரிந்துகொண்டிருக்கிறது.
பள்ளிப் பருவத்தில் திருவாரூர் கமலாலயத்தின் நீண்ட பெருங்குளத்தை நீந்திக் கடப்பதென்று அவரும் அவர் நண்பரும் நீந்துகிறார்கள். பாதி தூரம் கடந்ததும் களைத்துப்போன நண்பர் நீந்த முடியாது கரைக்கே திரும்பிப் போகலாம் என்கிறார். கடந்து வந்த தூரம் பாதி; கடக்க வேண்டிய தூரம் மீதி. எனவே திரும்பிச் சென்று தோல்வி காண்பதைவிட மறுகரையைத் தொட்டு வெற்றி பெறலாம் என்று கலைஞர் தொடர்ந்து நீந்தி வெற்றி பெற்றார்; நண்பரையும் வெற்றிபெற வைத்தார். கலைஞரின் இந்த விடாமுயற்சிதான் தானும் வென்று தமிழ்நாட்டையும் வெற்றிபெற வைத்தது. கலைஞரிடம் இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது இந்தப் போர்க்குணம்தான்.
மாற்றி யோசியுங்கள் – கலைஞர் சொல்லும் இரண்டாம் பாடம் இது. அந்தக்காலத் திரைப்பட வசனத்தில் பொங்கலில் கிடக்கும் முந்திரிப் பருப்பு போல, சமஸ்கிருதத்துக்கு மத்தியில் கொஞ்சம் தமிழும் கிடந்தது. சத்திரியப் பாத்திரங்களும் பிராமண மொழியே பேசிக்கொண்டிருந்தன. கலைஞர் மாற்றி யோசித்தார். திரைப்படக் கொட்டகைக்குள் தேன்மழை பொழிந்தது. கலைஞரின் பேனா சொட்டிய மைத்துளியிலிருந்து நட்சத்திரங்கள் பிறந்தன.
அறிவைப் பொதுவுடைமை செய் – கலைஞர் சொல்லிச் செல்லும் அடுத்த பாடம் இது. எகிப்தியப் பேரழகி கிளியோபாட்ரா தமிழ்நாட்டு முத்துக்களைச் சாராயத்தில் போட்டுக் குடித்தாளாம். உலக உத்தமர் காந்தி – அகிம்சா மூர்த்தி அவரே நோயால் துடித்துக்கொண்டிருந்த கன்றுக்குட்டியை கொன்றுவிடச் சொல்லியிருக்கிறார். அது கஷ்டமுறுவதைக் காணச் சகியாமல். அக்பர் பாதுஷா ஒரு ராஜபுத்திர ராணியை மணந்து கொள்ளலாமாம்! அவர் மகன் சலீம் ஒரு நடனக்காரியை மணந்துகொள்ளக்கூடாதாம்! இப்படித் தான்பெற்ற அறிவைப் பாமரர்களுக்கு அள்ளித் தெளித்து அவர்களை ஆளாக்கியது கலைஞரின் கைவண்ணம். 3 கோடி மக்களும் வெறும் 19 விழுக்காடு கல்வி அறிவும்கொண்ட அன்றைய தமிழ்நாட்டைக் கலைவழியே கல்விக்கூடமாக மாற்றிய பெருமை கலைஞருக்கு உண்டு.
“பதவி என்பது கிரீடம் அல்ல; அது அன்றாடங்காய்ச்சிகளுக்கான அமுத சுரபி” – இது கலைஞரின் அடுத்த பாடம். சமூக நீதி – குடிசைமாற்று வாரியம் – இலவச மின்சாரம் – விவசாயக்கடன் விலக்கு – கை ரிக்ஷா ஒழிப்பு – இலவச மனைப்பட்டா – தாழ்த்தப்பட்டோருக்கு நில ஒதுக்கீடு – இலவசக் கல்வி – தமிழுக்குச் செம்மொழிப் பெருமை – தமிழ்நாட்டில் கட்டி எழுப்பப்பட்ட கட்டமைப்பு – இருமொழிக் கல்விக்கொள்கையால் ஏழை மாணவர்களுக்கு அகில உலக வாய்ப்பு இவையனைத்தும் அவர் பெய்த பெருமழையில் சில துளிகள் என்று சொல்லலாம்.
துன்பங்களை உரமாய்ப் போடு – கலைஞரின் வாழ்க்கை பேசிப்போகும் இன்னொரு பாடம் இது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் – பாளையங்கோட்டைச் சிறைச்சாலை – எம்.ஜி.ஆர் பெரும்பிரிவு – நெருக்கடி நிலையின் சவுக்கடி – 13 ஆண்டுகள் ஆட்சி இல்லாத ஒரு கட்சி என்று எல்லாத் துயரங்களையும் தன் எதிர்காலத்திற்கான எரிபொருளாக்கிக்கொண்டார் கலைஞர். ஜப்பானிய எரிமலை தீக்குழம்பு கக்குமாம். அதன் அக்கினி ஆறு பல கிலோ மீட்டர் பரவுமாம். கிராமத்து மக்கள் ஊரை காலிசெய்து ஓடிவிடுவார்களாம். ஆறிய எரிமலைக் குழம்பு சாம்பலான பிறகு திரும்பி வருவார்களாம். அந்தச் சாம்பலில் விவசாயம் செய்து மூன்று மடங்கு மகசூல் காண்பார்களாம். கலைஞர் கதையும் இதே கதைதான்.
நல்லது வேண்டுமா நல்லது செய் – இது கலைஞர் வாழ்வு கற்றுத்தரும் அடுத்த பாடம். கடற்கரையில் கலைஞருக்கு இடம் கிடைக்குமா என்று கலங்கிக் கிடந்தது தமிழகம். ஆனால் நல்லது செய்தவர்க்கு நல்லதே நடக்கும் என்று நான் மட்டும் நம்பினேன். 1969 பிப்ரவரி 2 நள்ளிரவு 12.22 மணிக்கு அண்ணா மறைகிறார். அவர் உடல் கிருஷ்ணாம்பேட்டையில் அடக்கம் செய்யப்படும் என்று 1.45 மணிக்கு தற்காலிக முதலமைச்சர் நாவலர் அறிவிக்கிறார். இல்லை கடற்கரையில் அடக்கம் செய்யப்படும் என்று 2.45 மணிக்குப் பொதுப்பணித்துறை அமைச்சராய் இருந்த கலைஞர் அறிவிக்கிறார். முதலமைச்சர் சொன்னது நடக்கவில்லை; பொதுப்பணித்துறை அமைச்சராய் இருந்த கலைஞர் சொன்னது நடந்தது. அண்ணாவுக்குக் கடற்கரையில் இடம்பெற்றுத் தந்தவர் கலைஞர் மட்டுமே. 1969இல் அண்ணாவுக்குச் செய்த பெருமைதான் 2018இல் கலைஞருக்குத் திரும்ப வாய்த்திருக்கிறது.
பல மாதங்களுக்கு முன்பு காவேரி மருத்துவமனையில் முதல்முறையாக அவர் அனுமதிக்கப்பட்டபோது தொலைபேசியில் பேசினேன். சொற்கள் இன்னும் மிச்சமிருந்த காலம் அது. ‘நான் உங்களையே நினைத்துக்கொண்டிருக்கிறேன்’ என்றேன். அவர் ஏதோ சொன்னார்; எனக்குப் புரியவில்லை. ‘என்ன சொல்கிறார்’ என்று அவர் அருகில் இருந்த உதவியாளர் நித்யாவைக் கேட்டேன். ‘நானும் உங்களையே நினைத்துக்கொண்டு இருக்கிறேன்’ என்று கலைஞர் சொன்னதாகக் கூறினார். என் எழுகை அன்றே ஆரம்பமாகிவிட்டது. இன்றும் அவரை நினைத்துக் கொண்டிருக்கிறேன்; வாழ்நாளெல்லாம் நினைத்துக் கொண்டேயிருப்பேன்.
கலைஞரின் நினைவைப் போற்ற வேண்டும். திருவாரூரில் இயங்கும் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞரின் பெயரைச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும். மத்திய மாநில அரசுகள் ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு வைரமுத்து பேசினார்.
இக்கூட்டத்தில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன், மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம், உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா, இயக்குநர் பாரதிராஜா, நக்கீரன் கோபால், பேராசிரியர் தமிழச்சி தங்கப்பாண்டியன், நடிகர் விவேக் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கருணாநிதிக்கு புகழ்வணக்கம் செலுத்தினார்கள்.