“ஜெயலலிதா உண்மையில் எப்போது இறந்தார் என்பதுகூட யாருக்கும் தெரியாத நிலை…!”

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும், பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சுப.உதயகுமாரன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:

மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு எங்களின் ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது கொள்கைகள், செயல்பாடுகள் குறித்து ஏராளமான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர் எண்ணிறந்த தமிழ் மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றவர் என்பதை உணர்ந்திருக்கிறோம், அதனை மதிக்கிறோம்.

இவ்வளவு பெரிய ஒரு மக்கள் தலைவரை ஒரு சிறு கூட்டம் தனிமைப்படுத்தி, தங்கள் கைகளுக்குள், கட்டுக்குள் வைத்து, அவரது முகத்தைக்கூட சுமார் எழுபது நாட்களாக தமிழ் மக்களுக்குக் காட்டாமல், ரகசிய மருத்துவம் பார்த்த விதம், தன்மை போன்றவை பெரும் நெருடலை, ஏன் ஒருவித அச்சத்தையே உருவாக்குகின்றன.

முதல்வர் உண்மையில் எப்போது இறந்தார், எப்படி இறந்தார் என்பது கூட யாருக்கும் சரியாகத் தெரியாத நிலை ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. இறந்ததை அறிவிப்பதில் எழுந்த குழப்பங்கள், இறப்பு நாளை டிசம்பர் ஆறுக்கு இழுத்த சூழ்ச்சிகள் (அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள், பாபர் மசூதி இடிப்பு நாள்) என பல சந்தேகங்கள் எழுகின்றன. ஒரு சனநாயக நாட்டில் இப்படி நடப்பது நமது அரசியல் கட்டமைப்புக்கும், நமக்காக செயல்படும் அரசியல் ஆளுமைகளுக்கும் உகந்ததல்ல. இனிமேல் இப்படி ஒரு மரணம் எந்தத் தலைவருக்கும் நடக்கக் கூடாது, நடக்கவிடக் கூடாது என்று சூளுரைப்போம்.

செல்வி. ஜெயலலிதா அவர்களின் மறைவு தமிழக அரசியல் அரங்கில், குறிப்பாக அ.இ.அ.தி.மு.க. கட்சியில் ஒரு மாபெரும் வெற்றிடத்தை உருவாக்குகிறது. அதை இயன்றவரை நிரப்புவதும், அந்தக் கட்சியின் ஆட்சியை உரிய தலைவர் ஒருவரின் வழிகாட்டுதலின்படி நடத்துவதும் அந்த கட்சித் தலைவர்களின், தொண்டர்களின் பெரும் பொறுப்பு. இதை அவர்கள் அமைதியாகவும், திறம்படவும் செய்து முடிக்க உதவுவது பிற அரசியல் கட்சிகளின், பொதுமக்களின் கடமை. இந்த சனநாயக அமைப்பில் அதிகார துஷ்பிரயோகம் செய்து, குழப்பங்களை ஏற்படுத்தி, சில தன்னலவாத சக்திகள் குளிர்காண முயல்வது முற்றிலும் தவறானது. முழுவதுமாக முறியடிக்கப்பட வேண்டியது.

அ.இ.அ.தி.மு.க. தோழர்கள் தங்கள் தலைவிக்குச் செய்யும் நன்றி இந்த ஆட்சி மாற்றத்தை அமைதியாகச் செய்து முடிப்பதும், பிற தேசிய, மாநில அரசியல் சக்திகள் உள்ளுக்குள் புகுந்து குழப்பங்கள் ஏற்படுத்த அனுமதிக்காமல் இருப்பதும்தான். தமிழ் மக்கள் அரசியலை தமிழ் மக்களாகிய நாம் சாதி, மதம், கட்சி பேதங்கள் கடந்து நடத்துவோம். இங்கே அன்னியருக்கு, மதவாதிகளுக்கு, சாதி வெறியர்களுக்கு, பெண் வெறுப்பாளர்களுக்கு, பெரு முதலாளிகளுக்கு, பாசிஸ்டுகளுக்கு கடுகளவும் இடம் கிடையாது என்பதை உரக்கச் சொல்வோம்.

செல்வி. ஜெயலலிதா அவர்கள் மீது அன்பும் மரியாதையும் கொண்ட அவரது கட்சிக்காரர்கள் கண்ணியமாக நடந்து அவருக்கு, அவரது நினைவுக்கு பெருமை சேர்க்க வேண்டும். ஒரு மாபெரும் மக்கள் தலைவரை இழந்திருக்கும் தமிழ் மக்கள் கட்டுப்பாட்டோடு நடந்து, அடுத்த அரசியல் மாற்றம் அமைதியாக நடந்தேற ஆவன அனைத்தும் செய்ய வேண்டும்.

செல்வி. ஜெயலலிதா அவர்கள் அமைதி பெறட்டும்!

தமிழும், தமிழரும், தமிழகமும் என்றென்றும் வெல்லட்டும்!!