சென்னை வெள்ளம்: நடிகர்கள் விஷ்ணு விஷால், ஆமிர் கான் மீட்பு!

தன் வீட்டை மழைநீர் சூழ்ந்திருப்பதாக கூறி நடிகர் விஷ்ணு விஷால் உதவி கோரியிருந்த நிலையில், தீயணைப்புத் துறையால் மீட்கப்பட்டுள்ள அவர், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில், “எனது வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. காரப்பாக்கத்தில் மோசமான அளவில் தண்ணீர் மட்டம் உயர்ந்து வருகிறது. நான் உதவியை நாடியுள்ளேன். மின்சாரமோ, வைஃபையோ, ஃபோன் சிக்னலோ எதுவுமே இல்லை. மொட்டை மாடியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் எனக்கு சிக்னல் கிடைக்கிறது. எனக்கும், இங்கு வசிக்கும் பலருக்கும் உதவி கிடைக்கும் என நம்புகிறோம். சென்னை முழுவதும் உள்ள மக்களின் நிலையை என்னால் உணர முடிகிறது” என பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து, தீயணைப்புத் துறையால் மீட்கப்பட்டுள்ள அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “சிக்கித் தவித்த எங்களை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்கு நன்றி. காரப்பாக்கத்தில் மீட்பு பணிகள் தொடங்கியுள்ளன. ஏற்கனவே 3 படகுகள் செயல்பாட்டில் உள்ளதைக் கண்டேன். இது போன்ற சோதனையான காலங்களில் தமிழக அரசின் பணி சிறப்பாக உள்ளது. அயராது உழைக்கும் அரசு நிர்வாகத்துக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவருடன் பாலிவுட் நடிகர் ஆமிர்கானும் இருப்பது குறிப்பிடத்தக்கது.