சைத்தான் – விமர்சனம்

‘நான்’, ‘சலீம்’, ‘இந்தியா பாகிஸ்தான்’, ‘பிச்சைக்காரன்’ என தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து, வெற்றிகரமான கதாநாயகனாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ள இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியாகியுள்ள புதிய படம் ‘சைத்தான்’.

பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் ‘ஆ” நாவலை அதிகாரபூர்வமாக வாங்கி, அதிலிருந்து ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு, மிச்சத்துக்கு தன் சொந்த சரக்கைக் கலந்து திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.

ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் நாயகன் விஜய் ஆண்டனி, ‘மணமகள் தேவை’ என்று மேட்ரிமோனியல் வெப்சைட்டில் விளம்பரம் கொடுக்கிறார். அதை பார்க்கும் நாயகி அருந்ததி நாயர், விருப்பம் தெரிவித்து தொடர்புகொள்கிறார். அருந்ததியை பார்த்த மாத்திரத்தில் ‘இவள் எனக்கென பிறந்தவள்’ என்பதாக உணரும் விஜய் ஆண்டனி உடனடியாக திருமணம் செய்துகொள்கிறார்.

ஆன்லைன் தொடர்பான டெக்னிக்கல் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அதை சுலபமாக தீர்த்து வைப்பதில் வல்லவரான விஜய் ஆண்டனி, திருமணமான கொஞ்ச நாளிலேயே இனம் புரியாத உளவியல் பிரச்சனை ஒன்றுக்குள் சிக்கிக்கொள்கிறார். அவருக்குள் இருந்து அசரீரி போல் ஒலிக்கும் ஒரு மர்மக்குரல் அவருக்கு மட்டும் கேட்கிறது. அக்குரல் அவரை மிரட்டுகிறது. தற்கொலை செய்துகொள் என தூண்டுகிறது. அந்த குரலுக்கு கட்டுப்பட்டு அவர் தற்கொலை செய்துகொள்ள முயலும்போதெல்லாம் அவரது நண்பர் முருகதாஸ் அவரை காப்பாற்றிவிடுகிறார்.

இந்நிலையில், தனது நண்பர் முருகதாஸுடன் காரில் பயணித்துக் கொண்டிருக்கும்போது, விஜய் ஆண்டனியை அந்த குரல் மீண்டும் தற்கொலைக்கு தூண்டுகிறது. உடனே  காரை விபத்துக்கு உள்ளாக்குகிறார் விஜய் ஆண்டனி. இந்த விபத்தில் நண்பர் முருகதாஸ் இறந்துபோக, விஜய் ஆண்டனி மட்டும் உயிர் பிழைக்கிறார்.

அதன்பின்னர், தனக்கு மட்டும் கேட்கும் அந்த மர்மக்குரல் பற்றி தனது அலுவலக மேலதிகாரியான ஒய்.ஜி.மகேந்திரனிடம் சொல்கிறார் விஜய் ஆண்டனி. ஒய்.ஜி.மகேந்திரன், விஜய் ஆண்டனியை மனோதத்துவ நிபுணரான கிட்டுவிடம் அழைத்துச் செல்கிறார். கிட்டு, விஜய் ஆண்டனியை ஹிப்னாட்டிசம் மூலம் கடந்த காலத்துக்குள் செல்ல வைக்கிறார். அப்போது, தான் முன்ஜென்மத்தில் தஞ்சாவூரில் தமிழ் ஆசிரியராக இருந்தது, தன் மனைவியாக இருந்த ஜெயலட்சுமி என்ற பெண் தன்னையும், தன் வளர்ப்பு மகனையும் காவிரியாற்றங்கரையில் கொலை செய்தது ஆகிய ஞாபகங்கள் விஜய் ஆண்டனிக்கு வருகிறது.

இந்த ஜென்மத்திலும் அந்த தஞ்சாவூர் ஜெயலட்சுமி தான் விஜய் ஆண்டனியை கொலை செய்யும் தீய எண்ணத்துடன் இது மாதிரியான சம்பவங்களெல்லாம் நடக்க வைக்கிறாள் என்ற முடிவுக்கு வருகிறார் கிட்டு.

விஜய் ஆண்டனி தஞ்சாவூருக்குப் போய் கொலைகார ஜெயலட்சுமியை தேடி அலைகிறார். அப்போது ஜெயலட்சுமியின் பழைய புகைப்படம் ஒன்று அவருக்கு கிடைக்கிறது. அதை பார்த்ததும் அதிர்ச்சி அடைகிறார் விஜய் ஆண்டனி. காரணம், தற்போது மனைவியாக இருக்கும் அருந்ததி நாயர் தான் முன்ஜென்மத்திலும் அவரது மனைவி ஜெயலட்சுமியாக இருந்திருக்கிறார்.

இது தெரிந்த பிறகு தன் மனைவி அருந்ததியை விஜய் ஆண்டனி என்ன செய்தார்? உண்மையில், அவரை முன்ஜென்மத்தில் கொலை செய்தது அருந்ததி தானா? தன்னை கொன்றொழிப்பதற்காக தற்கொலை செய்துகொள்ளத் தூண்டும் மர்மக்குரலுக்கும் அருந்ததிக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பதையெல்லாம் திகிலும், கிரைமும் கலந்து மீதிக்கதையாக சொல்லியிருக்கிறார்கள்.

0a1d

இந்த ஜென்மத்தில் ஐடி நிறுவன ஊழியர், முன்ஜென்மத்தில் தமிழாசிரியர் என மாறுபட்ட இருவேறு தோற்றங்களில், இருவேறு குணாதிசயங்கள் கொண்ட கதாபாத்திரங்களில் விஜய் ஆண்டனி நடித்திருக்கிறார். ஐடி நிறுவன ஊழியராக பயம், பதற்றம், குழப்பம், ஆக்ரோஷம், பழிவாங்கத் துடிக்கும் கோபம் என எல்லா உணர்வுகளையும் சரியாக வெளிப்படுத்துகிறார். உடல்மொழி, இறுக்கமான முகம் ஆகியவை கதைக்களத்துக்குத் தேவையானதாக இருப்பதால் அதிலும் குறை வைக்கவில்லை. தமிழாசிரியர் கதாபாத்திரத்திலும் சாந்தம், கருணை, மன்னிப்பு என கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கிறார். விஜய் ஆண்டனியின் தோள்களிலேயே கதை பயணிக்கிறது என்றாலும் அதை எந்த வித சிரமமும் இல்லாமல் மிகத் தெளிவாக கையாளுகிறார்.

நாயகி அருந்ததி நாயரும் ஒவ்வொரு ஜென்மத்திலும் ஒவ்வொரு கெட்டப்பில் வருகிறார். பார்க்க மிகவும் அழகாக இருக்கிறார். திருமணமான பிறகு விஜய் ஆண்டனியிடம் ரொமான்ஸ் கலந்து இவர் பேசும் வசனங்கள் எல்லாம் ரசிக்கும்படியாக இருக்கிறது. இதற்கு மாறாக, முன்ஜென்ம ஜெயலட்சுமியாக வரும்போது டெரராக அச்சமூட்டுகிறார்.

கிட்டி, ஒய்.ஜி.மகேந்திரன், முருகதாஸ், மீரா கிருஷ்ணன் ஆகியோர் தத்தமது கதாபாத்திரங்களில் பொருந்திப் போகிறார்கள்.

இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி தனது முதல் படத்திலேயே வித்தியாசமான ஒரு புது முயற்சியை கையிலெடுத்திருக்கிறார். படத்தின் முதல் பாதியில் என்ன நடக்கும்? ஏது நடக்கும்? என்ற பதைபதைப்பை ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார். முதல்பாதியில் போடும் முடிச்சுகளுக்கு இரண்டாம் பாதியில் பதில் வருகிறது. அந்த பதில் நிறைய படங்களில் நாம் பார்த்திருப்பதுதான் என்றாலும், அது சரியானதுதான் என்பதுபோல் ஒத்துக்கொள்ள முடிகிறது. படத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களுக்கும் சிறப்பான ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறார்.

பிரதீப் கலிபுரயாத் ஒளிப்பதிவும், விஜய் ஆண்டனியின் இசையும் படத்துக்குப் பெரும் பலம். “நான் சுடச் சுட நனைகிறேன்”, “ஏதேதோ ஏதேதோ ஆகிப் போச்சே” பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. “ஜெயலட்சுமி…” எனத் தொடங்கும் பாடலில் இசையைத் தெறிக்க விட்டிருக்கிறார் விஜய் ஆண்டனி.

‘சைத்தான்’ – முன்ஜென்மம் என்ற கற்பனையை நம்புகிறவர்களுக்கு மட்டுமல்ல, அதை நம்பாத, அதேநேரத்தில் உளவியல் வினோதங்கள் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கும் செம விருந்து!