“நடிகை ஸ்ரீதேவியின் சொந்த வாழ்க்கை துயர் நிறைந்தது!” – இயக்குனர் ராம் கோபால் வர்மா

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பிறந்து, தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிப்படங்களில் ஒளிர்ந்து, இந்தி படவுலகில் ‘நம்பர் 1’ கதாநாயகியாக பிரகாசித்த திரை நட்சத்திரம் ஸ்ரீதேவி.

துபாயில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த ஸ்ரீதேவி, கடந்த 24ஆம் தேதி இரவு, மது போதையில் சுய நினைவை இழந்து, குளியல் தொட்டியில் தவறி விழுந்து, நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

விசாரணைகள் முடிந்து, ஸ்ரீதேவியின் உடல் நேற்று முன்தினம் (27ஆம் தேதி) இரவு, பிரபல தொழிலதிபர் அனில் அம்பானியின் தனி விமானம் மூலம் மும்பை கொண்டு வரப்பட்டு, நேற்று (28ஆம் தேதி) மராட்டிய அரசின் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா, ‘ஸ்ரீதேவியின் சொந்த வாழ்க்கைத் துயரங்கள்’ குறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருப்பதாவது:

நடிகைகள் பலர் மகிழ்ச்சியாக இருப்பது போல் வெளியில் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் சொந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. அதுபோலத் தான் நடிகை ஸ்ரீதேவியும். அவர் தனது சொந்த வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாமல் தான் காணப்பட்டார்.

இந்தியாவில் உள்ள அனைவராலும் விரும்பப்பட்ட நடிகையாக ஸ்ரீதேவி இருந்தார். ‘இந்தியாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார்’ என்றும் அவர் பாராட்டப்பட்டார். ஆனால், அவர் சொந்த வாழ்வில் மகிழ்ச்சியாக இருந்தாரா? என்று கேள்வி எழுப்பினால், இல்லை என்றுதான் பதில் வரும்.

“ஸ்ரீதேவி தனது வாழ்வில் மிகவும் சரியாக இருந்தார். நிறைவாக வாழ்ந்தார்” என்று பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர் நிஜமாகவே சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்தாரா…?

நான் அவரை முதன்முதலாக ‘ஷணா ஷணம்’ என்ற படத்தில் நடிக்க வைக்க அணுகினேன். அப்போது முதலே ஸ்ரீதேவியை நான் நன்கு அறிவேன். அவர் தனது தந்தை இறக்கும் வரை சுதந்திரமாக இருந்தார். ஆனால் அதன் பின்னர் தாயாரின் பிடிக்குள் வந்ததும் கூண்டுக் கிளியாக மாறிவிட்டார். அவரின் பாதுகாப்பில்தான் அவர் முழுவதும் இருந்தார். யாரும் ஸ்ரீதேவியை நெருங்கி விட முடியாது.

அந்த காலத்தில் நடிகர், நடிகைகளுக்கு கருப்புப் பணத்தில் சம்பளத்தைக் கொடுப்பார்கள். அப்படித்தான் ஸ்ரீதேவியும் தனது சம்பளத்தைப் பெற்று வந்தார். வருமான வரித்துறை சோதனை போன்ற பயங்களால், அவரது தந்தை அந்த தொகையை எல்லாம் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கொடுத்து வைத்திருந்தார். ஆனால், அப்படி வாங்கிக்கொண்டவர்கள் எல்லாம் ஏமாற்றியதால், ஸ்ரீதேவியின் தந்தை இறந்தார்.

அதைப் போலவே ஸ்ரீதேவியின் தாயாரும், சில நிறுவனங்களில் தவறான முதலீடுகளைச் செய்து சொத்துகளை இழந்தார். இதனால் ஒரு பைசாகூட இல்லாத நிலையில் தான் போனி கபூர், ஸ்ரீதேவியின் வாழ்க்கையில் வந்தார். அப்போது போனி கபூருக்கும் பெரிய அளவில் கடன் இருந்தது.

தாயார் இறந்தபோது ஸ்ரீதேவி மிகவும் துயரத்தில் இருந்தார். இது போதாதென்று, அவரின் தங்கை ஸ்ரீலதா, உறவினர் மகனுடன் ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டார்.

ஸ்ரீதேவியின் தாயார் இறப்பதற்கு முன்பாக அனைத்து சொத்துகளையும் மகள் ஸ்ரீதேவி பெயருக்கு மாற்றி எழுதினார். இதைத் தொடர்ந்து ஸ்ரீலதா, ஸ்ரீதேவி மீது வழக்கு தொடுத்தார். தனக்கும் சொத்தில் சரி பாதியைத் தர வேண்டும் என்று வழக்கு நடைபெற்றது. இதுபோல ஸ்ரீதேவிக்கு ஏராளமான பிரச்னைகள் இருந்தன.

நீங்கள் ஸ்ரீதேவி நடித்த ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படத்தைப் பார்க்கும்போது, அவர் ஒரு சில ஷாட்டுகளில் மட்டுமே மகிழ்ச்சியாகத் தெரிவார். மற்ற நேரங்களில் அவரது சோகம் படம் முழுவதும் தென்படும்.

ஸ்ரீதேவி மிகவும் கூச்ச சுபாவம் உள்ளளவர். அவருக்கு அவர் மீதே நம்பிக்கை இருந்ததில்லை. யாராவது ஒருவரை துணைக்கு அழைத்துக்கொண்டு தான் வருவார். பயத்துடனேயே காணப்படுவார். முதலில் தாயாரின் பாதுகாப்பில் வந்தவர், பின்னர் கணவர் போனி கபூரின் பாதுகாப்பில் இருந்தார்..

அவருடைய மரணம் எப்படி நிகழ்ந்திருக்கும் என்றால், முதலில் அவருக்கு இருதய ஸ்டிரோக் வந்திருக்கும், அதன்பின் தவறி தண்ணீர் தொட்டியில் விழுந்திருக்கலாம் என்பது எனது கணிப்பு.

பெரும்பாலும் தற்கொலைகள், தவறி விழுந்து மரணம் போன்ற விவகாரங்கள் மிகப் பெரிய விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்குப் பின்னரே நடக்கின்றன.

பெரும்பாலும் பிரபலங்கள் மரணமடையும்போது நான் ‘ரெஸ்ட் இன் பீஸ்’ (ஆன்மா சாந்தி அடையட்டும்) என்று சொல்வதில்லை. ஆனால் ஸ்ரீதேவி விஷயத்தில், ‘அவரது ஆன்மா இப்போதாவது சாந்தியடையட்டும்’ என்று சொல்ல விரும்புகிறேன். ஏனெனில், அவர் இப்போதாவது முதன்முறையாக அமைதியாக உறங்கட்டும்.

இவ்வாறு இயக்குனர் ராம் கோபால் வர்மா பதிவிட்டுள்ளார்.