நதிகள் இணைப்பு குறித்த பாஜக தேர்தல் வாக்குறுதி: ரஜினி வரவேற்பு

நடிகர் ரஜினிகாந்த் தன் வீட்டினருகே பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது நதிகள் இணைப்பு குறித்த பாஜகவின் தேர்தல் வாக்குறுதி தொடர்பான கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:

பாஜக நேற்று தான் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். நீண்ட நாட்களாகவே நாட்டின் நதிகளை இணைக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். மறைந்த பிரதமர் வாஜ்பாய் அவர்களுடைய கனவாகவும் அது இருந்தது. அவர் பிரதமராக இருக்கும்போது, அவரை சந்தித்து இதை பண்ண வேண்டும் என சொல்லியிருந்தேன்.

இது பெரிய ப்ராஜக்ட். இதற்கு ’பாகீரத்யோஜனா’ என்று பெயர் வையுங்கள் என சொன்னேன். அவருக்கும் மிகவும் பிடித்திருந்தது. சாத்தியம் ஆகாததை சாத்தியம் ஆக்குவதற்கு பெயரே ’பாகீரத்யோஜனா’ என்று சொல்லுவார்கள். பாஜகவின் தேர்தல் அறிக்கையில், நாட்டிலுள்ள நதிகளை இணைக்க வேண்டும். அதற்கு ஒரு ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்று சொல்லியிருக்காங்க. அது ரொம்ப வரவேற்கத்தக்கது.

என்ன முடிவு வரப் போகிறது என்று தெரியாது. ஒருவேளை மத்தியில் ஆட்சி அமைத்தால், முதலில் இந்த நாட்டின் நதிகளை இணைக்க வேண்டும். அதை மட்டும் செய்தால், நாட்டிலுள்ள பாதி வறுமை போய்விடும். பல கோடி மக்களுக்கு வேலை கிடைக்கும். விவசாயிகளின் வாழ்நிலை உயரும். அதை அவர்கள் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

தயவு செய்து யாரும் தவறாக நினைக்க வேண்டாம். இது தேர்தல் நேரம், இதற்கு மேல் நான் வேறு எதுவும் பேச விரும்பவில்லை.

இவ்வாறு ரஜினி கூறினார்.