இளவரசனின் உயிர் சென்ற அந்த தண்டவாளம் நம் எல்லாருக்கும் காத்திருக்கிறது…

“தங்களை எல்லாம் நாங்கள் அடக்கி மிதித்து வைத்திருக்கிறோம் என்று கீழ்சாதிக்காரர் சொல்லிக் கொண்டு கலகங்கள் செய்கிறார்கள். இந்த நேரத்தில் அவங்களோடு சமனாக போகலாமா?”

கமலம் ஒன்றுக்குமே பதில் சொல்லாமல் இருந்தாள்.

“நாளைக்கு பின்னேரம் நாங்கள் கொழும்புக்கு போக வேணும். அவங்க பாளை கத்திகளோட புழங்குறவங்க. இரக்க சிந்தனை இல்லாதவங்க. தற்சமயம் ஏதாவது அடிபிடிக்கு வருவாங்க.. அதற்கு முந்தி ஒரு அலுவல் இருக்குது.”

கண்களாலேயே என்ன என்பதுபோல அவரை பார்த்தாள் கமலம். “நாளைக்கு காலையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு போகணும். அங்கே விசாரணை நடக்கும்.”

அவர் அவ்வளவு நேரமாக ஏன் வெகு ஆறுதலாக கதைத்தார் என்பதை அவள் அப்போதுதான் விளங்கி கொண்டாள். எனினும் அதற்கும் அவள் ஒரு பதிலும் சொல்லவில்லை. மீண்டும் கணபதிப்பிள்ளை அழுத்தமாகக் கூறினார்.

“நான் சொல்லித்தந்தது மாதிரியே சொல்ல வேண்டும். பிறகு வீண் கஷ்டங்கள் வரும்….”

குழப்பங்கள் நிறைந்த மனதினோடு அடுத்த நாள் காலை கமலம் போலீஸ் நிலையத்துக்கு சென்றாள். பாலசிங்கமும் சிலரோடு வந்திருந்தான். அவனை பார்க்கவே கூச்சமாக இருந்தது கமலத்திற்கு. ஓரக்கண்களால் பார்த்தாள். மெலிந்து கறுத்து நெற்றியில் ஒட்டிய ப்ளாஸ்திரியோடு நின்றான் பாலசிங்கம். அவளையே கூர்ந்து பார்த்தபடி நின்ற பாலசிங்கத்தின் மனம் அவளின் வார்த்தைகளையே எதிர்நோக்கியிருந்தது. அவளின் சொற்களிலேதான் எல்லாமே இருக்கிறது. அவனின் சந்தோஷம், நிம்மதி, எதிர்காலம் எல்லாம்.

அவன் எதிர்பார்த்திருந்த அந்த நிமிஷங்கள் வந்தது. கமலம் மெல்ல நடந்து போய் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு எதிரே நின்றாள்.

“நீர் யாரோடு போகப்போகின்றீர்?”

இன்ஸ்பெக்டரின் குரல் ஓயும்முன் அவளின் பதில் வந்தது. “நான் என்னுடைய அம்மா அப்பாவோடையே போகப் போகிறேன்…”

இன்ஸ்பெக்டர் புன்னகை செய்தார்.

பாலசிங்கம் ஒன்றுமே பேசவில்லை. அவனுக்கு எதுவுமே தெரியவில்லை. வாயைத் திறந்து ஓலமிட வேண்டும் போலிருந்தது. மிகப் பரிதாபகரமாகத் தன் கூட்டாளிகளை பார்த்தான். தலைகுனிந்து நின்றனர்.

‍‍‍‍‍‍ ‍‍செ.யோகநாதன் எழுதிய ‘காவியத்தின் மறுபக்கம்’ குறுநாவலின் இறுதிப்பகுதிகள் இவை.

இவ்வாறான காவியங்கள் நிறைய எழுதப்படுகின்றன. அழிக்கப்படுகின்றன. கிழிக்கப்படுகின்றன. அழிக்கப்படுதலை கூட காதலர்கள் தாம் கொண்ட முரண்களால் பிரிகின்றனர் என ஏற்று கொள்ளலாம். ஆனால் அவர்களின் அனுமதியின்றி சின்னாபின்னப்படுத்தப்பட்டு, இவ்வுலகில் இருந்து கிழிக்கப்படுதல் எல்லாம்!!!!

இப்படித்தான் ஒரு காவியம் நான்கு வருடங்களுக்கு முன் கிழிக்கப்பட்டது. கிழிக்கப்படுவதற்கு முதல் நாள் மேற்கூறியது போன்றதொரு விசாரணை அந்த காவிய கதாபாத்திரங்களுக்கும் நடத்தப்பட்டது. காவியம் எழுத தொடங்கியவர்கள் அவர்கள் தான். முடிக்க விரும்பியபோது பேனா வேறு கைகளுக்கு போயிருந்தது. முடிவு நேரும் முன்னமே முடித்து வைக்கப்பட்டது.

சரியாக இந்த நாள், நான்கு வருடங்களுக்கு முன். ஒரு தண்டவாளத்தின் அருகே தலைப்பிளந்து கிடந்த தன் மகன் உடல் மீது விழுந்து அழுது அரற்றி ஆர்ப்பரித்தாள் அந்த தாய். அவளின் அழுகை ஆண்டவனுக்கு கேட்கவில்லை. ஆண்டவனுக்கும் கேட்கவில்லை.

அது போன்ற ஊமைஅழுகைகள் இந்த மண்ணின் வரலாற்றில் ஏராளம். சத்தம் கேட்காத பாவனைகளுடன் அந்த அழுகைகளை நாம் கடந்து போய் விடுவோம். ஆனாலும் உங்கள் ஆழ்மனதுக்குள் அந்த அழுகைகள் சேர்ந்து ஊனமாக்கி உங்கள் அழுகையையும் இன்று ஊமையாக்கி உள்ளது. உங்களின் அழுகையும் இப்போது ஆள்பவனுக்கு கேட்கவில்லை. அந்த ஆண்டவனுக்கும் கேட்கவில்லை. இப்போது அந்த தாயின் அழுகை சத்தம் உங்களுக்குள் கேட்கும். உங்களின் இன்றைய வலியை அவள் பல நூறு வருடங்களாய் அனுபவித்து வருகிறாள்.

நம் உறவுகளும் பிரிக்கப்படும். நம் தலைகளும் பிளக்கப்படும். ஒன்று மட்டும் நிச்சயம். நம் தலைகளுக்குள் உள்ள மூளைகளில் நிச்சயமாக ஈரம் இருக்காது.

இளவரசனின் உயிர் சென்ற அந்த தண்டவாளம் நம் எல்லாருக்கும் காத்திருக்கிறது உயிரெடுத்த அதிகாரம் எங்கிருக்கிறது என்ற உண்மை நமக்கு உறைக்கும் வரை.

RAJASANGEETHAN JOHN