கொரோனா நிவாரண நிதி ரூ.50லட்சம்: முதல்வர் ஸ்டாலினிடம் நேரில் வழங்கினார் ரஜினிகாந்த்

0a1bதமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், கரோனா நிவாரண நிதியாக ரூ.50லட்சம் வழங்கினார். “அரசாங்கம் கொண்டுவந்துள்ள கட்டுப்பாடுகளைப் பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் கரோனா எனும் உயிர்க்கொல்லி நோயைக் கட்டுப்படுத்த முடியும்” என்று அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை மிக வேகமாகப் பரவி பெரும் பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் இருப்பு ஆகியவற்றுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இவ்விதம் தமிழக அரசு சந்தித்துவரும் கடும் மருத்துவ நெருக்கடியையும், நிதி நெருக்கடியையும் சமாளிக்க பொதுமக்கள் தாமாக முன்வந்து தம்மால் இயன்ற அளவு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதியளிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

முதல்வரின் இந்த வேண்டுகோளை ஏற்று தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், ஆசிரியர்கள், மாணவ – மாணவிகள், திரையுலக பிரபலங்கள், கடைநிலை ஊழியர்கள் என சகல தரப்பினரும் கொரோனா நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று (17-05-2021) தமிழக அரசின் தலைமைச் செயலகத்துக்கு நேரில் வந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். கரோனா நிவாரண நிதிக்கு தனது பங்களிப்பாக ரூ.50 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். பின்னர் முதல்வரும் ரஜினியும் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பு முடிந்தபின் வெளியில் வந்த ரஜினி செய்தியாளர்களிடம் பேசுகையில், “அரசாங்கம் கொண்டுவந்துள்ள கட்டுப்பாடுகளைப் பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் கரோனா எனும் உயிர்க்கொல்லி நோயைக் கட்டுப்படுத்த முடியும். இது பொதுமக்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள்”’ எனத் தெரிவித்தார்.