பிறப்பால் தமிழனாய் இருந்துவிட்டால் போதுமா?
பிறப்பால் தமிழனாய் இருந்துவிட்டால்போதுமா…? இல்லை
தமிழை உயிராய் ஏற்று
சிறப்பாய் வாழ்வதுதான் செந்தமிழுக்கு-செந்தமிழர்களுக்கு அழகு தம்பி !
பிறப்பால் தமிழர்தான்
காக்கை வன்னியனும்… கருணாவும்
புரிந்தது என்ன? யோசி..!
கதிர்காமர் என்னும் வெளிநாட்டு அமைச்சன்கூட
கன்னித் தமிழனென்றே தன்னை சொன்னான்..அந்த
சதிகாரன் நாடுகளை சுற்றிவந்து
இனமான போரை ஒடுக்க ஈழத் தமிழருக்கு
எதிராக செய்த கொடுமைதான் எத்தனை?
யோசி..!
எம்ஜியார் பிறப்பால் தமிழரல்ல ;
இருந்தாலும்… புரிந்ததோ ஈழத்தமிழருக்கு
எழுத்தில் அடங்காதவை
எடுத்துச் சொல்ல இருநூறு புத்தகம் எழுதலாம்!
புலிகள் அடித்த ஐம்பது கலிபர்’ உட்பட
எவண்டா கொண்டு வந்து கொடுத்தான்
எங்களுக்கு?
எம்மினத்தில் இல்லாத வை.கோ எத்தனை காலம்
‘தடாவிலும்’ ‘பொடாவிலும்’ தண்டனைஅனுபவித்தார்
ஈழத் தமிழருக்காக..?
யோசி..!
புலிகளைச் சிறைக்கூண்டில் போட்டால் உடன்வந்து
வெளியில் எடுப்பதற்கு
வை.கோ வரவேண்டும் !
களமுனையில் விழுந்தவரை காப்பாற்றி வீட்டில்வைத்து
காயங்கள் ஆறுமட்டும் கட்டிலிலே சோறூட்டி
ஒன்றுக்கு .இரண்டுக்கு எடுத்தங்கே ஊழியம்செய்ய
வைகோவின் வயதான தாயும் ..சோதரரும்
இரவுபகல் பாராது ..
நாயாக உழைக்கவேண்டும்
கேட்டால் வைகோ தெலுங்கராம் ..அட தமிழா!
சொல்வோரை பற்றி கொஞ்சம்
யோசி !
தூக்கு கயிற்றில் தொங்குவோரை கருணைகொண்டு
காப்பாற்றக்கூட ஒரு வைகோ நீதிமன்ற
படியேற வேண்டும்! அட தமிழா!
அதை மறந்து வாக்குப்பெட்டியை மட்டுமே
அடைகாக்கும் ஒருசிலரை.. தமிழர் என்னும் பெயரில்
அடையாளம் காணமட்டும் ஈழப்புலிகள் வேண்டுமா?
ஈனத்தமிழன் செய்யும் வேலையை.. ஒருபோதும்
ஈழத்தமிழன் செய்தால் அவனைவிட நன்றிகெட்ட ஜென்மம் உலகில் வேறு யாருண்டு சொல்லு…?
யோசி மகனே!
ஈழத் தமிழருக்காய் இங்குள்ள தமிழரெல்லாம்
எப்போது ஒன்றாக குரல் கொடுக்க போகின்றார்? என்று…..
ஈழத்தில் பிறந்த ஒவ்வொரு குழந்தைகூட
எதிர்பார்த்துக் காத்திருக்க ….
இங்கே நீங்கள்
முட்டைக்குள் இருந்து கோழிவந்ததா..?
இல்லை கோழிக்குள் இருந்து முட்டை வந்ததா? என்று
எத்தனை காலம் பட்டிமன்றம்
நடத்திக்கொண்டு இருக்க போகின்றீர்கள்?
எம்மினத்தின் இரத்தமே ! ? இதற்குகூட
புலிவீரன் வேண்டுமா தமிழ் நாட்டில்.?
சீ வெட்கம்! யோசி!
– மு.வே.யோகேஸ்வரன்
Courtesy: velichaveedu.com