“500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது”: மோடியின் ‘துக்ளக் தர்பார்’ நடவடிக்கை!

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பல லட்சம் கோடி கருப்புப் பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவோம். அதை பிரித்து ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தலா ரூ.15லட்சம் இலவசமாக கொடுப்போம்” என தேர்தல் வாக்குறுதி கொடுத்து பிரதமர் ஆனவர் நரேந்திர மோடி. ஆனால், ஆட்சிக்கு வந்து சுமார் 2 ஆண்டுகள் ஆகியும் அவர் இந்த வாக்குறுதியை நிறைவேற்ற இயலவில்லை.

தன் இயலாமையை மறைப்பதற்காகவும், மக்களை திசை திருப்புவதற்காகவும், ‘நானும் கருப்பு பணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்கிறேன்’ என்று காட்டிக்கொள்வதற்காகவும் “இன்று (செவ்வாய்) இரவு 12.00 மணி முதல் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது, அதனைப் பயன்படுத்த முடியாது” என்று அறிவித்துள்ளார் மோடி.

நாட்டு மக்களுக்கு ஆற்றிய சிறப்பு தொலைக்காட்சி உரையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள மோடி, அதற்கு பதிலாக புதிதாக வேறு 500 ரூபாய் நோட்டுக்களையும், 2000 ரூபாய் நோட்டுக்களையும் பழக்கத்திற்கு கொண்டுவர இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இதன்மூலம் இதுவரை 1000 ரூபாய் நோட்டுக்களாக பதுக்கி வைத்திருந்த கருப்பு பண முதலைகள், இனி எதிர்காலத்தில் 2000 ரூபாய் நோட்டுக்களாக பதுக்கி வைத்துக்கொள்ள வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் மோடி.

இந்தியாவின் பெரிய அரசியல் கட்சிகளும், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும் பல கோடி ரூபாய் கருப்புப் பணத்தில் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. உண்மையிலேயே அவற்றை ஒடுக்கி கருப்பு பண புழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற அக்கறை இருந்தால், புதிதாக வேறு 500 ரூபாய் நோட்டுக்களையோ, 2000 ரூபாய் நோட்டுக்களையோ புழக்கத்திற்கு கொண்டு வரவே கூடாது. 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே புழக்கத்தில் இருந்தால் போதும் என்று துணிச்சலாக முடிவு எடுக்க வேண்டும்.

இதை செய்யாமல், மோடி தற்போது எடுத்திருக்கும் அரைவேக்காட்டுத்தனமான நடவடிக்கையானது, அடுத்த சில மாதங்களுக்கு சாதாரண நடுத்தர வர்க்கத்தினரையும், மாதாந்திர சம்பளதாரர்களையும் தான் கடுமையாக பாதிக்கும் என்பதோடு, எதிர்காலத்தில் கறுப்புப் பண முதலைகள் மேலுமதிகமாக கருப்பு பணம் பதுக்கவே வழிவகுக்கும்.

அமரகீதன்