கேரளாவில் கம்யூனிஸ்ட் வேட்பாளரை எதிர்த்து ராகுல் காந்தி போட்டி: அதிகாரபூர்வ அறிவிப்பு

கடந்த 2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இருந்து உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில்தான் ராகுல் காந்தி போட்டியிட்டு வென்று வருகிறார். கடந்த (2014) தேர்தலில் அங்கு ராகுல் காந்தியை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சியின் ஸ்மிருதி இரானி போட்டியிட்டு தோல்வி அடைந்த நிலையில், இந்த முறையும் ஸ்மிருதி இரானி ராகுல் காந்தியை எதிர்த்து களமிறங்குகிறார்.

இந்நிலையில், 2-வது தொகுதியில் போட்டியிட விரும்பும் ராகுல் தென்னிந்தியாவில் கர்நாடக மாநிலத்திலோ, கேரளாவிலோ, தமிழ்நாட்டிலோ போட்டியிடலாம் என்று தகவல் வெளியானது.

இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோனி, செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், ” ராகுல் காந்தி அமேதி தொகுதியிலும், கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியிலும் போட்டியிடுகிறார். இதன்மூலம் வட இந்தியாவுக்கும், தென் இந்தியாவுக்கும் ராகுல் காந்தி இணைப்புப் பாலமாகச் செயல்படுவார்” எனத் தெரிவித்தனர்.

கேரளாவில் வரும் (ஏப்ரல்) 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சிக்கு வயநாடு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு சுனீரை தனது வேட்பாளராக ஏற்கெனவே அறிவித்திருக்கிறது கம்யூனிஸ்ட் கட்சி. இவரை எதிர்த்து தான் இப்போது ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.