அமரர் கி.ரா.வுக்கு அரசு சார்பில் சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

எழுத்துலகின் பேராசான் கி.ரா.வுக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:

தமிழ் இலக்கியத்திற்குச் செழுமை சேர்த்த கரிசல்காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணன் (கி.ரா.), ஏட்டறிவைக் காட்டிலும் பட்டறிவால் பல இலக்கியப் படைப்புகளைத் தந்தவர்; வட்டார வழக்கு சார்ந்த இலக்கியப் படைப்புகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.

மறைந்த எழுத்தாளர் கி.ரா. படித்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை அரசு சார்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கவும், அவரது நினைவினைப் போற்றும் வகையிலும், அவரது படைப்பாளுமையை வெளிப்படுத்தும் வகையிலும், அவருடைய புகைப்படங்கள், படைப்புகள் ஆகியவற்றை, மாணவர்களும் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் வகையில் ஓர் அரங்கம் நிறுவப்படும்.

கரிசல் இலக்கியத்தை உலகறியச் செய்த கி.ரா.வுக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்..

இவ்வாறு ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இரங்கல் செய்தி:

முன்னதாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி வருமாறு:

கி.ரா என்று எழுத்துலகில் அன்போடு அழைக்கப்பெறும் கி.ராஜநாரயணன் மறைவு கரிசல் மண்ணின் கதைகளுக்கு ஓர் முற்றுப்புள்ளி. தமிழின் ஆகச்சிறந்த கதைசொல்லியான அவரை இழந்து நிற்கிறோம்.

தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்து தேம்புகிறாள். யார் ஆறுதல் சொல்வார்? இந்த மண் உள்ளவரை, அதில் கரிசல் இலக்கியம் உள்ளவரை, ஏன், தமிழ் உள்ளவரை நமது உள்ளங்களில் அவரது புகழ் வாழும்.

அந்தோ! அந்தக் கரிசல் குயில் கூவுவதை நிறுத்திக் கொண்டதே! அவர் மறையவில்லை; எழுத்துகளாய் உயிர் வாழ்கிறார். நம் உயிரில் கலந்து வாழ்கிறார். வாழ்க அவரது புகழ்! அவரது குடும்பத்தினருக்கும், சக படைப்பாளிகளுக்கும், வாசகர்களுக்கும், தமிழர்களுக்கும் என் நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சாகித்ய அகாடமி விருதுபெற்று தமிழ் இலக்கியத்தின் பேராளுமையாய்ப் பெருவாழ்வு வாழ்ந்த கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ரா.வின் புகழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், அவரது இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.