”ஜெய்பீம்’: பழங்குடி மக்களுக்கு ஒரு நற்சான்று!” – ரவிக்குமார் எம்.பி.

‘ஜெய்பீம்’ – கதாநாயகனின் படமல்ல, இயக்குநரின் படம். இந்தப் படத்தை இயக்கியுள்ள நண்பர் ஞானவேலைப் பாராட்டுகிறேன்.

சூர்யா இந்தப் படத்தைத் தயாரித்ததோடு இதில் நடித்துமிருப்பது அவர் ஞானவேலுவின்மீது வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் சமூகத்தின்மீது கொண்டிருக்கும் அக்கறை ஆகியவற்றின் வெளிப்பாடு.

இந்தப் படத்தில் இவர் சிறப்பாக நடித்திருக்கிறார், அவர் சிறப்பாக நடித்திருக்கிறார் என்று சொல்வதற்கு அதிகம் இடம் இல்லை. அப்படி சிறப்பாக நடிப்பதற்கான தருணங்கள் மிக மிகக் குறைவு என்பது ஒரு காரணம், இன்னொரு விஷயம் – இது முழுக்க முழுக்க ஒரு இயக்குநரின் படம். எனவே நடிகர்களை தனக்குத் தேவையான அளவுக்கு மட்டுமே இயக்குநர் நடிக்கவிட்டிருக்கிறார்.

செண்டிமெண்டில் சிக்கி மிகைநடிப்பாக சீரழிந்திருக்கக்கூடிய பல காட்சிகள் இதில் இருக்கின்றன. குறிப்பாக நீதிமன்றக் காட்சிகள் (கௌரவம் படத்தில் சிவாஜியை நினைத்துப் பாருங்கள்) ஆனால் அந்தக் காட்சிகளை யதார்த்தத்துக்கு நெருக்கமாக அமைக்க வேண்டும் என்ற உறுதியோடு இயக்குநர் இருந்ததால் செண்டிமெண்டுக்குப் பலியாக்கிவிடாமல் தடுத்து இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் நீதிமன்றக் காட்சிகள், காவல் நிலைய சித்திரவதைக் காட்சிகள் புதியவையல்ல.ஆனால் அவற்றை இயக்குநர் ஞானவேல் கையாண்டிருக்கும் விதம் புதிது. அது புதிய உத்தியைக் கையாண்டு உருவாக்கப்பட்ட புதுமையல்ல, உண்மைக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என்ற வேட்கையால் ஏற்பட்ட புதுமை.

இருளர் மக்கள் தொடர்பான மானுடவியல் செய்திகள் சில, காட்சிகளாகப் பதிவாகியிருக்கின்றன. அவர்களது பண்பாட்டு அம்சங்களும் பதிவாகியுள்ளன. சமயச் சடங்குகள், திருவிழாக்கள், விடுகதைகளைக்கூட இயக்குநர் நுட்பமாகக் கவனித்து பதிவு செய்திருக்கிறார். ஒரு பாடலின் மெட்டும், நடனமும் அப்படியே பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

இந்தப் படம் குறித்து இன்று தொலைக்காட்சிகளில் நடைபெற்ற விவாதங்கள் பழங்குடி மக்கள் குறித்த செய்திகளை மேலும் பரவலாக மக்களிடம் கொண்டுபோய் சேர்த்திருக்கும். இந்தப் படம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை காவல்துறை அத்துமீறல்களைத் தடுக்கும் விதத்தில் பயன்படுத்தவேண்டும் என விவாதத்தில் பங்கேற்ற சிலர் கூறினர். அப்படிச் செய்வது தேவையானதுதான். ஏனெனில், இந்தியாவில் காவல்துறை அத்துமீறல் அதிக அளவில் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருக்கிறது என்பதை என்சிஆர்பி அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

ஆனால், பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினருக்கென ஒரு கடமை இருக்கிறது. இந்தத் திரைப்படம் அவர்களுக்கு வழங்கியிருக்கும் பண்பாட்டு மூலதனத்தை வளர்த்தெடுப்பதுதான் அது. இந்தப் படம் இருளர் மக்களைக் கடுமையான உழைப்பாளிகளாக, மூலிகைகள்- மருத்துவ அறிவு கொண்டவர்களாக, காசுக்கோ பொருளுக்கோ ஆசைப் படாதவர்களாக, பொய் பேசாதவர்களாக, சுயமரியாதையை விட்டுக் கொடுக்காதவர்களாகக் காட்டியிருக்கிறது. பொதுமக்களின் முன்னால் ஒரு சமூகத்துக்கு இத்தகைய நற்சான்றுகள் வழங்கப்படுவது மிகவும் அரிது. அதிலும் குறிப்பாக அந்த சமூகத்தைச் சாராத ஒருவர் அந்த நற்சான்றுகளை வழங்கும்போது அது சாதிப் பெருமிதமென்னும் சகதிக்குள் சிக்காமல் தப்பித்துக்கொள்கிறது. இதுவொரு வெற்றிப் படம். அதனால் இந்த நற்சான்றுகள் பொதுமக்களின் கூட்டு நினைவில் ஆழப் பதிந்துவிடும். அப்போது இருளர் சமூகத்துக்கு அது மிகப்பெரிய பண்பாட்டு மூலதனமாக மாறும். அதை வளர்த்தெடுப்பது அவர்களது கடமை மட்டுமல்ல சவாலும்கூட.

பழங்குடி மக்களுடைய முதன்மையானப் பிரச்சனை சாதிய ஒதுக்கம் அல்ல. அவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாக இருக்கிறார்கள் என்பதுதான் அவர்களது அடிப்படை பிரச்சனை. 2011 சென்சஸ்படி தமிழ்நாட்டில் பழங்குடியினர் மக்கள் தொகை சுமார் 8 லட்சம் ஆகும். சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், தர்மபுரி ஆகிய 6 மாவட்டங்களில்தான் 50 ஆயிரத்துக்கு மேல் அவர்களது மக்கள் தொகை இருக்கிறது. முதலில் இந்த 6 மாவட்டங்களிலாவது அவர்களுக்கென ஆங்கங்கே குடியிருப்புகளை ஏற்படுத்தி ஒரே இடத்தில் அவர்களை அடர்த்தியாக வாழச் செய்வதன்மூலம் அவர்களது எண்ணிக்கைக்கு ஒரு மதிப்பை ஏற்படுத்த முடியும். அவ்வாறு செய்தால் அவர்களது பிரச்சனைக்குப் பெருமளவில் அது தீர்வாக அமையும்.

அடுத்ததாக கவனம் செலுத்தவேண்டியது கல்வி. பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளைக்கு இந்தப்படத்தின் சார்பாக சூர்யா ஒரு கோடி ரூபாய் நிதி அளித்திருக்கிறார். நான் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் (2019 ஆம் ஆண்டில்) எனது இரண்டாவது மாத ஊதியத்தை அந்த அறக்கட்டளைக்கு அளித்தேன். இப்படி பலர் அதற்கு ஆதரவை நல்கி வருகின்றனர். பேராசிரியர் கல்யாணி திட்டமிட்டிருப்பதுபோல் பழங்குடி இருளர் பிள்ளைகளுக்கென ஒரு விடுதி கட்டுவது இப்போது கடினமல்ல. ஆனால் விடுதியோடு நிறுத்தாமல் அங்கே பழங்குடி மக்களுக்கென ஒரு பண்பாட்டு ஆய்வு மையத்தையும், திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தையும் நிறுவ வேண்டும்.

ஞானவேல் இந்தப் படத்தை இயக்குவதற்கான இன்ஸ்பிரேஷன் இந்தக் கதை அல்ல, இந்தத் திரைக்கதைக்கான வழக்கைப் பற்றி அவருக்குச் சொன்ன திரு கே.சந்துரு அவர்கள்தான். அவர் சேர்த்துவைத்திருக்கும் நன்மதிப்பு ஒரு சமூகத்தைத் தூக்கிவிடுவதற்கான உதவிக்கரமாக நீண்டிருக்கிறது. நன்றி சந்துரு சார்! வாழ்த்துகள் ஞானவேல் !

-ரவிக்குமார்

நாடாளுமன்ற உறுப்பினர்

 

Read previous post:
0a1e
’ஜெய் பீம்’ என்ற முழக்கத்தின் வீர வரலாறு அறிவோம்!

‘ஜெய் பீம்’ என்ற முழக்கத்திற்குப் பின்னே ஒரு வீர வரலாறு உண்டு. புனே நகருக்கு அருகே உள்ள ‘பீமா’ என்ற நதிக் கரையில் போர் நடந்து 200

Close