சீமானின் சொல் – ஈழத்தமிழரை கடும் உளைச்சலுக்கு உள்ளாக்கும் சொல்!

இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியும், சீமானும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்ற எண்ணம் அயல்நாடுகளில் வாழும் இந்தியத் தமிழர்களிடம்கூட இருந்திருக்கிறது. அவர் மட்டுமாவது வெற்றிபெற்று விடுவார் என்று நினைத்திருந்த ஒருவரை அமெரிக்காவில் சந்தித்தேன். திருச்சியிலிருந்து வந்தவர்.

“இந்தியாவிற்கு எப்போது வந்தீர்கள்?” என்று கேட்டேன்.

“மூன்று வருடமாச்சு!” என்றார்.

“உங்கள் பார்வையில் படும் தகவல்கள் எல்லாம் இணையம் சார்ந்தவைகள்; அதனால் அப்படித்தான் யோசிக்க முடியும்” என்று சொன்னேன். அரைமனதோடு ஒத்துக்கொண்டார்.

கனடாவில் இருந்தபோது தேர்தல் முடிவுகள் வரவில்லை. வந்திருந்தால் நிச்சயம் ஈழத்தமிழர்களில் பெரும்பாலோர் இந்த பதிலை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் ஒத்துக்கொள்ளக்கூடிய பதிலை என்னால் தர இயலாமல் தவித்திருப்பேன்.

புலம்பெயர்ந்து ஐரோப்பாவிலும் கனடாவிலும் வாழும் ஈழத்தமிழர்கள், தமிழ்நாட்டுத் தேர்தலைத் தீர்மானிக்கும் முதன்மைக் காரணியாக மொழிப்பற்றும் அதன் உடன்பிறப்பான இனப்பற்றுமே இருக்கிறது என நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இன்னும் தீவிரமாக இருந்தது. அப்போது அவர்களின் நம்பிக்கையைச் சுமந்தவர் வைகோ.

2011 தேர்தல் முடிவுக்குப்பின் நார்வேயில் நடந்த பொங்கல் விழாவொன்றிற்கு நண்பர் சுகுமாரோடு போயிருந்தேன். இரவில் படுப்பதற்கும் காலை உணவுக்கும் தூரமாக இருந்த ஒருவரின் வீட்டில் ஏற்பாடு.

அவரது வீட்டில் கிடந்த இதழ்களில் வைகோவின் முழுப்பக்கப் படங்கள் இருந்தன. இரவு முழுவதும் என்னிடம் வைகோவின் அரசியலையும் அவரிடம் கொண்டிருக்கும் எதிர்பார்ப்பையுமே பேசிக்கொண்டிருந்தார். தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றே என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். அவரது கருத்துகளை முழுமையாக நான் மறுத்துப் பேசுவேன் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்.

“தமிழ்நாட்டு அரசியல்வாதி, தமிழ்நாட்டரசியல் செய்யாமல் ஈழத்தமிழ் அரசியல் செய்வதற்கு என்ன காரணம்?” என்று கேட்டேன். இனப்பற்று, மொழிப்பற்று என்று மட்டும் பதில் சொன்னார்.

இப்போது அதே வைகோ அந்நிய மொழிக்காரராகவும், தமிழினத்தை அடிமைப்படுத்தவந்த ஆதிக்க வந்தேறியாகவும் ஆகிவிட்டார்!

வந்துமோதும் விசைக்கேற்ப நிலைத்துவிட்ட பொருள் நகர்ந்து இடத்தைக் காலிசெய்யும். இது அறிவியல் விதி. ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஈழத்தமிழர்களின் மனதில் அசையாப் பெருங்கல்லாய் இருந்த வைகோவை கவணிலிருந்து புறப்பட்ட விசையுடன் இடம்பெயர்த்துவிட்டார் சீமான். அவரது கவணின் விசைத்திறன் ‘வந்தேறி’ என்ற சொல்லாக இருக்கிறது. இந்தச் சொல் புலம்பெயர்ந்து அலையும் ஈழத்தமிழர்களைக் கடும் உளைச்சலுக்கு உள்ளாக்கும் சொல் என்பது உணரப்பட இன்னும் சில காலம் ஆகலாம்…

– அ.ராமசாமி