காலநிலை மாற்ற ஒப்பந்தம்: வரவேற்க தகுந்த ஜோ பைடன் அறிவிப்பு
காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் உடன்படிக்கையில் அமெரிக்கா மீண்டும் இணையும் என்று ஜோ பைடன் உறுதி அளித்ததற்கு பிரான்ஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிரான்ஸ் வர்த்தகத் துறை அமைச்சர் பிரான்ங் கூறும்போது, “பாரிஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தத்தில் அமெரிக்கா இணைவது மிகச் சிறந்த அறிகுறி. இம்முடிவு வரவேற்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் ஒருதலைப்பட்சமாக உள்ளது. அமெரிக்கா ஏகப்பட்ட பில்லியன் டாலர்கள் தொகையைச் செலவழிக்கிறது. ஆனால் இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் பங்களிப்பு ஒன்றுமேயில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.
மேலும், இதனால் அமெரிக்காவுக்குப் பயனில்லை என்றும், பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாகவும் 2017 ஆம் ஆண்டு ட்ரம்ப் அறிவித்தார். இதற்கு பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட செனட்டர் கமலா ஹாரிஸ் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் ஜனவரி மாதம் பொறுப்பேற்கிறார்.
இதில் ஜோ பைடன் தனது தேர்தல் பிரச்சாரங்களின்போது, தன்னுடைய தலைமையில் ஆட்சி அமைந்தால் குடியேற்றத் திட்டங்களில் செய்யப்படும் சீர்திருத்தம், குடியுரிமை வழங்குதல் ஆகியவற்றில் வாக்குறுதிகளை, கொள்கை விவரங்களை அளித்திருக்கிறார்.
மேலும், பாரிஸ் காலநிலை மாற்றம் குறித்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.