பதவி பறிப்பை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களான ஜெயந்தி பத்மநாபன் (குடியாத்தம்) , கோதண்டபாணி (திருப்போரூர்), முருகன் (அரூர்), உமா மகேஷ்வரி (விளாத்தி குளம்), பாலசுப்பிரமணி (ஆம்பூர்),வெற்றிவேல் (பெரம்பூர்), சுந்தர்ராஜ் (ஓட்டப்பிடாரம்), தங்கதுரை (நிலக்கோட்டை), கதிர்காமு (பெரியகுளம்), ஏழுமலை (பூந்தமல்லி), பார்த்திபன் (சோளிங்கர்), தங்க தமிழ்ச்செல்வன் (ஆண்டிப்பட்டி), பழனியப்பன் (பாப்பிரெட்டிபட்டி) செந்தில் பாலாஜி (அரவாக்குறிச்சி), ரெங்கசாமி (தஞ்சாவூர்), கென்னடி மாரியப்பன்(மானா மதுரை), டாக்டர் முத்தையா (பரமக்குடி)ஆகிய 18 பேரின் பதவியை பறித்து சபாநாயகர் தனபால் இன்று உத்தரவிட்டார்.
பதவி பறிப்பை தடுத்து நிறுத்தக் கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீட்டனர்.  இது குறித்த  கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம்  அறிவுரை வழங்கியது. இதை தொடர்ந்து சபாநாயகரின் இந்த உத்தரவை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
முன்னரே தி.மு.க தொடர்ந்த வழக்கில் இந்த மனுவும் இணைப்பு மனுவாக இணைக்கப்பட்டுள்ளது. இம்மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் 20-ம் தேதி நடைபெறுகிறது.