‘சேதுபதி’ விமர்சனம்

சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை தீ வைத்து கொளுத்தி கொலை செய்கிறது ஒரு கும்பல். அந்த கொலையை விசாரிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் சேதுபதிக்கு தடைகள், சிக்கல்கள், பிரச்சினைகள், இழப்புகள் ஏற்படுகின்றன. அதற்குப்பிறகு விஜய் சேதுபதி என்ன செய்கிறார்? என்ன ஆகிறார்? என்பது மீதிக் கதை.

விஜய் சேதுபதி நடிப்பில் ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தைக் கொடுத்த இயக்குநர் அருண்குமார், தற்போது புதிய களத்தில் படத்தைக் கொடுத்திருக்கிறார். கமர்ஷியல் சினிமாதானே என்று சாதாரணமாக நினைக்காமல், சின்ன சின்ன டீட்டெயிலிங்கில்கூட கூடுதல் அக்கறை காட்டி இருப்பது அவரின் உழைப்பைக் காட்டுகிறது.

காக்கிச்சட்டை விஜய் சேதுபதிக்கு அவ்வளவு பொருத்தம். முறுக்கு மீசை, மிரட்டும் பார்வை, அதிகாரத் தொனி, நடை, உடை, பாவனைகளில் நச்செனப் பொருந்துகிறார். குடும்பத்துடன் நேரம் செலவிடும்போது குழந்தையாக மாறுவது, கணவனாக மனைவியின் காலில் விழுவது, போலீஸ் அதிகாரியாக மிடுக்குடன் நடந்துகொள்வது என எல்லாவற்றிலும் ஸ்கோர் செய்கிறார்.

மகளுடன் காவல் நிலையத்துக்கு வருபவரை டீல் பண்ணும் விதம், வீட்டில் இல்லாத சமயம் மகனை வைத்து வில்லன்களை விரட்டும் விதம் போன்ற காட்சிகளுக்கு தியேட்டரில் கிளாப்ஸ் அள்ளுகிறது.

‘டேய் அப்படி மொறைக்காதே! சிரிப்பு சிரிப்பா வருது’ என விவேக் பிரசன்னாவிடம் சொல்லி சிரிக்கவைக்கும் விஜய் சேதுபதி, மகனிடம் ‘நீதான் ஆம்பளைப் புள்ள. பத்திரமா பாத்துக்கணும்’ என தைரியம் வளர்க்கும் போதும் மனதில் நிறைகிறார்.

குடும்பம் தொடர்பான எல்லா காட்சிகளிலும் ரசிக்கும் விதத்தில் பதிவு செய்ததற்காகவே தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது.

செண்பக மூர்த்தியாக நடித்திருக்கும் லிங்காவின் நடிப்பு கச்சிதம். விஜய் சேதுபதியிடம் பம்முவதும், தயங்கித் தயங்கி பேசுவதும், சிக்கலான காலகட்டத்தில் நண்பனாக பரிணமித்து பகிர்வதும் நல்ல அத்தியாயம்.

அவமானத்தில் கூனிக்குறுகுவது, பழிவாங்கல் படலத்தில் ஆரம்பிப்பது என வேல ராமமூர்த்தி கதாபாத்திரத்துக்கான வேலையை சரியாக செய்து முடிக்கிறார். சும்மா சும்மா உதார் விட்டுப் போகும் விவேக் பிரசன்னா நடிப்பால் கட்டிப் போடுகிறார்.

ரம்யா நம்பீசன் கதாநாயகிக்கான வேலையை பூர்த்தி செய்கிறார். அந்த ஆளு இப்போ திட்டுவான். அப்புறம் வந்து கொஞ்சுவான். அப்போ நான் இங்கே இருக்கணும் என்று சொல்லுமிடத்தில் அப்ளாஸ் வாங்குகிறார். கணவனே ஆனாலும், சூரிய வம்சம் கதையெல்லாம் வேணாம்… என்று விஜய் சேதுபதியை பணிய வைப்பது ரசனை ரகம்.

விசாரணை கமிஷனில் வரும் அதிகாரி… ‘சும்மா தொணதொணன்னு பேசாதப்பா. சேதுபதி உன் வேலை கன்ஃபார்ம்யா’ என சொல்லும்போதும் அந்த வசனத்தை உதிர்த்தவருக்கும் சேர்த்தே விழுகிறது கைதட்டல்.

தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும், நிவாஸ். கே. பிரசன்னாவின் இசையும் படத்துக்கு கூடுதல் பலம். ஹேய் மாமா பாடல் ரசிக்க வைக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு கவனிக்க வைக்கிறது.

போலீஸ் கதையில் பக்கா ஸ்கெட்ச் போட்டு திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் அருண்குமார். அது விஜய் சேதுபதிக்கு மிகச் சரியாக பொருந்திப் போகிறது.

‘சேதுபதி’ – கம்பீரம்

Read previous post:
0004a
‘நவரச திலகம்’ விமர்சனம்

மா.கா.பா.ஆனந்தின் அப்பா இளவரசு திருச்சியில் பார் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார். எந்த வேலைவெட்டிக்கும் செல்லாத மா.கா.பா. சொந்த முயற்சியில் முன்னேற வேண்டும் என்பதற்காக தனது அப்பாவின் சொத்துக்களை

Close