ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடும் ‘காற்று வெளியிடை’: 7ஆம் தேதி ரிலீஸ்!

தமிழ் திரையில் தனக்கென தனி பாணியை உருவாக்கி, அதன் மூலம் திரைப்பட ரசிகர்களை பல்லாண்டு காலமாக கட்டிப்போட்டு வைத்திருப்பவர் இயக்குனர் மணிரத்னம்.

இவரது இயக்கத்தில் வெளியான காதல் படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெறுவதுடன் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிப்பவையாக இருக்கும்.

அந்தவகையில், அவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘ஓகே கண்மணி’ பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்பட்டது.

இதையடுத்து மணிரத்னம் தற்போது கார்த்தி – அதிதி ராவ் ஹிடாரியை வைத்து `காற்று வெளியிடை’ படத்தை உருவாக்கியுள்ளார். தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் மணிரத்னம் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வருகிற 7ஆம் தேதி ரிலீசாக உள்ள இப்படம் இந்திய விமான படையின் பின்னணியில் உருவாகியுள்ள ஒரு அழகான காதல் கதையை கொண்டது.

இப்படத்திற்கான சென்னை நகர வெளியீட்டு உரிமையை, பல்வேறு வெற்றி படங்களை வெளியிட்ட பிரபல நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

`பாகுபலி 2′, `செம போத ஆகாதே’ உள்ளிட்ட படங்களின் உரிமையையும்  ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமே வாங்கியுள்ளது. மேலும் விஜய்யின் 61வது படம் மற்றும் `சங்கமித்ரா’ உள்ளிட்ட பிரமாண்ட படங்களை இந்நிறுவனமே தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.