கட்டண உயர்வு: ‘தமிழ் ராக்கர்ஸ்’ அட்மின் மட்டும் தான் படம் பார்க்க வருவான்!

தமிழக அரசு திரையரங்க கட்டணத்தை 25% உயர்த்தி இருக்கிறது. “இது போதாது; கட்டணத்தை மேலும் அதிகப்படுத்த வேண்டும்” என்று திரையரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்கள்.

இதனால் திரைப்பட ரசிகர்களும், தமிழ் திரையுலகைச் சேர்ந்த சில பிரபலங்களும் அதிர்ச்சியும், கடும் அதிருப்தியும் அடைந்திருக்கிறார்கள்.

இது குறித்து இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

தியேட்டர் கட்டண உயர்வால் ஏழை நடுத்தர மக்களுக்கு சினிமா எட்டாக்கனியாகி விட்டது. இதனால் நியாயமாக பார்க்க முடியாத மக்களால் சினிமா தொழில் அழிய நேரும். அதிக கட்டணத்தால் வெகுஜன மக்களுக்கு தியேட்டர் என்றாலே அலர்ஜி ஆகும், உற்பத்தி, விநியோகம், தொழிலாளர்கள்… ஏன் தமிழ் ராக்கர்ஸுக்கும் பாதிப்புதான்.

நகர மால்களில் சினிமா பார்ப்போரை ஊக்கப்படுத்த ஜனங்களுக்கு பாதி பார்க்கிங் கட்டணமும், பாப்கார்ன் நியாயமான விலையிலும் தர அன்போடு வேண்டுகிறேன்

இவ்வாறு சீனு ராமசாமி தெரிவித்திருக்கிறார்.

திரையரங்க கட்டண உயர்வு குறித்து கிண்டலடித்திருக்கும் Rockstar AK என்ற சமூக வலைதள பதிவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த விலைக்கு டிக்கெட் வித்தா எப்டியும் TamilRockers அட்மின் மட்டுந்தான் படம் பாக்க வருவான்.. புடிச்சிடலாம்னு இது விஷால் Trapஆ கூட இருக்கலாம்” என்று கூறியுள்ளார்.