“18 எம்எல்ஏ.க்கள் பதவி பறிப்பு மிக மோசமான ஜனநாயக படுகொலை!” – ஸ்டாலின்

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், “முதல்வர் எடப்பாடி அரசின் மீது நம்பிக்கையில்லை’ என்று ஆளுநரிடம் கடிதம் கொடுத்த 18 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை கட்சித் தாவல் சட்டத்தின்படி தகுதிநீக்கம் செய்திருப்பது மிக மோசமான ஜனநாயக படுகொலை ஆகும்.

அரசியல் சட்டப்படி ஒரு சட்டமன்ற உறுப்பினர் கட்சியிலிருந்து தானாகவே வெளியேறினாலோ, சட்டமன்ற கொறடாவின் உத்தரவை எதிர்த்து வாக்களித்தாலோ மட்டுமே தகுதி நீக்கம் செய்யப்படுவர் என்றுள்ள நிலையில், சட்டமன்றத்தை கூட்ட அதிகாரம் படைத்த ஆளுநரிடம் மனு கொடுத்ததை அடிப்படையாக வைத்து தகுதி நீக்கம் செய்திருப்பது முதல்வரும், சபாநாயகரும் கூட்டாக செயல்பட்டு இந்த சட்டமன்ற ஜனநாயக படுகொலையை கூச்சமின்றி அரங்கேற்றியிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

19 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகஸ்ட் 22-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என்று தனித் தனியாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தார்கள். அந்த கடிதத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ‘உடனடியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க’ உத்தரவிட வேண்டும் என்று 26-ஆம் தேதி அன்றே பொறுப்பு ஆளுநரிடம் திமுக சார்பில் கடிதம் கொடுத்து கோரிக்கை விடுக்கப்பட்டது. காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளும் இந்த கோரிக்கையை முன் வைத்தன.

பிறகு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் சென்று திமுக சார்பில் மேதகு குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து ‘நம்பிக்கை வாக்கெடுப்பு’ கோரி கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று பொறுப்பு ஆளுநர் உத்தரவிடவும் இல்லை. சட்டமன்றத்தை உடனடியாக கூட்டிட அறிவுறுத்தவும் இல்லை. தமிழகத்தில் உள்ள பொறுப்பு ஆளுநரின் வரலாறு காணாத காலதாமதம், அந்த காலதாமதத்திற்கு மத்திய பாஜக அரசு கொடுத்த தீவிர அழுத்தம் போன்றவற்றின் விளைவாக, ‘தகுதி நீக்கம் செய்தாவது ஆட்சி கவிழ்வதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்’ என்று நினைத்து எடப்பாடி பழனிசாமி இப்போது சபாநாயகர் மூலம் கட்சித் தாவல் தடைச் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்.

‘ஒரு முதல்வர் மீது நம்பிக்கையில்லை’ என்று ஆளுநரிடம் தெரிவிப்பது கட்சித் தாவல் ஆகாது என்று உச்ச நீதிமன்றமே கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா வழக்கில் தீர்ப்பளித்திருக்கின்ற நிலையில், கட்சித் தாவல் தடைச் சட்டத்திற்கு விரோதமாகவும், உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராகவும் இந்த தகுதி நீக்கத்தை செய்திருக்கின்ற சபாநாயகர் தனபால் அந்த பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்து விட்டார்.

ஏற்கெனவே அருணாசலபிரதேச வழக்கில் ‘சபாநாயகரின் நடவடிக்கைகள் பாரபட்சம் அற்றதாக மட்டுமல்லாமல், அவருடைய நடவடிக்கைகளில் அது வெளிப்படையாக தெரிய வேண்டும்’ என்று தெளிவுபடுத்தியிருக்கிறது. ஆனால் அந்த பொறுப்புகளை எல்லாம் தட்டிக் கழித்துவிட்டு அதிமுகவின் உறுப்பினர் போல் சபாநாயகர் செயல்பட்டு இப்படியொரு தகுதி நீக்க உத்தரவை வெளியிட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

எடப்பாடி பழனிசாமி அரசை காப்பாற்ற தவறான வழியில் முனைந்து சபாநாயகர் பதவிக்குரிய மாண்பைக் கெடுத்து விட்டார். அது மட்டுமின்றி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவே வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டி இதே சபாநாயகரிடம் 4 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த மார்ச் மாதத்திலேயே புகார் அளித்தும், அதைப் பற்றி இன்று வரை சிறிதும் கவலைப்படாத சபாநாயகர், இப்போது ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததற்கு அவசர அவசரமாக தகுதி நீக்க உத்தரவை பிறப்பித்திருப்பது சட்டமன்றத்தை சந்தித்து வெற்றி பெற முடியாத இந்த அரசின் கோழைத்தனத்தைக் காட்டுகிறது.

அரசியல் சட்ட மாண்புகளை குழி தோண்டி புதைத்து, சட்டமன்ற ஜனநாயக நெறிமுறைகளை சீர்குலைத்துள்ள சட்டமன்ற சபாநாயகர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ‘குதிரைபேரம்’ மற்றும் ‘சட்டவிரோத தகுதி நீக்கம்’ மூலம் குறுக்கு வழியில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த முயற்சிக்கும் எடப்பாடி பழனிசாமி இனிமேலும் முதல்வர் பதவியில் அமர்ந்து தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தாமல் தானாகவே பதவி விலக வேண்டும்.

தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெறும் அதிமுக அமைச்சர்களின் ஊழல்களையும், நிர்வாக அலங்கோலங்களையும், அரசியல் சட்ட மீறல்களையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மத்தியில் உள்ள பாஜக அரசும், தனது அரசியல் சட்ட கடமையை செய்யத் தவறிய தமிழக பொறுப்பு ஆளுநரும் இப்போது மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இந்த அசாதரணமான அரசியல் நெருக்கடிக்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

பெரும்பான்மையை இழந்த ஒரு அரசை 28 நாட்களாக ஆட்சியில் அமர வைத்து, அரசு கஜானாவை கையாள விட்டிருக்கும் மத்திய பாஜக அரசு மக்கள் மன்றத்திற்கு பதில் சொல்லியே தீர வேண்டும். எத்தனை தில்லுமுல்லுகள் செய்தாலும், குறுக்கு வழியில் தப்பிக்க நினைத்தாலும் எடப்பாடி பழனிசாமி அரசு மக்கள் மன்றத்தில் தோற்கடிக்கப் படுவது உறுதி” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.