தலைவி – விமர்சனம்

சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாசருக்கும், எதிர்கட்சி எம்.எல்.ஏ.வான மூத்த நடிகை கங்கனா ரனாவத்துக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் நாசர் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கங்கனா ரனாவத்தை நையப்புடைக்க, தலைவிரி கோலமாய் வெளியே வரும் கங்கனா ரனாவத், “இனி முதலமைச்சராகத் தான் இந்த சட்டப்பேரவைக்குள் நுழைவேன்” என்று சபதம் செய்கிறார். இந்த கோடம்பாக்கம் பாஞ்சாலி’ தன் சபதத்தை எப்படி நிறைவேற்றுகிறார் என்பதை, அவருக்கும் மூத்த ஹீரோ நடிகரான அர்விந்த்சாமிக்கும் இடையே நிகழும் கள்ளக்காதல் சம்பவங்களைக் கலந்துகட்டிச் சொன்னால், அதுதான் ‘தலைவி’ என்ற படத்தின் கற்பனைக்கதை.

(படத்தின் ஆரம்பத்திலேயே “இதில் வரும் பெயர்கள் சம்பவங்கள் யாவும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுபவை அல்ல” என்று கார்டு போட்டுவிடுகிறார்கள். அதன்பிறகும் இதை ’கற்பனைக்கதை’ என்று ஏற்றுக்கொள்ளாமல், ’ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு (பயோபிக்)’ என தவறாக பாவித்துக்கொண்டு, ஆதரவாகவோ, எதிராகவோ வரிந்துகட்டுபவர்களுக்கு… ஐயோ…!)

டீன்-ஏஜ் பருவத்திலிருக்கும் கங்கனா ரனாவத்தை திரைப்பட நடிகை ஆக்க முடிவு செய்கிறார் அவரது அம்மா பாக்யஸ்ரீ. தமிழ்த்திரையுலகில் கொடிகட்டிப்  பறக்கும் மூத்த ஹீரோ நடிகரான அர்விந்த்சாமியின் படத்தில் நாயகியாக அறிமுகமாகும் வாய்ப்பு கங்கனாவுக்குக் கிடைக்கிறது. படம் வெற்றி பெறுகிறது. அர்விந்த்சாமி – கங்கனா ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால், இருவரும் பல வெற்றிப்படங்களில் இணைந்து நடிக்கிறார்கள். விளைவாக, இருவருக்கும் இடையில் கள்ளக்காதல் மலருகிறது. படஅதிபரும், அர்விந்த்சாமியின் ‘கேடயமாகத் திகழ்பவரும்,, அர்விந்த்சாமியின் மனைவியான மதுபாலாவின் விசுவாசியுமான சமுத்திரக்கனிக்கு அர்விந்த்சாமி – கங்கனா கள்ளக்காதல் பிடிக்காததால் அவர்களைப் பிரிக்க சூழ்ச்சி செய்கிறார். அர்விந்த்சாமி கங்கனாவைப் பிரிகிறார். கால ஓட்டத்தில் அர்விந்த்சாமி முதலமைச்சர் ஆகிறார். கங்கனாவுக்கும் படவாய்ப்புகள் குறைந்துபோகின்றன. இந்நிலையில் அரசுவிழா ஒன்றில் நடனமாடும் கங்கனாவும், அவ்விழாவுக்கு வருகை தந்திருக்கும் முதலமைச்சர் அர்விந்த்சாமியும் மீண்டும் சந்தித்துக்கொள்கிறார்கள். மீண்டும் உருகுகிறார்கள். அரவிந்த்சாமியின் அழைப்பை ஏற்று, அவரது கட்சியில் சேர்ந்து அரசியலில் குதிக்கிறார் கங்கனா. அவருக்கு எதிராக இங்கும் சூழ்ச்சி செய்கிறார் சமுத்திரக்கனி. ஒருநாள் அர்விந்த்சாமி மரணம் அடைந்துவிட, அவரது கட்சி ’மனைவி கோஷ்டி’ என்றும், ’கள்ளக்காதலி கோஷ்டி’ என்றும் பிளவுபட, ஆட்சியை இழக்கிறது. எதிர்க்கட்சித் தலைவரான நாசர் முதலமைச்சர் ஆகிறார். அப்போது தான் ‘கோடம்பாக்கம் பாஞ்சாலியை நையப் புடைத்தலும் சபதம் செய்தலும் அரங்கேறுகிறது. பின்னர் தேர்தல் சமயத்தில் கங்கனாவின் கூட்டணிக்கட்சித் தலைவர் ஒருவர்  குண்டுவெடிப்பில் கொல்லப்பட, அனுதாப அலை வெற்றியைக் கொடுக்கிறது. கங்கனா முதலமைச்சராக பதவி ஏற்று சபதத்தை நிறைவேற்றுகிறார். சுபம்.

படத்தில் நடிகையின் கதாபாத்திரத்தில் கங்கனா வாழ்ந்து இருக்கிறார் வெகுளித்தனமாக ஆரம்பிக்கும் இவரின் நடிப்பு, ஈர்ப்பு, பிரிவு, அழுகை, ஏக்கம், துணிச்சல், கம்பீரம் எனப் பளிச்சிடுகிறார். ஒரு சில இடங்களில் ரசிக்க வைத்து இருக்கிறார்.

மூத்த ஹீரோ நடிகர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்விந்த்சாமி கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்.

கங்கனாவுக்கு எதிரான வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார் சமுத்திரகனி. பார்க்கும் பார்வையிலேயே பல வசனங்கள் பேசுகிறார். முதலமைச்சராக வரும் நாசர், அர்விந்த்சாமியை துப்பாக்கியால் சுடும் நடிகராக வரும், ராதாரவி, கங்கனாவின் உதவியாளராக வரும் தம்பி ராமையா, அர்விந்த்சாமியின் மனைவியாக வரும் மதுபாலா ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். கங்கனாவின் உற்ற தோழியாக வரும் பூர்ணாவிற்கு அதிகம் வேலையில்லை.

படத்தின் திரைக்கதை அமைத்ததிலும், நடிகர்களை உணர்ச்சிகளை வெளிப்படுத்த வைத்ததிலும், வசன உச்சரிப்புகளை வாங்கியதிலும், சரியான கலவையில் காட்சிகளை அழகாகவும், நேர்த்தியாகவும் உருவாக்கியதிலும் கைதட்டல் பெறுகிறார் இயக்குநர் விஜய்.

படத்தின் மிகப்பெரிய பலமாக இருப்பது மேக்கிங். அந்த மேக்கிங்கிற்கு விஷால் விட்டலின் ஒளிப்பதிவும், ராமகிருஷ்ணா மற்றும் மோனிகாவின் கலை இயக்கமும் சிறப்பாகச் செயல்பட்டு படம் பிரம்மாண்டமாக வர உதவி புரிந்துள்ளது. குறிப்பாக அந்தக் காலத்து செட் அமைப்புகள், சூழல்கள் உள்ளிட்டவற்றை சிறப்பாகக் கையாண்டு தங்களுடைய ஒளிப்பதிவு மற்றும் கலை இயக்கம் மூலம் அழகாகக் காட்சிப்படுத்தி, ஒரு பிரம்மாண்ட படத்துக்குரிய அத்தனை அம்சங்களையும் இப்படத்தின் மூலம் அழகாக வெளிப்படுத்தியுள்ளனர்.

ஜி.வி. பிரகாஷின் ‘கண்கள் ரெண்டும்…’ பாடல் மட்டும் மனதை வருடுகிறது. ஆனால், அவரது பின்னணி இசை படத்தை வேறு ஒரு தளத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் கண்கலங்க வைத்துள்ளார்.

‘தலைவி’ – எவருடைய வாழ்க்கை வரலாற்றையும் எதிர்பார்க்காமல் சாதாராண படமாக மட்டும் பார்த்தால் ரசித்து மகிழலாம்!

..

 

Read previous post:
0a1p
லாபம் – விமர்சனம்

தன் சொந்த கிராமத்தில் இருந்து 6 ஆண்டுகளுக்கு முன்பு வெளியேற்றப்பட்ட பக்கிரிசாமி (விஜய்சேதுபதி) ஒரு நாடோடிபோல ஊர்திரும்புகிறார். வந்தவர், தான் கற்றுக்கொண்டுவந்த நவீன உத்திகளை வைத்து, கூட்டுப்

Close