“வேலை நிறுத்தம் தொடரும்”: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு!

க்யூப், யு.எஃப்.ஓ. உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்களுக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த 1ஆம் தேதியில் இருந்து 12 நாட்களாக புதுப்படங்கள் எதையும் ரிலீஸ் செய்யாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது.

இதை தொடர்ந்து வருகிற 16ஆம் தேதி முதல் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. அத்துடன், திரைப்படங்கள் தொடர்பான இசை வெளியீட்டு விழா, ட்ரெய்லர் வெளியீட்டு விழா போன்ற பட விழாக்களும், செய்தியாளர்கள் சந்திப்பும் நடத்தக் கூடாது என்றும்  தடை விதித்துள்ளது.

இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஏற்கெனவே அறிவித்தபடி புதுப்படங்களின் ரிலீஸ் நிறுத்தம் தொடரும் என்றும், திட்டமிட்டபடி 16ஆம் தேதி முதல் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 23ஆம் தேதி முதல் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.