விஜய் மல்லையா உட்பட 63 “ஏழை” தொழிலதிபர்களின் ரூ.7018 கோடி கடனை ரைட்-ஆப் செய்தது எஸ்.பி.ஐ

வங்கிகளிடம் வாங்கிய கடனை திரும்ப கொடுக்காமல், நாட்டை விட்டு தப்பியோடிய ‘தொழிலதிபர்’ விஜய் மல்லையா பெற்றுள்ள ரூ.1,201 கோடி கடன் தொகை உட்பட ‘வேண்டுமென்றே’ கடனை திரும்ப செலுத்தாத 63 கோடீஸ்வர கடன்காரர்களின் ரூ.7018 கோடி கடன் தொகையை கிடப்பு கணக்கில் போட முடிவு செய்துள்ளது ஸ்டேட் பேங்க்.

இது குறித்து எழுத்தாளர் ஆழி செந்தில் நாதன் பதிவு:-

அன்பார்ந்த ஸ்டேட் பாங்க் வாடிக்கையாளர்கள் சமூகத்துக்கு,

நாடங்கும் கியூவில் நின்று கருப்பை வெள்ளையாக்கிக் கொண்டிருக்கும் ஊழல் பெருச்சாளிகளாகிய உங்களின் பணம் எங்களுக்கு வந்துகொண்டிருக்கும் இந்த நல்ல வேளையில் ஒரு நற்சேதியை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறோம்.

கர்நாடகத்தைச் சேர்ந்த ஏழை விமான நிறுவன அதிபரான விஜய் மல்லையா உள்பட 63 பரம ஏழைகளால் ஏற்பட்ட வாராக்கடன்கள் (ரூ 7018 கோடி மொத்தமாக) இன்று ரைட் ஆஃப் செய்யப்பட்டுவிட்டது என்று அறிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இதில் ஏழை விவசாயி விஜய் மல்லையாவின் கிங் பிஷர்ஸ் ஏர்லைன்ஸ் வாங்கி கட்டாமல்போன கடன் மட்டும் ரூ. 1201 கோடி ஆகும். இதனுடன் கடனை கட்டமுடியாமல் போன மற்ற ஏழை பாழைகளால் ந்டத்தப்படும் நிறுவனங்களும் அவர்களது கடன்பாக்கியும் பின்வருமாறு:

KS Oil (Rs 596 crore),
Surya Pharmaceuticals (Rs 526 crore),
GET Power (Rs 400 crore)
SAI Info System (Rs 376 crore).

இந்த பட்டியல் நீங்கள் நிற்கும் கியூவை விட மிகவும் நீளம் என்பதால் இத்தோடு நிப்பாட்டிக்கொள்கிறோம்.

எல்லாவிதமான ஆராய்ச்சிகளையும் செய்து இவர்கள் நல்லவர்கள்தான், இவர்களால் கடனைத் திருப்பி அளிக்கமுடியும் என்று நம்பி நாங்கள் அளித்த கோடிக்கணக்கான பணத்தை இவர்கள் திருப்பி அளிக்காமல் போனதால் உங்கள் நம்பிக்கைக்குரிய பாரத ஸ்டேட் வங்கி திக்குமுக்காடிப் போயிருக்கிறது. அவர்கள் வாங்கிய பணம் மிகவும் பத்திரமாக வேறு வேறு நாடுகளில் இருக்கலாம் என்று தெரியவந்ததால், அந்த நாடுகளுக்கே அந்த ஏழைகள் தப்பிப்போக விட்டுவிடலாம் என்றும் உங்கள் நலன் நாடும் நமது பிரதமர் மோடி அரசு முடிவெடுத்திருக்கிறது என்பதும் நீங்கள் அறிந்ததே.

இ்ந்நிலையில் மேலும் பல ஏழைகளுக்கு பில்லியன் கணக்கில் நாங்கள் கடன் தரவேண்டியிருக்கிறது. அவை யாவும் நாளை தேசப்பிதா மகாத்மா காந்தி கணக்கில் சேரும் என்பதையும் அறிவோம். ஏற்கனவே கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி வாராக்கடன் பாக்கி வைத்திருக்கும் குஜராத்தைச் சேர்ந்த கல்லுடைக்கும் தொழிலாளி அதானி என்பவருக்கு ஆஸ்திரேலியாவில் கல்லுடைக்க அண்மையில்தான் ஒரு பில்லியன் டாலரை நாங்கள் கடனாகக் கொடுத்தோம் என்பதை நீங்கள் மறந்துவிடலாகாது.

வேறு வழியில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் ஒளித்து வைத்துக்கொண்டிருக்கும் கருப்புப் பணத்தைக் கொண்டுவந்து எங்களிடம் தாருங்கள். அதன் நினைவாக உங்கள் வலது கை விரலில் கருப்பு மையிட்டு நாங்கள் உங்களை பாராட்டி மகிழ விரும்புகிறோம்.

இவண்

இருபத்திநான்கு மணிநேரமும் கார்ப்பரேட் பணமுதலைகளின் நலன்களுக்காக மட்டுமே உழைக்கும் உங்கள் நரேந்திர மோடியின் ஆசிபெற்ற

தலைமை நிர்வாகி
பாரத ஸ்டேட் வங்கி.

பாரத் மாதா கீ ஜே.

– ஆழி செந்தில் நாதன்