கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்த மத்திய அரசின் வேலைவாய்ப்பு முகாம்!

மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் (Ministry of Skill Development &  Entrepreneurship) சார்பில் வேலை வாய்ப்பு முகாமை சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் மற்றும் ‘நீயா நானா’ கோபிநாத் தொடங்கி வைத்தனர்.

ஒரு வார காலம் நடக்கும் இந்த முகாம், கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள சிடிஐ வளாகத்தில் நடக்கிறது.

டிஜிட்டல் இந்தியா, தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா வரிசையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள திறன் இந்தியா திட்டத்தினை (Skill India Week celebrations) நடைமுறைப்படுத்தும் நோக்கில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த், ‘நீயா நானா’ புகழ் கோபிநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் உயர்நிலை தொழிற்பயிற்சி நிலையத்தின் (Advanced Training Institute) இயக்குநர் செந்தில்குமார் குத்துவிளக்கு ஏற்றி வைத்துப் பேசினார்.

பிஐபியின் கூடுதல் இயக்குநர் எஸ்.முத்துக்குமார், டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் டாக்டர் முகமது நயிமுர் ரகுமான், NIOS மண்டல இயக்குநர் ரவி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மத்திய பயிற்சி நிலையம், உயர்நிலை தொழிற்பயிற்சி நிலையம், NIMI, RDAT ஆகிய நிறுவனப் பணியாளர்கள் 400-க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

முகாமுக்கு வந்து பங்கேற்றவர்களுக்கான பணி நியமன ஆணை நாளை முகாமில் வழங்கப்படுகிறது.