“ராம்குமாரின் கழுத்தை அறுத்தது இன்ஸ்பெக்டர் பாலமுருகன்!”

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த (ஜூன்) மாதம் 24ஆம் தேதி இளம்பெண் சுவாதி அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த பரமசிவம் மகன் ராம்குமாரை, அவரது கழுத்து அறுபட்ட நிலையில் போலீசார் கைது செய்தனர்.

“சுற்றி வளைக்கப்பட்ட ராம்குமார் தற்கொலை செய்துகொள்வதற்காக தன் கழுத்தை தானே அறுத்துக்கொண்டார்” என்று போலீசாரும், “அது உண்மை அல்ல; போலீசார் தான் ராம்குமார் கழுத்தை அறுத்தார்கள்” என்று ராம்குமார் குடும்பத்தினரும் கூறிவந்தனர்.

இந்நிலையில், தமிழ்நாடு முற்போக்கு வக்கீல்கள் சங்க தலைவர் ராம்ராஜ், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் ரவிக்குமார், செங்கோட்டை வக்கீல் மாரிக்குட்டி ஆகியோருடன் ராம்குமாரின் தந்தை பரமசிவம் செங்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு அவர் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவை போலீசார் வாங்க மறுத்துவிட்டனர்.

அலுவலகப் பணி தொடர்பாக வெளியே சென்றிருந்த இன்ஸ்பெக்டர் பிரதாபனுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த இன்ஸ்பெக்டர் பிரதாபன், பரமசிவம் மற்றும் வக்கீல்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் ½ மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. அதன்பிறகு பரமசிவம் கொடுத்த புகார் மனுவை இன்ஸ்பெக்டர் பிரதாபன் வாங்கினார்.

மனுவை பெற்று கொண்டதற்கான ரசீது, ராம்குமாரின் தந்தை பரமசிவத்திடம் வழங்கப்பட்டது. அவரிடம் “இந்த மனு மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று இன்ஸ்பெக்டர் பிரதாபன் உறுதி அளித்தார். இதே இன்ஸ்பெக்டர் பிரதாபன் தான், ராம்குமார் தன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக ராம்குமார் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராம்குமாரின் தந்தை பரமசிவம் இன்ஸ்பெக்டர் பிரதாபனிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் லைன்மேனாக வேலை பார்த்து வருகிறேன். எனது மகன் ராம்குமார் பி.இ. படித்துள்ளார். சில பாடங்களில் அரியர்ஸ் இருந்தது. அவற்றை மீண்டும் எழுதி தேர்ச்சி பெறுவதற்காக அவர் சென்னையில் தங்கி வேலை பார்த்துக்கொண்டே படித்து வந்தார்.

கடந்த 25.6.2016 அன்று என்னிடம் பணம் வாங்குவதற்காக அவர் ஊருக்கு வந்தார். இந்நிலையில் கடந்த 1.7.16 அன்று இரவு சுமார் 11 மணி அளவில் எனது வீட்டின் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. கதவை திறந்து நான் வெளியே வந்தபோது, டிசர்ட் அணிந்த 2 பேர் நின்றுகொண்டிருந்தனர். தங்களை போலீஸ் என்று கூறிய அவர்கள், ‘இது முத்துக்குமார் வீடா?’ என்று என்னிடம் கேட்டனர். ‘எங்கள் வீட்டில் முத்துக்குமார் என்ற பெயரில் யாரும் இல்லை’ என்று தெரிவித்தேன்.

அப்போது வீட்டின் பின்பகுதியில் இருந்து வந்த 2 போலீசார் என்னிடம் ‘உனது மகன் கழுத்தை அறுத்து கொண்டான்’ என்று கூறினர். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. நானும், எனது மனைவி, மகள்களும் பின்பக்கம் சென்று பார்த்தோம். அங்கு கழுத்து அறுபட்ட நிலையில் எனது மகன் குத்துகாலிட்டு உட்கார்ந்தபடி மயங்கிய நிலையில் இருந்தான்.

அவனது கழுத்து ரத்தம் தோய்ந்த நிலையில் இருந்தது. எனது மகனை ஒரு போலீஸ்காரர் பிடித்திருந்தார். அருகில் பிளேடு கிடந்தது. அந்த காவலரின் கையில் ரத்தம் இருந்தது. நாங்கள் சத்தம் போட்டு அழ ஆரம்பித்ததும், அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்கள் அங்கு திரண்டனர்.

உடனே தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அங்கிருந்த போலீசாரிடம் “அவனை உடனே ஜீப்பில் ஏற்றுங்கள்” என்று கத்தினார். இதையடுத்து போலீசார் ராம்குமாரை ஜீப்பில் ஏற்றிச் சென்றனர்.

எனவே இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் தான் எனது மகன் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். கழுத்தை அறுத்து எனது மகனை கைது செய்து சென்றது முதல் எனது உடல்நிலை மிகவும் பாதிப்புள்ளாகி விட்டது. எனவே என்னால் உடனே புகார் கொடுக்க முடியவில்லை.

எனது வீட்டில் நுழைந்து எனது மகன் ராம்குமாரின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மீதும், அவருடன் வந்த மற்ற போலீசார் மீதும் வழக்குப் பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு பரமசிவம் தனது மனுவில் கூறியுள்ளார்.

போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்துவிட்டு வெளியே வந்த ராம்குமாரின் தந்தை பரமசிவம் மற்றும் வக்கீல்கள் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

ராம்குமார் கைதானபோது போலீஸ் அதிகாரிகள் சாதாரண உடையில் இருந்துள்ளனர். அதாவது, ஒரு குற்றவாளியை கைது செய்ய, போலீஸ் அதிகாரிகள் அவர்களது பெயர்கள் பொறிக்கப்பட்ட சீருடையுடன் தான் செல்ல வேண்டும் என்று நீதிபதி ஆனந்த் ஒரு தீர்ப்பில் கூறியுள்ளார்.

மேலும், ஒரு வழக்கில் ஒருவரை கைது செய்யும்போது அந்த நபரை எந்தவித துன்புறுத்தலுக்கும் ஆளாக்க கூடாது என்றும் அவர் அந்த தீர்ப்பில் கூறியுள்ளார். ஆனால் ராம்குமார் கைது விவகாரத்தில் போலீசார் நீதிபதியின் தீர்ப்பைக் கண்டு கொள்ளவில்லை. அடிப்படை சட்ட விதிமுறைகளை போலீசார் மீறியுள்ளனர்.

ஒரு கிராமத்திற்குள் அத்துமீறி நுழைந்த போலீசார், அங்கு இரவு நேரத்தில் விளக்குகளை அணைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி உள்ளனர். ராம்குமார் தன் கழுத்தை அறுத்துக் கொள்ளவில்லை. போலீசாரே அவரது கழுத்தை அறுத்துவிட்டு அதன் பிறகுதான் அவரை கைது செய்துள்ளனர்.

எனவே ராம்குமாரை கைது செய்யும்போது அடிப்படை மனித உரிமைகளை மீறிய போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளோம். அவர் மீது நடவடிக்கை எடுக்க தாமதிக்கும் பட்சத்தில் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ராம்குமாரின் கழுத்தை தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் அறுத்ததாக ராம்குமாரின் தந்தை பரமசிவம் கொடுத்துள்ள புகாரால் சுவாதி கொலை வழக்கில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.