அண்ணாத்தே – விமர்சனம்

நடிப்பு: ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சதீஷ், ஜார்ஜ் மரியான், அபிமன்யு சிங், சத்யன், ரெடின் கிங்ஸ்லி, ஜகபதிபாபு, லிவிங்ஸ்டன், பாண்டியராஜன் மற்றும் பலர்

இயக்கம்: சிவா,

 தயாரிப்பு: ‘சன் பிக்சர்ஸ்’ கலாநிதி மாறன்

 ஒளிப்பதிவு: வெற்றி பழனிச்சாமி

 இசை: டி.இமான்

தமிழ்சினிமா வரலாற்றில் பல நூற்றாண்டுகளாக நாமும் சளைக்காமல் பார்த்துப் பார்த்து களைத்துப் பழக்கமான அதே அண்ணன் – தங்கை செண்டிமெண்ட் கதை.

பொத்திப் பொத்தி பாசமாக வளர்த்த தங்கை கீர்த்தி சுரேஷ் கல்யாணமாகிப் போன இடத்தில், ஒரு பெரிய பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார். அந்த பிரச்சனையில் இருந்து அவருக்கே தெரியாமல் அண்ணன் ரஜினிகாந்த் அவரை எப்படி காப்பாற்றினார் என்பது தான் படம். (விஸ்வாசம், விவேகம், வீரம், திருப்பாச்சி, வேலாயுதம் சேர்ந்து செய்த கலவை நான்!)

ரஜினியிடம் நமக்குப் பிடித்ததே எழுபது வயதிலேயும் சுறுசுறுப்பையும், உற்சாகத்தையும் திரையில் கொஞ்சம்கூட குறையாமல் காட்டுவது தான். அவரைப் பார்க்கும் போதெல்லாம் அதே உற்சாகம் நமக்குள்ளே தானாக வந்து தொற்றிக்கொள்கிறது. ஸ்டைலான நடிப்பு, தனக்கே உரிய சிணுங்கல்களோடு பண்ணுகிற காமெடி என்று ரஜினி அவருடைய வேலையை ஒழுங்காக செய்திருக்கிறார். ஆனால் அந்த உழைப்பெல்லாம்..?

எண்ணி முடிப்பதற்கே ஒருவாரம் ஆகும் என்கிற மாதிரி படத்தின் முதல் பாதியில் கூட்டம் கூட்டமாக அவ்வளவு நடிகர், நடிகைகள். ஆனாலும் என்ன பயன்? பெரும்பாலான காட்சிகள் ரஜினி – கீர்த்தி சுரேஷ், கீர்த்தி சுரேஷ் – ரஜினி என்று அவர்கள் இரண்டு பேரை மட்டும் ஃபோகஸ் பண்ணுவதால் ’என்னப்பா, இங்க வெட்டியா ஒரு கூட்டம்?’ என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

படம் பார்க்கிற ரசிகர்களுக்கு ஒரு குடும்பத் திருவிழா என்ற மனநிலையை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்ததெல்லாம் ஓ.கே தான். அதுக்காக ஏன் கதையில் கொஞ்சமும் ஒட்டாத குஷ்பு, மீனா, லிவிங்ஸ்டன், பாண்டியராஜன் பகுதிகள் என்று தெரியவில்லை. துளை சும்மா இருக்கிறது என்பதற்காக அதில் கோணி ஊசியைக் குத்தி வைத்த கதையாக இருக்கிறது அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள்!

“அண்ணே.. அண்ணே…” என்று படம் முழுக்க அண்ணன் புராணம் பாடும் கீர்த்தி சுரேஷ் பாசமான நடிப்பில் குறை வைக்கவில்லை என்றாலும், ஒருகட்டத்தில் அதுவே ஓவர் டோஸ் ஆகி சீரியஸான காட்சிகளில் கூட ஏதோ காமெடி காட்சி பார்த்த மாதிரி பார்வையாளர்கள் சிரிப்பதை என்னவென்று சொல்வது..?

சரி செண்டிமெண்ட் தான் மண்டைச் சூட்டைக் கிளப்புகிறது, சிரிக்கிற மாதிரி கொஞ்சம் காமெடியாவது இருக்கும் என்று பார்த்தால் “அதெப்படி? நாங்கள் இருக்கும்போது உங்களையெல்லாம் சிரிக்க விட்டுவிடுவோமா” என்று வரிந்து கட்டிக்கொண்டு முன்னால் வந்து நிற்கிறார்கள் சூரி, சத்யன், சதீஷ் பிரதர்ஸ்!

ஹீரோயினாக நயன்தாரா. ரஜினியோடு அவர் சம்பந்தப்பட்ட முதல்பாதி காட்சிகளை நன்றாகவே ரசிக்கலாம். ஆனால் இடைவேளைக்குப் பிறகு வழக்கமான மாஸ் ஹீரோ கதையில் வருவது மாதிரி டம்மி ஹீரோயின் ஆகிவிடுகிறார். இல்லை இல்லை ஆக்கப்பட்டு விடுகிறார்.

படத்தில் மொத்தம் மூன்று வில்லன்கள்! பிரகாஷ்ராஜ் ஒரு வில்லன், அபிமன்யு சிங் (தீரன் அதிகாரம் ஒன்று) ஒரு வில்லன், ஜெகபதிபாபு ஒரு வில்லன். இதில் பிரகாஷ்ராஜ் ரஜினிக்கு முதல் வில்லன். அபிமன்யு சிங் ஜெகபதிபாபுவுக்கு வில்லன், ஜெகபதிபாபு அபிமன்யு சிங்குக்கு வில்லன். அப்புறம் இவர்கள் இரண்டு பேரும் ரஜினிக்கு வில்லன். கிளைமாக்ஸில் இவர்கள் இரண்டு பேருக்கும் ரஜினி வில்லன். என்ன குழப்பமாக இருக்கிறதா? சரி விட்ருவோம்…

டி.இமானின் இசையில்  ‘சார சார காற்றே…’ பாடலும், அதை படமாக்கிய விதமும், ’வா சாமி’ பில்டப் பாடலும், தீப்பொறி பறக்க வரும் சண்டைக்காட்சிகளும் எக்ஸ்ட்ரா ஆறுதல்.

கமர்ஷியல் படங்களில் பெரிதாக லாஜிக் பார்க்கக் கூடாது தான். ஆனால் டிவி, நியூஸ்பேப்பர், சோஷியல்மீடியா ட்ரெண்டு என்று கொல்கத்தா முழுவதும் அண்ணாத்தவைப் பற்றித் தான் பரபரப்பாக பேசுகிறார்கள். ஆனால் அதே கொல்கத்தாவில் இருக்கிற அவருடைய தங்கைக்கு மட்டும் ’நம் அண்ணன் இங்கே தான் இருக்கிறார்’ என்று கிளைமாக்ஸுக்கு முந்தின காட்சி வரை தெரியவில்லையாம்! கலர் கலராக ரீல் விடலாம் தான். அதுக்காக இப்படி ஒரேயடியாகவா? அதுவும் கிலோ கணக்கில்..?

”கல்கத்தாவுக்கே காப்பு கட்டிட்டேன்” என்று ரஜினி டயலாக் பேசும்போது ஹவுரா பாலத்து தூணில் ஒரு கயிறை கட்டுகிற மாதிரி காட்டுவது… மஞ்சள்தண்ணீர் திருவிழா என்று டயலாக் பேசும்போது பாலத்துக்குக் கீழே போகிற வில்லன் காரில் மேலே இருந்து இரண்டு பெரிய அண்டாக்களில் இருந்து மஞ்சள் தண்ணீரை  ஊற்றிவிடுவது… என்று சிவா மாதிரியான டைரக்டர்கள் எல்லாம் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் தமிழ்சினிமா ரசிகர்களை அடி முட்டாள்கள் என்று நினைத்துக்கொண்டு “கமர்ஷியல்” என்கிற பழைய டிவிஎஸ் 50-ஐயே கோடம்பாக்கத்தில் குறுக்கும், நெடுக்குமாக ஓட்டிக்கொண்டிருப்பார்கள் என்று தெரியவில்லை.

மொத்தத்தில் ஒரு மாஸ் ஹீரோ கொடுத்த சான்ஸை மொத்தமாக மிஸ் இல்ல இல்ல மிஸ்யூஸ் பண்ணியிருக்கிறார் சிவா.

தியேட்டரில் கிளைமாக்ஸ் சீனை பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு ரஜினி ரசிகர் டென்ஷனில் இப்படி கத்திவிட்டார்:

”யோவ் சிவா… நீ எங்கய்யா இருக்க..?”