ராங்கி – விமர்சனம்

நடிப்பு: த்ரிஷா, அனஸ்வரா ராஜன், ஜான் மகேந்திரன், லிஸி ஆண்டனி, கோபி கண்ணதாசன் மற்றும் பலர்

இயக்கம்: எம்.சரவணன்

தயாரிப்பு: ‘லைகா புரொடக்சன்ஸ்’ சுபாஸ்கரன்

கதை: ஏ.ஆர்.முருகதாஸ்

ஒளிப்பதிவு: கே.ஏ.சக்திவேல்

படத்தொகுப்பு: எம்.சுபாரக்

இசை: சி.சத்யா

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா (டி ஒன்)

0a1d

’பொன்னியின் செல்வன்’ படத்தில் ‘இளவரசி குந்தவை’யாக வந்து கம்பீரம் காட்டி பார்வையாளர்களின் உள்ளத்தை அள்ளிய த்ரிஷா, “அச்சமில்லை, அச்சமில்லை, அச்சம் என்பதில்லையே” எனும் விதமாய் நெஞ்சுரம் மிக்க பெண் பத்திரிகையாளராக வந்து அதிரடி ஆக்சனில் கலக்கியிருக்கும் நாயகி மையத் திரைப்படம் ‘ராங்கி’.

‘தேர்ட் ஐ’ என்ற தனியார் இணையதளப் பத்திரிகையில் செய்தியாளராக பணியாற்றுகிறார் தையல் நாயகி (த்ரிஷா). அவரது அண்ணனின் மகள் 16 வயது சுஷ்மிதா (அனஸ்வரா ராஜன்). பள்ளி மாணவியான சுஷ்மிதா பெயரில் போலி முகநூல் கணக்கு ஒன்று இயக்கப்படுகிறது. சுஷ்மிதாவை மோகிக்கும் ஓர் இளைஞன், அவளுக்கு முகநூல் மூலம் மிரட்டல் விடுக்கிறான். அவனையும், அவனைப்போல் முகநூல் வழியே ஜொள்ளு விட்ட ஏனையோரையும் நேரில் வரவழைத்து நையப்புடைத்து அனுப்புகிறார் துணிச்சல் மிக்க பெண் பத்திரிகையாளரான தையல் நாயகி.

அந்த ஜொள்ளர்களில் ஒருவனான ஆலிம் என்பவன் மட்டும் சிக்காமல் இருக்கிறான். அவனுடன் அந்த போலி கணக்கு மூலம் உரையாடத் தொடங்குகிறார் தையல் நாயகி. சுஷ்மிதா என நினைத்து அவனும் பேசிக்கொண்டிருக்கிறான். அவன் எண்ணைவளம் மிக்க லிபியா நாட்டின் புரட்சிப்படை போராளி என்று தெரிகிறது. மேலும், அவன் சுஷ்மிதாவை உண்மையாக காதலிக்கிறான் என்பதும், அவனுடைய காதலில் உண்மையும், நேர்மையும் இருக்கிறது என்பதும்கூட தெரிய வருகிறது.

இந்நிலையில், லிபியாவின் எண்ணை வளத்தைச் சூறையாட விரும்பும் வல்லரசு நாட்டுப் படைகள், தையல் நாயகியையும், சுஷ்மிதாவையும் பகடைக் காயாக்கி போராளி ஆலிமை கொல்ல திட்டம் தீட்டுகின்றன. அந்த கொலைத் திட்டம் என்ன ஆனது? போராளி ஆலிமின் எல்லை தாண்டிய உண்மைக் காதல் என்ன ஆனது? வல்லாதிக்க சதிவலையிலிருந்து தையல் நாயகியும், சுஷ்மிதாவும் தப்பினார்களா? என்பது ‘ராங்கி’ படத்தின் மீதிக்கதை.

0a1c

’ராங்கி’ என்ற சொல்லுக்கு பேச்சு வழக்கில் ’அடங்காப்பிடாரி’, ‘திமிர் பிடித்தவர்’ என பொருள் இருந்தாலும், ‘துணிச்சல் மிக்கவர்’ என்ற உயரிய பொருளில் தான் இத்தலைப்பு இப்படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. அந்த தலைப்புக்கு ஏற்ற துணிச்சலான பெண் பத்திரிகையாளர் தையல் நாயகியாக வருகிறார் த்ரிஷா. நடை உடை பாவனைகளில் துணிச்சல் ,உடல்மொழியில் ஓர் அலட்சியம், காவல்துறையுடன் அநாயசமான மோதல் என த்ரிஷாவுக்குப் பெருமை சேர்க்கும் காட்சிகள் நிறைய இருக்கின்றன. புல்லட்டில் அவர் பயணிப்பது அருமை. லிபியாவில் நடைபெறும் துப்பாக்கிச் சண்டைக்கு நடுவில் த்ரிஷாவின் சிறப்பான செயல்கள் அவரை முழுமையான ஆக்‌ஷன் நாயகியாக ஆக்கியிருக்கின்றன.

த்ரிஷாவின் அண்ணன் மகள் சுஷ்மிதாவாக வரும் அனஸ்வரா ராஜனின் அப்பாவித்தனம் அந்த கதாபாத்திரத்துக்கு பலம். தன்னை மையமாக வைத்து என்ன நடக்கிறது என்பதை கடைசிவரை உணராத அவரது பாத்திர வடிவமைப்புக்கு அவர் பொருத்தமாக நடித்து, நியாயம் செய்திருக்கிறார்.

லிபியா நாட்டு புரட்சிப்படை போராளி ஆலிம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் உஸ்பெகிஸ்தான் நடிகர் தரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருடைய உரையாடல்கள் ஆதிக்கவெறி பிடித்த அமெரிக்காவின் அடாவடித்தனம், எண்ணை வளம் மிக்க லிபியாவின் இன்றைய துயர நிலை, லிபியாவின் பிரபலமான அதிபராக இருந்த கடாபி கொல்லப்பட்டது எப்படி என்பன போன்ற ஆழமான விசயங்களைச் சொல்லிச் செல்கின்றன.

காவல்துறை அதிகாரியாக வரும் ஜான் மகேந்திரன் கவனம் ஈர்க்கிறார். நல்வரவு.

நவீன தொழில்நுட்பம் காரணமாக சமூக ஊடகங்களால் இளம்பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை, சர்வதேச எண்ணை வள அரசியலோடு தொடர்புபடுத்த முடியும் என்பதே நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. ஆனால் இந்த இரண்டையும் கற்பனையில் தொடர்புபடுத்தி, சுவாரசியமாக முடிச்சுப் போட்டு, அருமையாக கதை எழுதியிருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். அதற்கு கச்சிதமான இரண்டு மணி நேரத் திரைக்கதையை அமைத்து, ஆங்காங்கே மிகக் கூர்மையாக சுரீரென தைக்கும் வசனங்களையும் எழுதி, நேர்த்தியாக இயக்கியிருக்கிறார் எம்.சரவணன். பாராட்டுகள்.

சத்யாவின் பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது. சக்திவேலின் ஒளிப்பதிவும், சுபாரக்கின் படத்தொகுப்பும் கதையின் தன்மைக்குப் பொருத்தமாக அமைந்திருக்கின்றன.

“எங்கள் நாட்டு வளம்தான் என்னையும் என் தலைவனையும் கொன்றது. உங்கள் நாட்டிலும் நிறைய வளங்கள் உள்ளன. எச்சரிக்கையாக இருங்கள்..” என்பதே இந்த உலகுக்கு லிபிய போராளி ஆலம் விட்டுச்செல்லும் கடைசி செய்தி. உலகச் சண்டியரான அமெரிக்காவுக்கு எதிராக வளரும் நாட்டினரான நமக்கு ‘ராங்கி’ படம் சொல்லும் மிக முக்கியச் செய்தியும் அது தான்.

‘ராங்கி’ – அவசியம் பார்த்து ரசிக்க வேண்டிய கருத்தாழம் மிக்க ஆக்சன் படம்!