இந்துத்துவ மூடத்தன மயக்கத்தின் பாதிப்பில் நடிகர் மாதவன்!

நடிகர் ஆர் மாதவன் ‘நம்பி எஃபக்ட்’ எனும் படத்தை இயக்கி நடித்து இருக்கிறார். இஸ்ரோவின் முன்னாள் தலைமை இயக்குனர் நம்பி நாராயணன் குறித்த படம் அது. படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இப்படம் பற்றிய ஒரு நிகழ்வில் பேசுகையில் மாதவன் பின்வரும் விஷயத்தை குறிப்பிடுகிறார்:

===

செவ்வாய் கிரகத்துக்கு போவதற்கான தொழில் நுட்பம் நம்மிடையே இருக்கவில்லை. அதற்கு மூன்று என்ஜின்கள் தேவைப்படுகின்றன. அதற்கு பதிலாக நாம் நமது பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் கோள்களின் இருப்பிடம் பற்றிய கணக்கீடுகளை வைத்து துல்லியமாக கணக்கிட்டுப் பார்த்தோம். அந்தக் கணக்கீட்டை வைத்து மூன்று இன்ஜின்கள் தேவைப்படாமலே செவ்வாய் கிரகத்துக்கு போயிருக்கிறோம்.

===

இந்த விஷயத்தை நம்பி நாராயணனின் மகன் அவரிடம் தெரிவித்திருப்பதாக கூறுகிறார். ரிக்வேதத்தில் ரிலேடிவிடி, மகாபாரதத்தில் டெஸ்ட் டியூப் பேபி, ராவணனின் ஏர்போர்ட்கள், என்ற வரிசையில் பஞ்சாங்கத்தில் ஃபோட்டான் என்று சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான் போல.

பண்டைய இந்தியர்கள் வான சாஸ்திரத்தில் அதீத சாதனைகளை நிகழ்த்தி இருந்திருக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அந்த ‘சாதனைகள்’ எதுவுமே பண்டைய உலக அளவீட்டில்தான் சாதனைகள் எனப்படும். நவீன உலக ஒப்பீட்டில் அவை மொக்கையாகவே தொனிக்கும். உதாரணத்துக்கு, பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்று பண்டைய அறிஞர்கள் சிலர் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு ஒரு ஐந்தாம் வகுப்பு மாணவனே ‘இதெல்லாம் சாதனையா பாஸ்?’ என்று கேட்பான். ஆனால் எந்த டெலஸ்கோப்பும், கணக்கீட்டு வழிமுறைகள் எதுவும் இன்றி வெறும் கண்களால் கவனித்ததை வைத்து அப்படி ஒரு முடிவுக்கு வர இயன்றது ஆச்சரியம்தான். 17ம் நூற்றாண்டில் டெலஸ்கோப் எல்லாம் வைத்து கலிலியோ சொல்லிக் கூட ஐரோப்பியர்கள் அதை நம்பவில்லை.

இப்படி சில குறிப்பிட்ட கவனிப்பு சார்ந்த விஷயங்களை வான சாஸ்திரத்தில் நாம் செய்திருக்கிறோம். நம்மை விட பல மடங்கு சாதனைகளை வான சாஸ்திரத்தில் பண்டைய கிரேக்கர்கள் சாதித்து இருக்கிறார்கள். ஆனால் மாதவன் குறிப்பிடும் ரேஞ்சுக்கெல்லாம் இல்லை. அவரது கூற்றின்படி ஈர்ப்பு விசை கணக்கீடுகள், சூரியப் பிழம்புகள் (Solar flares), ஒளி வேகம் (photon) போன்றவை குறித்தெல்லாம் நம் பஞ்சாங்கக்காரர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். இவையெல்லாம் பண்டைய இந்திய அறிஞர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று உறுதியாக சொல்லி விடலாம். நியூட்டன் வரும் வரை ஈர்ப்பு விசையின் நடைமுறை பயன்பாடு நம் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஃபோட்டான் என்ற ஒரு துகள் இருப்பதே 20ம் நூற்றாண்டில்தான் உலகுக்குத் தெரிந்தது. நவீன கருவிகளை வைத்துதான் அதன் வேகத்தை துல்லியமாக கணக்கிட முடிந்தது. இவை எதுவும் பண்டைய வான சாஸ்திரம் அறிந்திருக்காது. அப்படியே அறிந்திருந்தாலும் பிரத்தியேகமாக எதும் பயன்படுத்த வேண்டி பஞ்சாங்கம் தேவைப்பட்டிருக்காது. நவீன அறிவியலில் கிடைக்காத ஏதோ ஒரு தகவல் பஞ்சாங்க நூல்களில் பொதிந்து இருந்தால்தான் அது சாத்தியம்.

அதிலும் அவர் சொன்ன ஒரு விஷயம் முக்கியமாக ஆச்சரியம் கொடுத்தது. ஒரு கிரகத்தை சுற்றி வந்தால் அந்த கிரகத்தின் ஈர்ப்பு விசை காரணமாக கிடைக்கும் உந்துதலை வைத்து கொஞ்ச தூரம் மிகக் குறைந்த எரிபொருளில் விண்வெளியில் பயணிக்க முடியும். இதற்கு Gravity Assist Maneuver அல்லது Gravitational Slingshot என்று சொல்வார்கள். சும்மா உண்டிக்கோலால் அடித்து விடுவது போன்ற எஃபக்ட் இதில் கிடைக்கும். இப்படித்தான் வாயேஜர் விண்கலம் பெரிய கோள்களை சுற்றி சுற்றி அவற்றின் ஈர்ப்பு விசை உந்துதல் மூலம் சூரிய மண்டலத்தின் எல்லை வரை பயணிக்க முடிந்திருக்கிறது. இந்த விஷயம் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது எனில் ஈர்ப்பு விசை சமன்பாடு, ஒவ்வொரு கோளின் வட்டப்பாதை, சுற்றும் கால அளவு எல்லாமே நமது முன்னோர்களுக்குத் தெரிந்திருக்கிறது என்று அர்த்தம். அது தெரிந்து இருந்ததா இல்லையா என்பது ஒரு புறம் இருக்கட்டும். பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையில் வேறு கிரகம் எதுவும் இல்லாததால் இப்படிப்பட்ட உண்டிக்கோல் எஃபக்ட் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அப்படியானால் எதை வைத்து குறைவான எரிபொருளில் போயிருக்கிறார்கள்?

மாதவன் படித்தவர். கூடவே இஸ்ரோவின் நம்பி நாராயணன் அவர்களின் சரிதையை படமாக வேறு இயக்கி நடித்து இருக்கிறார். அப்போது ராக்கெட் தொழில் நுட்பம் பற்றி கொஞ்சமாவது படித்து அல்லது கேட்டுப் புரிந்து கொண்டிருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட நபரும் பஞ்சாங்கம் அது இது என்று வழக்கமான ‘முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை,’ பல்லவியைப் பாடுகிறார். இந்துத்துவ மூடத்தன மயக்கத்தின் பாதிப்பு இது.

இந்தப் பிரச்சினையில் இந்துத்துவம் எங்கே வந்தது என்று கேட்கலாம். ஒன்று, நவீன அறிவியலை பண்டைய இந்தியாவில் போய்த் தேடும் வழக்கத்துக்கு அவர்கள்தான் ஓனர்கள். இரண்டு, மாதவனின் இந்தக் கூற்று கூட ஒரிஜினல் இல்லை. மனோகர் சாம்பாஜி பிடே என்ற இந்துத்துவ தலைவர் ஒருவர் இதை முன்பே சொல்லி இருக்கிறார். நிலவுக்கு நாசா அனுப்பிய ராக்கெட்டுகள் எல்லாமே தோல்வியில் முடிந்து கொண்டிருந்தன. அதற்குப் பின் நாசாவில் இருக்கும் ஒரு இந்திய விஞ்ஞானியின் அறிவுரையின் பேரில் நாசா நமது பஞ்சாங்கத்தை பரிசீலித்தது. அதன்படி கணக்கீடுகள் செய்து சரியாக ஏகாதசி அன்று விண்கலத்தை ஏவி இருக்கிறார்கள். திட்டம் வெற்றி அடைந்து விண்கலம் நிலவில் இறங்கியது, என்று முன்பு இவர் பேசி இருக்கிறார். இவர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவரும் கூட; மோடி இவரை அன்புடன் ‘குருஜி’ என்றுதான் அழைக்கிறார். நாசாவுக்கே ஏகாதசி மகிமையை சொல்லிக் கொடுத்தவர்கள் நாம் எனும் போது, இஸ்ரோவுக்கு துவாதசி மகிமையை சொல்லிக் கொடுத்திருக்க மாட்டோமா என்ன?

இவர் இயக்கி, நடித்து இருந்த ‘நம்பி எஃபக்ட்’ படத்தைப் பார்க்கலாம் என்று முன்னர் யோசித்து வைத்திருந்தேன். டிக்கட், பார்க்கிங், பாப்கார்ன் என்று சுமார் 500 ரூபாயை மிச்சப்படுத்தியதற்காக அவருக்கு என் நன்றிகள்.

SRIDHAR SUBRAMANIAM