கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை அகழாய்வு பணிகளுக்கு இந்திய ஒன்றிய அரசு அனுமதி!

தமிழ்நாட்டில் மதுரை அருகே சிவகங்கை மாவட்டம் கீழடி, தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை, ஈரோடு மாவட்டம் (பெருந்துறை தாலுகாவிற்கு உட்பட) கொடுமணல் ஆகிய தொன்மைச் சிறப்புமிக்க நான்கு இடங்களில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள இந்திய ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு சார்பில் தொல்லியல் துறை வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் இதுவரை 40 இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடத்தப்பட்டுள்ளன. அழகன்குளம், கீழடி, பட்டறைப்பெரும்புதூர் ஆகிய பகுதிகளில் சமீபத்தில் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் அழகன்குளத்தில் அகழாய்வு செய்ததன் மூலம் தமிழகத்துக்கும், ரோம் நாட்டுக்கும் இடையேயான வாணிப தொடர்புகள் கண்டறியப்பட்டன.

இதேபோல், கீழடியில் ரூ.1.02 கோடி நிதி ஒதுக்கி நடத்தப்பட்ட அகழாய்வின் மூலம் அங்கு 2,600 ஆண்டுகளுக்கு முன் பழமையான நகர நாகரிகம் இருந்ததற்கான சான்றுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை, ஈரோடு மாவட்டம் கொடுமணல், சிவகங்கை மாவட்டம் கீழடி ஆகிய இடங்களில் விரிவான அகழாய்வு மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டது. இதற்கு ஒன்றிய தொல்லியல் ஆலோசனைக் குழு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து ஆதிச்சநல்லூர், சிவகளை, கீழடி மற்றும் கொடுமணல் ஆகிய பகுதிகளில் ஜனவரியில் ஆய்வுகள் தொடங்கப்பட உள்ளன. ஏற்கெனவே நடப்பாண்டு தொல்லியல் துறை ஆய்வுகளுக்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆதிச்சநல்லூரில் பறம்பு பகுதியில் மேற்கொண்ட அகழாய்வில் பல தாழிகள், இரும்பு பொருட்கள், மண்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதன்பின் அங்கு நடத்தப்பட்ட ஆய்வுகளிலும் அரிய தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இரும்பு காலத்தை தொடக்கமாக கொண்டுள்ள ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகளை தொடர்வது அவசியம்.

இதேபோல், கொடுமணல் பகுதிகளில் பல்வேறு காலகட்டத்தில் 6 கட்ட அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் பெருங்கற்காலத்தை சேர்ந்த தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புடன் கூடிய பானை ஓடுகள் கிடைத்தன. இதன்மூலம் கிமு 300 முதல் கி.பி 300 வரையான காலத்தை சேர்ந்த பண்பாடு அந்தப்பகுதியில் இருந்தது அறியப்பட்டது.

இது தவிர சிவகளை பறம்பு பகுதியில் இரும்பு காலத்தை சேர்ந்த தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. ஆதிச்சநல்லூர் போல இங்கும் இரும்பு கால பண்பாட்டை வெளிக்கொணர தொடர்ந்து அகழாய்வு செய்யப்படும்.

கீழடியில்2014 முதல் 2017-ம் ஆண்டு வரை 3 வருடங்கள் ஆய்வு மேற்கொண்டதில் 7,818 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை கீழடியில் சங்ககால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றாக அமைந்தன.

தொடர்ந்து 2018-19-ம் ஆண்டு நடத்திய ஆய்வில் 5,820 தொல்பொருட்கள் கிடைத்தன. அதன்பின் 5-ம் கட்ட அகழாய்வில் பல்வேறு வடிவ செங்கல் கட்டுமானங்கள், சுடுமண் குழாய்கள் வெளிக்கொணரப்பட்டன. இதன்மூலம் பழங்காலத்திலேயே மேம்பட்ட வடிகால் அமைப்பை தமிழர்கள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. இந்த பகுதிகளில் ஆய்வுகளை தொடர்வதால் மேலும் பல அரிய தகவல்கள் நமக்கு கிடைக்கும்.

இவ்வாறு தமிழக அரசு சார்பில் தொல்லியல் துறை வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

Read previous post:
0a1a
2600 ஆண்டுகளுக்கு முன் வைகை கரையில் வாழ்ந்த கோதை: இந்தியாவின் முதல் தங்கமகள்!

கீழடியை போன்றே வைகை ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஊர் தேனூர். இலக்கியக் குறிப்பிலும் அவ்வூர் உள்ளது. முதலாம் இராஜராஜ சோழன் கல்வெட்டும், சடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து கல்வெட்டும் சங்க

Close