“எச்.ராஜாவே, நான் பொலிட்பீரோவுக்கு பிறந்தவன் தான்!” – அருணன்

எச்.ராஜாவே, நான் பொலிட்பீரோவுக்கு பிறந்தவன் தான்..இன்னும் உரக்க பேசுவேன்

“பொலிட்பீரோவுக்கு பொறந்தவனே.. வாயை மூடடா” என்று என்னை பற்றி அநாகரீகமாக முகநூலில் பதிவு போட்டிருக்கிறார் பாஜகவின் தேசியச் செயலர் எச்.ராஜா.

அந்த கட்சியின் தேசியச் செயலரின் லட்சணமே இதுதான் என்றால், அதன் இதர பொறுப்பாளர்கள் எப்படி இருப்பார்கள் என்று புரிந்து கொள்ளலாம்.

நவோதயா பள்ளிகளை எதிர்த்து நான் பேசியதற்குத் தான் இந்த வசவு. அந்த பள்ளியின் அதிகாரபூர்வ வலைத்தளம் அதில் 9ஆம் வகுப்பிலிருந்து இந்தி/ஆங்கில வழி வகுப்பு மட்டுமே உண்டு,  தமிழ்வழி வகுப்பு இல்லை என்கிறது. அதுபோல பிற்படுத்தப்பட்ட வகுப்பாருக்கு இடஒதுக்கீடும் இல்லை என்கிறது. இந்த இரண்டு அநியாயங்களையும் அகற்றிவிட்டு நவோதயாவை கொண்டுவரத் தயாரா என்று தி.க. நடத்திய கண்டன கூட்டத்தில் கேட்டேன். அதற்கு பதில் சொல்ல வக்கில்லாத, துப்பில்லாத எச்.ராஜா ஏக வசனத்தில் இறங்கியிருக்கிறார்.

கேரளத்தில்தான் அதிக நவோதயாக்களாம். அதுவும் தப்பு. உ.பி.யில் தான் மிக அதிகம்-71. அந்த மாநிலம் கல்வி அறிவில் மிகவும் பின்தங்கியிருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ரகசியம்.

பிற மாநிலங்கள் ஏற்றிருப்பதாலேயே தமிழகம் நீட்டையோ, நவோதயாவையோ ஏற்க வேண்டும் என்று எங்கள் பொலிட்பீரோ சொல்லவில்லை. நாட்டின் பன்மைத் தன்மையை ஏற்ற கட்சி எங்களுடையது. பாஜகவை போல ஒற்றை மொழியை, ஒற்றை கலாச்சாரத்தை திணிக்கும் கட்சி அல்ல.

நான் பொலிட்பீரோவுக்கு பிறந்தவன் தான். அதனாலேயே நான் வாயை மூட மாட்டேன். எச்.ராஜா போன்ற வருணாசிரமவாதிகளை எதிர்த்து இன்னும் உரக்க பேசுவேன். அதுவே என் பிறவிப்பயன்.

RAMALINGAM KATHIRESAN (ARUNAN)