தவம் – விமர்சனம்

தொழிற்சாலைகள் அமைப்பதற்காக விளைநிலங்களை அபகரிக்க முயலும் அன்னிய கார்ப்பரேட் முதலாளிகளின் புரோக்கர்களிடமிருந்து, மனித உயிரினம் பிழைத்திருப்பதற்கு ஆதாரமாக விளங்கும் வேளாண் தொழிலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை, விளையாட்டுத்தனமும் நெகிழ்ச்சியும் இணைந்த காதலைக் கலந்து சொன்னால், அதுவே ‘தவம்’.

நகரத்து நாகரிக மங்கை அகிலா (நாயகி பூஜாஸ்ரீ). அவர் வேலை பார்க்கும் தனியார் நிறுவனத்தின் நிர்வாகி வீட்டுத் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக அன்னைவயல் என்ற அழகிய கிராமத்துக்கு தனது அலுவலக சகாக்களுடன் செல்கிறார். அங்கு திருமண நிகழ்ச்சிப் பணிகளை செய்து கொடுப்பதற்காக ‘ஏ டூ இஸட்’ என்ற நிறுவனத்தை நட்த்திவரும் முருகனை (நாயகன் வசியை) சந்திக்கிறார். இருவருக்கும் இடையில் சிலபல சுவாரஸ்யமான சம்பவங்களுக்குப் பிறகு காதல் மலருகிறது.

0a1c

இதற்கிடையில், அந்த ஊரையே அச்சத்தில் ஆழ்த்தி வைத்திருக்கும் சிவண்ணா என்ற கெட்டவன் (இயக்குனர் விஜய் ஆனந்த்) பட்டப்பகலில் பலர் முன்னிலையில் ஒரு அப்பாவியை படுகொலை செய்கிறான். அவனுக்கு எதிராக சாட்சி சொல்ல யாரும் முன்வராத நிலையில், அகிலா துணிந்து சாட்சியம் அளித்து சிவண்ணாவின் தீராகோபத்துக்கு ஆளாகிறாள். அவளை சிவண்ணா கொல்ல முயல, அவனை முருகன் தடுக்கிறான். அப்போது, ஏற்கனவே படுகொலை செய்யப்பட்ட முருகனின் அப்பா நடேசன் வாத்தியார் (சீமான்) பற்றி பேச்சு எழ, பிளாஷ்பேக் ஆரம்பமாகிறது.

முருகன் சிறுவனாக இருந்தபோது, அந்த ஊரில்  தொழிற்சாலை அமைப்பதற்காக அன்னிய கார்ப்பரேட் முதலாளிகளின் புரோக்கர்கள் விளைநிலங்களை அபகரிக்க முயலுகிறார்கள். வேளாண் தொழிலின் முக்கியத்துவம் அறிந்த நடேசன் வாத்தியார், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முட்டுக்கட்டை போடுகிறார். இதனால் அவர் படுகொலை செய்யப்படுகிறார். என்றாலும் விளைநிலங்கள் காப்பாற்றப்பட்டு, இன்றும் அந்த ஊரில் வேளாண் தொழில் செழிப்பாக நடைபெற்று வருகிறது.

பிளாஷ்பேக் முடிய, சிவண்ணா உடனான மோதலில் முருகன் வெற்றி பெற்றானா? அல்லது அவனது தந்தையைப் போல் அவனும் கொல்லப்பட்டானா? என்பது கிளைமாக்ஸ்.

முருகனாக வரும் நாயகன் வசி திரையில் அழகாக இருக்கிறார். அறிமுக நடிகர் என்று சொல்ல முடியாதபடி தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அகிலாவாக வரும் பூஜாஸ்ரீ கொஞ்சம் பூசினாற்போல் இருக்கிறார். கதையை தாங்கி நகர்த்தும் கனமான கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார்.

நடேசன் வாத்தியாராக வரும் சீமான், தனது நாம் தமிழர் கட்சிக் கூட்டங்களில் என்ன பேசுகிறாரோ அதையே இந்த படத்திலும் பேசி கம்பீரமாக நடித்திருக்கிறார். கம்பீரமாக நடிக்க வேண்டும் என்பதற்காக க்ஞ்சி போட்டு அயர்ன் செய்தது போல உடம்பை எந்நேரமும் விறைப்பாக வைத்துக்கொண்டு திரிவது செயற்கையாக இருக்கிறது.

வில்லன் சிவாண்ணாவாக வரும் விஜயானந்த், மற்றும் சூரியன், அர்ச்சனா சிங், சிங்கம்புலி, போஸ் வெங்கட், சந்தானபாரதி, பிளாக்பாண்டி, கூல் சுரேஷ், தெனாலி, கிளி ராமச்சந்திரன், வெங்கல்ராவ் உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்குத் தேவையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

இன்றைய தலையாய பிரச்சனைகளில் ஒன்றான வேளாண் பிரச்சனையை கையில் எடுத்ததற்காக விஜய் ஆனந்த் – சூரியன் என்ற இரட்டை இயக்குனர்களை பாராட்டலாம். அதேநேரத்தில் திரைக்கதையை சுவாரஸ்யப்படுத்த அவர்கள் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் ஓகே. ரகம். வேல்முருகனின் ஒளிப்பதிவில் கிராமத்துக் காட்சிகள் அழகோ அழகு.

தவம் – பார்க்கலாம்!

 

Read previous post:
0a1b
தமிழக தொலைக்காட்சி ஊடகங்களின் “ரஜினி கிறுக்கு”!

பெரும்பாலான தமிழகத் தொலைக்காட்சி ஊடகங்களின் ரஜினிக் கிறுக்கு மிகவும் எரிச்சலூட்டுகிறது. அந்த ஆள் எதையாவது உளறினால், இவர்கள் உடனே ஆகாயத்துக்கும், பூமிக்குமாக குதிக்கிறார்கள். தில்லியிலிருந்து தூண்டிவிடப்படுகிற இந்த

Close