“மணி சாரும் ஹரி சாரும் கலந்த கலவை தான் கார்த்திக் சுப்புராஜ்”: ‘ரெட்ரோ’ படவிழாவில் நடிகர் சூர்யா புகழாரம்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் நடிகர் சிவகுமார் பேசுகையில், “மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சூர்யாவுக்கு 17 வயசு. செயின்ட் பீட்ஸ் ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது எங்கள் வீட்டிற்கு உறவினரான ஒரு ஜோதிடர் வந்தார். எனது இரண்டு மகன்களின் ஜாதகத்தையும் கேட்டார். இரண்டு மகன்களின் ஜாதகத்தையும் பார்த்த பிறகு, உங்களுடைய மகன் கலைதுறையில் மிக உச்சத்திற்கு வருவார் என சொன்னார். சூர்யாவா? கார்த்தியா? என கேட்டேன். அவர் பெரியவன் சூர்யா தான் என்று சொன்னார்.
காலையிலிருந்து மாலை வரை மொத்தமாகவே நான்கு வார்த்தை தான் பேசுவான் சூர்யா. அவன் கலைத்துறையில் வெற்றி பெறுவான் என்கிறீர்களே.. என்றேன். அதன் பிறகு இயக்குநராக வருவாரா…? ஒளிப்பதிவாளராக வருவாரா…? எனக்கேட்டபோது, இல்லை முகத்தை தொழிலாக கொண்டிருப்பார் என்றார். அப்போது நான் நடிகராக வருவாரா? எனக் கேட்டபோது, அவர் ‘ஆம் ‘என்றார். அதுமட்டுமல்ல உங்களை விட சிறந்த நடிகர் என்ற பெயரையும் சம்பாதிப்பார். உங்களைவிட நிறைய விருதுகளையும் வாங்குவார். உங்களைவிட நிறைய சம்பாதிப்பார் என்றார். சூர்யாவே இதை கேட்டுவிட்டு சின்ன புன்னகையுடன் கடந்து சென்று விட்டார்.
அதன் பிறகு லயோலா கல்லூரியில் இணைந்தார். அதன் பிறகு தனியார் கம்பெனியில் வேலை செய்தார்.
அந்தத் தருணத்தில் நாங்கள் ஒரு கலை விழா நிகழ்ச்சிக்காக மலேசியாவிற்கு சென்றோம். அப்போது இயக்குநர் வசந்தும் உடன் வந்தார். அதன் பிறகு சென்னை விமான நிலையத்தில் வைத்து ஒரு முறை இயக்குநர் வசந்த் சூர்யாவை பார்த்திருக்கிறார். இரண்டு நாள் கழித்து இயக்குநர் வசந்த் எனக்கு போன் செய்து உங்க பையன் சூர்யாவிற்கு சினிமாவில் நடிப்பதற்கு ஆசை இருக்கிறதா? என கேட்டார் இல்லை என்று நான் சொல்லிவிட்டேன். நான் அவரிடம் பேசலாமா? என கேட்டார். அதன் பிறகு இயக்குநர் வசந்த் சூர்யாவை நேரில் சந்தித்து பேசினார். அதன் பிறகு அவருக்கு மேக்கப் டெஸ்ட் நடைபெற்றது. ‘நேருக்கு நேர்’ படம் வெளியானது. அதில் இடம்பெறும் ஒரு பாடலில் சூர்யாவின் குளோசப் காட்சி இருந்தது. அந்த காட்சிகள் தெரிந்த சூர்யாவின் கண்களை பார்த்த இயக்குநர் ஒருவர், ‘இது தமிழ்நாட்டின் வாழும் பெண்களின் தூக்கத்தை கெடுக்கும்’ எனக் குறிப்பிட்டார். சினிமாவைப் பற்றி கனவில் கூட நினைக்காத சூர்யாவை இன்று நடிகராக உயர்த்திய இயக்குநர் மணிரத்னத்தையும், இயக்குநர் வசந்தையும் பாதம் தொட்டு வணங்குகிறேன். அதன் பிறகு இயக்குநர் பாலா, ‘நந்தா’ என்றொரு படத்தை கொடுத்து சிறந்த நடிகர் என்பதை நிரூபித்தார். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வீட்டில் தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் நடனமாடுவார். அதன் பிறகு நான்கு மணிக்கு எழுந்து கடற்கரைக்குச் சென்று உடற்பயிற்சியில் ஈடுபடுவார். சூர்யாவிற்கு முன் சிக்ஸ்பேக் வைத்துக்கொண்ட நடிகர் யாருமில்லை. தற்போது 28 வருடமாகிவிட்டது. இவரை உருவாக்கிய அனைத்து இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.
நடிகர் சூர்யா பேசுகையில், ” ரெட்ரோ இசை வெளியீட்டு விழாவில் மிக குறைவாக பேசலாம் என நினைத்தேன். வேறொரு விழாவில் நிறைய பேசலாம் என்றும் நினைத்தேன். தமிழகத்தின் அனைத்து பகுதியிலிருந்தும் வந்திருக்கும் என் அன்பான ரசிகர்களுக்கு முதலில் நன்றி. நன்றி.
‘ரெட்ரோ’ என்பது ஒரு காலத்தை குறிக்கிறது. நாம் கடந்து வந்த காலத்தை குறிப்பது. சினிமாவுக்கு வந்து 28 வருஷம் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். அந்த காலத்தை என்னால் மறக்க முடியாது. இந்த அழகான நினைவுகளை கொடுத்த உங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.
இன்று நடிகர் ஜெயராமை தவற விடுகிறோம். நாசர், ஜோஜு ஜார்ஜ் போன்றவர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து தங்களுடைய உழைப்பை உற்சாகத்துடன் வழங்குவதை பார்க்கும் போது வியப்பாக இருக்கும். நான் வெற்றி பெற வேண்டும் என உண்மையாக விரும்பும் நாசர் சாருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. இந்த படத்தில் என்னுடன் பணியாற்றிய இயக்குநர் தமிழ், கருணாகரன், கஜராஜ் அப்பா, சுவாசிகா, விது, பிரேம் … இவர்களுடன் நான்கு மாதம் இணைந்து பணியாற்றி இருக்கிறேன்.
கார்த்திக் சுப்புராஜ் சிங்கிள் ஷாட்டாக எடுப்பார். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினார்கள். ருக்மணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பூஜா ஹெக்டேவிற்கும் நன்றி. இந்த படத்தில் அவரே டப்பிங் பேசி இருக்கிறார்.
இந்தப் படத்தின் தொடக்கப்புள்ளி
ராஜசேகரும் , கார்த்திகேயனும் தான். அந்தமானில் ஆயிரம் பேருடன் சென்று படப்பிடிப்பு நடத்தினோம். இது மறக்க முடியாது.
நம்முடைய படங்கள் வட மாநிலங்களில் திரையிடப்பட்டு, அங்குள்ளவர்களின் அன்பை சம்பாதித்திருக்கிறது என்றால் அதற்கு முக்கியமான காரணம் தயாரிப்பாளர் ஜெயந்தி லால் கட்டா தான். அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கார்த்திக்கும், ஸ்ரேயாசும் இணைந்து ஒரு காட்சியை மேஜிக் போல் உருவாக்குவார்கள். இவர்களின் திட்டமிடலால்தான் நான்கு மாதத்தில் ஒரு படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்ய முடிந்தது. நான் மணி சாரிடமும் பணியாற்றி இருக்கிறேன். ஹரி சாரிடமும் பணியாற்றி இருக்கிறேன். இவர்கள் இரண்டு பேரும் கலந்த கலவை தான் கார்த்திக் சுப்புராஜ். கார்த்திக் சுப்புராஜிடம் ஒரு பாசிட்டிவிட்டி எப்போதும் இருக்கும். இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு படம் உருவாக வேண்டும் என்றால் சகோதரத்துவம் இருக்க வேண்டும் என நினைப்பேன். இந்தத் திரைப்படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அற்புதமான இசையை வழங்கி இருக்கிறார். எங்களுடைய 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் லோகோவிற்கும், ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் லோகோவிற்கும் இசையமைத்தது சந்தோஷ் நாராயணன் தான். மனதை வருடுவது என்பது மிகவும் அரிதாகத்தான் நடைபெறும். இந்த திரைப்படத்தின் பாடல்கள் நீண்ட நாள் கழித்து ஆல்பமாக ஹிட் ஆகியிருக்கிறது. இதில் மனதை வருடும் பாடல்களும் இருக்கிறது.
சிறிது நாட்களுக்கு முன் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை சந்தித்திருப்பேன். அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டேன். இது நான் பிறந்த நாளில் சொன்ன வாக்குறுதி. நீங்கள் அனைவரும் உங்களைக் கடந்து மற்றவர்களுக்காக… நீங்கள் செய்த ஒரு காரியத்திற்காக … உங்களுடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொண்டேன். அந்த சமயத்தில் என்னிடம், ‘நீங்கள் நல்லா இருக்கீங்கல்லே.. ‘என உரிமையுடன் நலம் விசாரித்திருக்கிறீர்கள். அந்த அன்பு மட்டும்தான் என்னை தொடர்ந்து இயங்க செய்து கொண்டிருக்கிறது. இங்கு வருகை தந்திருக்கும் நீங்கள் அனைவரும் 20 வயதில் இருக்கிறீர்கள். என் மீது நீங்கள் அளவு கடந்த அன்பை வைத்திருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் இந்த நாளை…. இந்த தருணத்தை… கொண்டாட வேண்டும் என்று இங்கு வருகை தந்திருக்கிறீர்கள். இந்த அன்பு ஒன்றே போதும்.. நான் எப்போதும் நன்றாகவே இருப்பேன். இங்கிருக்கும் தம்பிகளுக்கும் , தங்கைகளுக்கும் சொல்லும் ஒரே விசயம் இதுதான். அப்பா இந்த மேடையில் சொன்னது தான்.
நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஒரு சப்ஜெக்ட்டில் மட்டும் தான் பாசானேன். பன்னிரண்டாம் வகுப்பிலும் எல்லா சப்ஜெக்டிலும் பெயில் ஆனேன். பப்ளிக் எக்ஸாமில் மட்டும்தான் பாஸானேன். லைஃப் இஸ் பியூட்டிஃபுல். வாழ்க்கையை நம்புங்கள். வாழ்க்கையில் நிறைய அழகான விசயங்கள் நடக்கும். வாய்ப்புகள் வரும்போது அதை தவற விடாதீர்கள். வாழ்க்கையில் ஒரு முறை ..இரண்டு முறை அல்லது மூன்று முறை வாய்ப்பு கிடைக்கும். அதனைத் தவற விட்டு விடாதீர்கள். இந்த வயதில் எல்லோரும் ரிஸ்க் எடுக்கலாம். தவறில்லை. பேரார்வத்துடன் இருந்தால் மட்டும் போதாது. முழுமையான ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும். எல்லோருக்கும் அழகான வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
இந்தப் படத்தில் கார்த்திக் சுப்புராஜ் சொன்னது போல் நிறைய லேயர்ஸ் இருக்கிறது. ஆனால் எனக்கு பிடித்த விசயம் ஒன்று இதில் இருக்கிறது. நானும், பூஜாவும் பேசிக் கொண்டிருக்கும்போது தம்மம் … தி பர்பஸ்… என்பதை பற்றி பேசுவோம். இந்த வேகமான வாழ்க்கையில் கார்த்திக் சுப்புராஜ் சொன்ன அந்த ரெண்டு விசயங்கள் என்னை கவர்ந்தது.
என்னுடைய பர்பஸ் ..அகரம் பவுண்டேஷன் தான். இதற்கும் உங்களுடைய ஒத்துழைப்பு இருக்கிறது. படிப்பில் ஆவரேஜ் ஸ்டூடண்ட்டான எனக்கும் ஒரு வாழ்க்கையை கொடுத்து அதன் மூலமாக எனக்கு ஒரு சக்தியை கொடுத்து ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட தம்பிகளும், தங்கைகளும் பட்டதாரி ஆகியிருக்கிறார்கள். இன்னும் நிறைய பேர் பட்டதாரி ஆவார்கள். இதற்கு அகரத்தில் பணியாற்றும் அனைவருக்கும் பங்கு இருக்கிறது. இதை நான் எப்போதும் பெருமிதமாக கருதுவேன்.
மே முதல் தேதியன்று வெளியாகும் கார்த்திக் சுப்புராஜின் ‘ரெட்ரோ’ படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து கொண்டாடுங்கள். ஐ லவ் யூ ஆல். உங்கள் அன்பிற்கு நன்றி” என்றார்.