‘சபாபதி’ அனுபவம் பற்றி சந்தானம்: ”திக்கித் திக்கி பேசி நடிப்பது ரொம்ப கஷ்டமாக இருந்தது!”

சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம் ‘சபாபதி’. வருகிற (நவம்பர்) 19ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தில் சந்தானம் திக்கித் திக்கிப் பேசுபவராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரீத்தி வர்மா நடித்துள்ளார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, முனீஸ்காந்த், மதுரை முத்து, ‘குக் வித் கோமாளி’ புகழ், வம்சி, சாயஜி சிண்டே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கியுள்ளார். சாம்.சி.எஸ். இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்ய, லியோ ஜான் படத்தொகுப்பு செய்துள்ளார்.

ஆர்.கே.எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.ரமேஷ்குமார் தயாரித்துள்ளார். மதுரை அன்புவின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது.

0a1h

’சபாபதி’ திரைப்படம் வருகிற 19ஆம் தேதி திரைக்கு வருவதையொட்டி படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வில் நாயகன் சந்தானம் பேசியதாவது.

’சபாபதி’ சந்தானத்தின் படம் அல்ல, சபாபதி என்ற கதாபாத்திரத்தின் படம். இதில் எங்கேயும் சந்தானம் என்ற நடிகர் தெரியவே மாட்டார், சபாபதி என்ற கதாபாத்திரம் தான் தெரியும்.

நான் இதில் திக்கித் திக்கிப் பேசும் குறைபாடுள்ள நபராக நடித்திருக்கிறேன். அந்த குறைபாடு உள்ளவர்கள் எப்படிப்பட்ட சிரமங்களை சந்திக்கிறார்கள் என்பதோடு, அவர்கள் முயற்சித்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பது போன்ற பல நல்ல விஷயங்களை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறோம்.

இந்த கதையை இயக்குநர் என்னிடம் சொன்னபோது, எனது அப்பா கதாபாத்திரத்திற்கான நடிகர் கிடைத்துவிட்டால் நிச்சயம் இந்த படத்தை பண்ணலாம், என்று கூறினேன். அந்த அளவுக்கு அப்பா கதாபாத்திரம் சிறப்பாக இருக்கும். அந்த கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் சார் மிக சிறப்பாக நடித்துக் கொடுத்திருக்கிறார்.

இயக்குநர் தனது வாழ்க்கையில் பார்த்த கதாபாத்திரங்களை தான் படத்தில் வைத்திருக்கிறார். அதனால், எனது ஒவ்வொரு அசைவையும் அவர் சபாபதியை மனதில் வைத்து தான் செய்திருக்கிறார். திக்கித் திக்கி…பேசுவதைக்கூட மிக நுணுக்கமாக செய்ய வேண்டும், என்று என்னிடம் கூறிய இயக்குநர் அந்த விஷயத்தைக்கூட மிக நேர்த்தியாக செய்திருக்கிறார். எனக்கு மட்டும் அல்ல, ரசிகர்களும் இது ஒரு வித்தியாசமான நல்ல பொழுதுபோக்கு படமாக இருப்பதோடு, நல்ல மெசஜ் சொல்லும் படமாகவும் இருக்கும்.

திக்கித் திக்கி பேசி நடிப்பது சவாலான விஷயம். கமல் சார் உள்ளிட்ட பல நடிகர்கள் இதைவிட பெரிய விஷயங்களைச் செய்திருந்தாலும், எனக்கு திக்கித் திக்கி பேசி நடிப்பது ரொம்ப கஷ்டமாக இருந்தது. குறிப்பாக, டப்பிங் பேசும்போது ரொம்பவே கஷ்டப்பட்டேன். ஒரு கட்டத்தில் நரம்புகள் பாதித்து எனக்கு தலைவலியே வந்துவிட்டது. அப்போதுதான் கமல் சார் போன்றவர்களை நினைத்துக்கொண்டேன். அவர்கள் எப்படியெல்லாம் ஒரு கதாபாத்திரத்துக்காக கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று நினைத்துப் பார்த்தேன். டப்பிங் முடிந்ததும் மருத்துவமனையில் சிறிது சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு தான் தலைவலி சரியானது.

இவ்வாறு சந்தானம் பேசினார்.

Read previous post:
0a1f
Grandma – A Horror movie ready to scare audiences soon

Tamil movie buffs have come across several Horror movies, but most of them are confined to stereotypical traits. There has

Close